Friday, November 15, 2013

ரீ-மேக் திரைப்படங்களும், சிந்தனை வறட்சியும்

இந்தியைத் தொடர்ந்து தமிழில் பழைய திரைப்படங்களை ரீ-மேக் செய்யும் பழக்கம் ஏற்பட்டுவருகிறது. படங்களைத் தாண்டியும், பழைய திரைப்படப் பாடல்கள், பழைய படங்களின் பெயர்கள் என எல்லாமும் தமிழில் புதிய படங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில்தான் சினிமா எனும் கலைமீது தொடர்ந்து இத்தனை வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. வேறெந்தக் கலை வடிவிலும், இப்படிப் பழைய ஒன்றைப் புதிதாகச் செய்கிறோம் என்று யாரும் கிளம்பி வருவதில்லை. பழைய ஓவியங்களை யாரும் மீண்டும், புதிய பாணியில் வரைந்து கொண்டிருப்பதில்லை.

யாரும் பழைய சிறுகதைகளை, நாவல்களை மீண்டும் எழுத முனை-வதில்லை. மௌனி, கு.ப.ரா, லா.ச.ரா. போன்றவர்களின் கதையை இப்போது யாராவது மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்களா?

ஆனால் ஏன் தொடர்ச்சியாகத் திரைப்படங்கள் மீது மட்டும் இத்தகைய வன்முறை செலுத்தப்படுகிறது? காரணம் மிக எளிதானது. மேற்சொன்ன எந்தக் கலையும், அதன் வணிக எல்லையை சினிமா அளவிற்கு விரிவுபடுத்திக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் சினிமா, கலை என்பதைத் தாண்டி முழுக்க முழுக்க வியாபாரம் என்கிற எல்லையைத் தொட்டுவிட்டது.

எனவே எந்தப் பழைய சரக்கெல்லாம், புதிய பாணியில், புதிய உத்தியில், சொல்லப்பட்டால், புதிய தலைமுறை இளைஞர்களைக் கவரும் என்று தூசு தட்டப்பட்டு வருவதில் எந்த வியப்பும் இல்லை. ரீ-மேக் செய்வது ஒரு கலைதான் என்று யாராவது சொன்னால், ஏன் யாரும் வீடு திரைப்படத்தையோ, நண்பா நண்பா படத்தையோ ரீ-மேக் செய்வதில்லை என்கிற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

பழைய படங்களை ரீ-மேக் செய்வது என்பது இந்தச் சமூகத்தின், குறிப்பாகப் படைப்பாளிகளின் சிந்தனை வறட்சியைத்தான் காட்டுகிறது. ஆனால் இலக்கியம் படிப்பவர்களுக்கும், தொடர்ந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கும், எளிய மக்களைத் தொடர்ச்சியாகக் கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சிந்தனை வறட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை.

இந்த மொழியும், மாநிலமும் சந்தித்துவந்த மாற்றங்களும் அழுத்தங்களும் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டால்கூட அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வெவ்வேறு கதைக் களத்தில் புதிய திரைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வியாபாரம் செய்வதற்கு இத்தனை மெனக்கெட வேண்டுமா என்கிற சிந்தனையும், ஏற்கனவே எந்த வியாபாரம் வெற்றி பெற்று இருக்கிறது என்கிற வியாபாரத் தெளிவும் போதும் என்ற நினைப்பும்தான் இங்கே படைப்புக்கு விரோதமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றன.

தி இந்து-15-11-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.