மதுரை: தென்னிந்தியாவின் மழை நீர் ஆதாரமாக
அமைந்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலை. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், கோவா,
மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் ஆயிரத்து 600 கிமீ தூரம் 1
லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டர் பரந்து விரிந்துள்ளது. இதனை
உலக பாரம்பரிய சின்னமாக ஐநா.வின் யுனஸ்கோ கடந்த ஆண்டு அறிவித்துள்ளது.
அற்புதமான இந்த மலையின் வளத்தை காக்கவும், அதன் பாரம்பரியம் குன்றி விடாமல்
காக்கவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுத்து அமலாக்க
வேண்டுமென மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி
கஸ்தூரிரங்கன் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்
கொண்டுள்ளது. விரைவில் அமலாக்கும் கட்டாயம் நெருங்கி உள்ளது. இதன் படி
மொத்த மலை தொடரில் 37% அதாவது 60 ஆயிரம் சதுர கிமீ சுற்றுச்சூழல்
பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறது.
இங்கு பெரிய கட்டுமான பணிகள், சுரங்கம்,
மணல் அள்ளுவது, குவாரிகள், டவுன்ஷிப் விரிவாக்கம் போன்ற பணிகள் தடை
செய்யப்படும். புதிய அனல் மின்நிலையங்களுக்கு அனுமதி கிடையாது. தற்போது
இயங்கி வரும் சுரங்கங்களில் 5 ஆண்டுகளுக்குள் பணிகளை நிறுத்த
வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கேரளாவிலுள்ள 123 கிராமங்கள்
அமைந்துள்ளன. அதில் 48 கிராமங்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ளன. இன்னும்
பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை ஆரம்பத்திலேயே
கேரளாவும், கர்நாடகமும் எதிர்த்தன. இந்த எதிர்ப்புகளை மத்திய அரசு
நிராகரித்து, குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதும் தற்போது கேரளாவில்
போராட்டங்கள் வெடித்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை 6 மாநிலங்களில்
அமைந்திருந்தும் கேரளா மட்டும் கடும் எதிர்ப்பை காட்டுவது ஏன் என்பது
குறித்த விவரம் வருமாறு:பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையமாகும் 60
ஆயிரம் சதுர கி.மீட்டரில், 11 ஆயிரம் சதுர கிமீ.க்கு மேற்பட்ட மலை தொடர்
கேரளாவில் அமைந்துள்ளது.
மலை தொடரில் அமைந்துள்ள 62 அணைகளில்
கேரளாவில் மட்டும் 31 அணை உள்ளது. 1975ம் ஆண்டுக்கு பிறகு மலையில் கட்டிய
அணை மற்றும் தடுப்பு அணைகளை தண்ணீர் செல்லும் சமவெளிக்கு இடமாற்றம்
செய்யவேண்டும். புதிய கட்டுமானங்கள் தடை விதிக்கப்படுவதால் முல்லைப்
பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்திற்கு பின்னடைவு
ஏற்படுகிறது.சபரிமலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுவாமி ஐயப்பன் கோயில்
1951ல் சிறிய அளவிலான பகுதியில்தான் இருந்தது. தற்போது கோயிலை சுற்றி
சுமார் 150 ஏக்கருக்கு மேல் பரந்து கட்டுமானங்கள் நிறைந்துள்ளன. இது
அனைத்தும் வனமாக இருந்து கோயிலுக்கு அளிக்கப்பட்டதாகும். கோயிலைச் சுற்றிக்
கூடுதல் இடங்களை வளைத்து விரிவாக்கம் செய்வதற்கும் கட்டுமான பணிகளுக்கும்
தடங்கல் ஏற்படும். இதுபோன்ற பல்வேறு பணிகளுக்கு முட்டுக்கட்டையாகிறது.
தென் மண்டல மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குழு தலைவர் அப்பாஸ் கூறியதாவது:1975க்கு
பிறகு மலையில் கட்டிய அணைகளை சமவெளி பகுதிக்கு மாற்றி கட்டவேண்டும் என்று
குழு பரிந்துரைத்திருப்பது கேரளாவுக்கு கடும் அச்சத்தை உண்டாக்குகிறது.
ஏனென்றால் இடுக்கி அணை 1969 முதல் 1976க்குள் கட்டப்பட்டதாகும். சிறுதோணி,
குளமாவு, சித்ராணம் அணைகளுக்கும் சிக்கல் ஏற்படும்.1956க்கு பிறகு
கேரளாவில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு
கட்டிடங்களாக, குடியிருப்புகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மரங்கள்
அழிக்கப்பட்டு பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இதுபோன்று கேரளாவின்
பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் திட்டம் முட்டுக்கட்டையாக அமையும்.
எனவே கேரளா எதிர்க்கிறது. இயற்கை எழிலுடன் மழை வளம் நிறைந்த மேற்கு
தொடர்ச்சி மலையைத் தேசிய பொக்கிஷமாக காக்கவேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.
நன்றி :- தினகரன், 18-11-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.