Thursday, November 14, 2013

தமிழர்களுக்குத் தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை


தமிழர்களுக்குத் தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை: ராஜபக்சே பேட்டி

இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வரும் காமன்வெல்த் மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வெளி நாட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கையில் ராணுவம் வாழ்வா, சாவா என்ற நிலையில்தான் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தியது. போர் முடிந்து தற்போது அமைதி நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் குண்டு வெடிப்பு எதுவும் இல்லை.

என்றாலும் இலங்கையை பிரித்து விட வேண்டும் என்று சில சக்திகள் முயற்சிகள் செய்கின்றன. இலங்கையை ஒரு போதும் பிரிக்க முடியாது. தமிழர்களுக்கு தனி நாடு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

30 ஆண்டுகளாக மனித உரிமை மீறலால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்தது. 2009–ம் ஆண்டுக்கு பிறகு குடிமக்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை. விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் இங்கு நேரில் வந்து நிலையை அறியலாம்.

இலங்கையில் இருந்து சென்று வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். அவர்கள் இலங்கைக்கு திரும்ப வருமாறு அழைக்கிறேன். உலக நாடுகளிடம் நாங்கள் எதையும் மறைக்கவில்லை.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஒரு பேச்சு உள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் யார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

மனித உரிமைகள் தொடர்பாக எங்களிடம் எந்த ரகசியமும் இல்லை. திறந்த புத்தகத்துடன் இருக்கிறோம்.

இவ்வாறு மகிந்த ராஜ பக்சே கூறினார்.

தந்தி டி.வி.க்கு அளித்த பதில்

சர்வ தேச பத்திரிகையாளர்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் ‘‘தந்தி டிவி’’ சார்பில் சிறப்பு நிருபர் கலந்து கொண்டு ராஜபக்சேவிடம் இரண்டு கேள்விகளை கேட்டார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாதது உங்களுக்கு ஏமாற்றமாக உள்ளதா?

ராஜபக்சே பதில்:– இல்லை. பிரதமர் மன் மோகன்சிங் பெர்த் நகரில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கூட கலந்து கொள்ளவில்லை.

பிரதமர் மன்மோகன்சிங் இங்கு வராவிட்டாலும் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி இங்கு இருக்கிறாரே. இதுவே எனக்கு திருப்திதான்.

கேள்வி:– தமிழர்களின் மன உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் வகையில்தான் பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:– அதுபற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. இந்தியா சார்பில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்திலும் அது தொடர்பாக எதுவும் குறிப்பிடப் படவில்லை.

இவ்வாறு தந்தி டிவிக்கு ராஜபக்சே கூறினார்.                                    

நன்றி :- மாலை மலர் -14-11-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.