Tuesday, November 26, 2013

சங்கரராமன் கொலைவழக்கில் நாளை தீர்ப்பு

 புதுச்சேரி : புதுச்சேரி கோர்ட்டில் சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு நாளை (27ம் தேதி) வழங்கப்படுவதை முன்னிட்டு, கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கொலைத்தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள் தரப்பில் இடம் பெற்றிருந்த ரவி சுப்ரமணியன், அப்ரூவராக மாறி, செங்கல்பட்டு கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2009ம் ஆண்டு முதல் புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வந்தது.

புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில், சங்கராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்தசர்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்ட 371 சாட்சிகள் போலீசாரால் சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு சம்பந்தமாக சேர்க்கப்பட்ட 187 சாட்சிகளிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அப்ரூவர் ரவி சுப்ரமணியன் உள்ளிட்ட 83 பேர் "பல்டி' அடித்துவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, 6 வது எதிரியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கதிரவன்(40) என்பவர் கடந்த மார்ச் மாதம் சென்னை கே.கே.நகரில் காரில் வரும் போது வன்முறைக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர்.

ஆரம்பத்தில் இந்த வழக்கை, நீதிபதி சின்னபாண்டியன் விசாரித்தார். தொடர்ந்து, கிருஷ்ணராஜா, ராமசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். நான்காவதாக, நீதிபதி முருகன் விசாரணை நடத்தி வந்தார் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (27ம் தேதி) வழங்கப்பட உள்ளது.

இக்கொலை வழக்கில், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால், கோர்ட்டில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேர்களும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று, நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமலர், 26 - 11 - 2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.