திருவொற்றியூரில் நான்கரை ஏக்கர் காதி நிலம் மீட்பு
கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான ரூ.75 கோடி மதிப்புள்ள 4.50 ஏக்கர் நிலத்தை போலீஸார் உதவியுடன் கதர் கிராமத் தொழில் வாரிய அதிகாரிகள் குத்தகைதாரர்களிடமிருந்து மீட்டனர்.தமிழ்நாடு காதி கிராம தொழில்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரீட் மரத்தொழில் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் திருவொற்றியூரில் உள்ளது. இங்கு மர இருக்கைகள், கட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு மரச்சாமான்கள் செய்து பல்வேறு அரசு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இக்கூட்டறவு சங்கம் படிப்படியாக நலிவுற்றது. இதனையடுத்து இச்சங்கத்தைக் கலைத்து விடவும் சங்கத்திற்கு சொந்தமான நிலங்களை குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விடுவதெனவும் கதர் கிராமத் தொழில் வாரியம் முடிவு செய்தது.
இந்நிலையில் சுமார் 4.5 ஏக்கர் நிலம் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆர்.லோகநாதன் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்திற்கு ஜூன், 2002 -இல் 11 ஆண்டுகள் குத்தகைக்கு அளிக்கப்பட்டது. ஒப்பந்தக் காலம் கடந்த ஜூன் மாதமே முடிவடைந்த நிலையில் மீண்டும் உரிமத்தைப் புதுப்பித்துத் தருமாறு இந்நிறுவனம் கோரியது. ஆனால் குத்தகையைப் புதுப்பிக்க காதி வாரியம் மறுத்துவிட்டது.
மேலும் உடனடியாக அந்த இடத்தைக் காலி செய்து ஒப்படைக்கும்படி லோகநாதன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும் அந்த நிறுவனத்திடம் இருந்து உள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை நோட்டீசுகள் அனுப்பப்பட்டன.
இதனை எதிர்த்து உள்குத்தகைதாரர்களில் ஒருவரான எல்.சிவகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு வழக்குப் தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சிவகுமாரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் 4.5 ஏக்கர் நிலத்தை உடனடியாக காதி வாரியம் வசம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
இந்நிலையில் திருவொற்றியூர் உதவி ஆணையர் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸ் படையுடன் புதன்கிழமை சென்ற காதி கிராம தொழில் வாரிய அதிகாரிகள் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் அதிரடியாக ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையை எதிர்பாராத உள்குத்தகைதாரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்ததால், வாரியத்துக்குச் சொந்தமான வளாகத்தை அதிகாரிகள் அதிரடியாக மூடி சீல் வைத்தனர்.
போலீஸார் உதவியுடன் கதர் கிராம தொழில் வாரிய நிலத்தை மீட்கும் அதிகாரிகள்.
நன்றி ;- தினமணி , 28 - 11 - 2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.