Tuesday, November 26, 2013

100 வயதை நிறைவு செய்கிறது ரிப்பன் மாளிகை

 சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும், ரிப்பன் மாளிகைக்கு இன்றுடன், 100 வயது நிறைவடைகிறது. புனரமைப்புப் பணிகள் முடியாததால், நூற்றாண்டு விழா திட்டமிட்டபடி நடைபெறவில்லை.


சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, ரிப்பன் மாளிகை, கடந்த, 1909ம் ஆண்டு கட்ட துவங்கி, 1913ம் ஆண்டு முடிக்கப்பட்டது.மூன்று தளங்கள் கொண்ட இந்த மாளிகையின் மொத்த பரப்பளவு, 25 ஆயிரம் சதுரடி. மாளிகை 252 அடி நீளமும், 126 அடி அகலமும், மாளிகைக்கு அழகு சேர்க்கும் கடிகார கோபுரம் 132 அடி உயரமும் கொண்டவை. கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம், 8 அடி விட்டம் உடையது.

மெட்ராஸ் டெரஸ் கூரை:

இந்திய - ரோமானிய கட்டட கலை வடிவமைப்பு கொண்ட ரிப்பன் மாளிகையில், வெப்பத்தை உள்வாங்காத வகையிலான மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது.செங்கல், சுண்ணாம்பு, மணல், கடுக்காய் தண்ணீர், வெல்லம் கலந்த கலவையில் அந்த கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது.இதில், ஒவ்வொரு தளத்திலும், ராட்சத இரும்பு உத்தரங்கள் பொருத்தப்பட்டுஉள்ளன. அதன் மேல் நெருங்கிய இடைவெளியில், தேக்குமர கட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மரத்திற்கு மேல் செங்கல், சுண்ணாம்பு கலவை கலந்த கலவையில் தளம் அமைக்கப்பட்டுள்ளது.தரைதளத்தில் கடப்பா கல் மூலம் தரை அமைக்கப்பட்டது.


இந்த மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர், சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார். நான்கு ஆண்டுகாலம் கட்டப்பட்ட இந்த மாளிகைக்கு அப்போது ஆன செலவு 7.5 லட்சம் ரூபாய். லோகநாத முதலியார் 5.5 லட்சம் ரூபாய் மட்டுமே இதற்காக பெற்றுக் கொண்டார். மாளிகை கட்டுமானத்தின் போது சி.எல்.டி.கிரிபித், ஜெ.இ.ஹென்ஸ்மேன், இ.பி.ரிச்சர்டு, ஜேம்ஸ் ஆர்.கோட்ஸ் ஆகிய நான்கு பொறியாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.

அப்போதைய வைஸ்ராய், சார்லஸ் பரோன் ஹார்டின்ஜ், மாளிகையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலும், உள்ளாட்சி அமைப்பு முறையை உருவாக்கியவருமான ரிப்பன் பிரபுவின் பெயர் மாளிகைக்கு சூட்டப்பட்டது.அந்த ரிப்பன் மாளிகைக்கு இன்றுடன் 100 வயது பூர்த்தியாகிறது. அதை முன்னிட்டு நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மாளிகையை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

தொழில்நுட்ப குழு தேர்வு:

முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், தற்போது 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.இன்று நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், பணிகள் முடியாததால், விழாக்கோலம் பூண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மாளிகையின் வெளிப்புறத்தில், பின்பக்கத்தை தவிர மற்ற பகுதிகளில் பணிகள் முடிந்துள்ளன. கோபுரம் சீரமைப்பு பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளன. கடிகாரம் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.மாளிகைக்கு பூச வேண்டிய வெள்ளை நிறத்தை,
தொழில்நுட்பக் குழு தேர்வு செய்துள்ளது.

இனி தான் இதற்கான பணிகள் துவங்கப்படும்.பழைய பொலிவுடன் வெள்ளை மாளிகையாக, அந்த மாளிகை மாற, இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பது அதிகாரிகளின் கணிப்பு. அதன் பிறகே நூற்றாண்டுவிழா பற்றி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி சுண்ணாம்பு!

ரிப்பன் மாளிகை புனரமைக்கும் பணிகளுக்கு பொள்ளாச்சியில் இருந்து சுண்ணாம்பு வாங்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு கல் பெரிய தொட்டியில் ஏழு நாட்கள் ஊற வைக்கப்படுகிறது. இதில், கல் மற்றும் திப்பிகள் தொட்டிக்கு அடியில் தங்குகின்றன. சுண்ணாம்பு மாவு மேல் பரப்பில் இருக்கும். அது தனியாக எடுக்கப்படுகிறது. அதன் பிறகு தொட்டியின் அடியில் உள்ள திப்பிகள், மணலுடன் கலந்து கிரைண்டரில் அரைக்கப்பட்டு, பூச்சு வேலைக்கு பயன்படுத்தப்படுகிறது.இது கட்டடத்தின் முதல் பூச்சுக்கும், தொட்டியில் இருந்து மாவு வடிவில் எடுக்கப்பட்ட சுண்ணாம்புடன் மணல் கலந்து, மிக்சியில் அரைத்து, பேஸ்ட் வடிவிற்கு கொண்டு வந்து இரண்டாவது பூச்சுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.