மதுரை மாவட்ட கிராமங்களில் பண்டமாற்று முறை இப்போதும் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 11 ஆயிரம் ஏக்கரில் தற்போது முக்கால்வாசி இடங்களில் நெல் அறுவடை செய்யப்பட்டுவிட்டது. எஞ்சிய பகுதிகளில் தொடர்ந்து அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிறு வியாபாரிகள் சிலர் ஆட்டோ, மினி வேன்களில் சென்று கிராமங்களில் பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றியங்களில் காலையிலேயே இதுபோன்ற வாகனங்களில் வரும் வியாபாரிகள், ஒலி பெருக்கிகள் மூலம், ஒரு படி நெல்லுக்கு ஒண்ணரை படி உப்பு... அம்மா வாங்க... அய்யா வாங்க... புளியங்கொட்டை கொடுத்தும் உப்பு வாங்கிக்கலாம். கடையில் ஒரு கிலோ பொடி உப்பை 15 ரூபாய்க்கு விற்கிறான். நாங்க பொடி உப்பை படி 6 ரூபாய்க்குத் தர்றோம். வாங்கம்மா வாங்க” என்று கூவுகிறார்கள்.
உடனே, சில பெண்கள் வீட்டில் இருந்து ஒரு படி நெல்லைக் கொண்டுவந்து கொடுத்து, பண்டமாற்று முறையில் உப்பைப் பெற்றுக் கொள்கின்றனர். புளியங்கொட்டை, வேப்பங்கொட்டையைச் சேகரித்து வைத்திருக்கும் மூதாட்டிகளும் ஆர்வமாக வந்து உப்பு வாங்கிச் செல்கின்றனர். அடுத்த சில மணி நேரத்தில், மற்றொரு வேன் வருகிறது.
பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு: உங்கள் வீட்டில் உள்ள அரசு டி.வி. எந்த நிலையில் இருந்தாலும் சரி, அதைப் பெற்றுக்கொள்ள உங்கள் வீடு தேடி வந்திருக்கிறோம். ஓடாத, பரண் மேல் வீசப்பட்ட டி.வி.களையும் 250 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.
வாங்கம்மா... வாங்க... இந்த வாய்ப்பைத் தவற விட்டால், இரும்புக் கடையில் 25 ரூபாய்க்குக்கூட விற்க முடியாது என்று என்னமோ அரசின் நேரடி ஊழியரைப் போல உரிமையாகக் கேட்கின்றனர். பொதுமக்களும் டி.வி.யைக் கொடுத்துவிட்டு காசு வாங்கிச் செல்கின்றனர்.
டி.வி. வாங்கிய வியாபாரியிடம் கேட்டபோது, கடந்த ஆட்சியில் அரசு வழங்கிய டி.வி.யை டெண்டர் எடுத்து, டி.வி. தயாரித்துக் கொடுத்த நிறுவனங்களின் சார்பில், மதுரையில் ஒருவர் பழைய டி.வி.களை கொள்முதல் செய்து கொண்டிருக்கிறார்.
அதைத் திரும்ப கம்பெனிக்கே கொடுக்கப் போவதாகச் சொன்னார்.
250 ரூபாய்க்கு பொதுமக்களிடம் இருந்து டி.வி.யை வாங்கி அவரிடம் கொடுத்தால், ஒரு டி.வி.க்கு ரூ.500 வரை தருவார். அதனால் வாங்குகிறோம். காசுக்குப் பதில் பொருளாகத் தந்தால் நல்லாயிருக்கும் என்று கேட்கிறார்கள். எனவே, நாளை முதல் ஒரு டி.வி.க்கு ஒரு பிளாஸ்டிக் சேர் கொடுக்கலாம் என்று யோசித்திருக்கிறோம் என்றார்.
தி இந்து
0 comments:
Post a Comment
Kindly post a comment.