Monday, November 18, 2013

எனது கருத்துகள் ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டுள்ளன

jairam_1655883h 
ராகுலை மன்னிப்பு கேட்க சொல்லவே இல்லை: ஜெய்ராம் ரமேஷ்
முஸ்லிம்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என நான் சொல்லவே இல்லை என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம், முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள சில இளைஞர்களுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.வுடன் தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதுதொடர்பாக அவர் கடந்த வாரம் ஆணையத்திடம் பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை சனிக்கிழமை சந்தித்த உருது நாளிதழ்களின் செய்தியாளர்கள், ராகுல் காந்தியின் பேச்சு முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தனர்.

அவர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இந்த விவகாரத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் ராகுல் பேசவில்லை. எனினும் அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.

காங்கிரஸ் நழுவல்…

அமைச்சரின் கருத்து குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சலிடம் நிருபர்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அப்சல், அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என்ன கூறினார் என்பது எனக்குத் தெரியாது. அவர் என்ன கூறியிருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்து இல்லை என்றார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. எனது கருத்துகள் ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டுள்ளன என்றார்.

பாஜக வலியுறுத்தல்…

இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் டெல்லியில் நிருபர்களிடம் பேசியபோது, முஸ்லிம்களின் உணர்வுகளை ராகுல் காந்தி காயப்படுத்தியுள்ளார். இப்போதே அவர் அந்த சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

தி இந்து, 18-11-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.