Friday, November 15, 2013

சிறுகதைப் போட்டி - இறுதிநாள் - 26, டிசம்பர், 2013.



சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் நினைவுச் சிறுகதைப் போட்டி-2013-ஐ அவ்ராம் அமி தொண்டு நிறுவனம் மற்றும் அதிதி தொண்டு நிறுவனங்கள் நடத்தவுள்ளன.

தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை நல்கியவர் மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம். இவர், தமது 16-ஆவது வயதில் எழுதிய சிட்டுக்குருவி கதை மணிக்கொடியில் வெளியானது. கடந்த 1993-இல் இவரது "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருதும் கிடைத்தது. விக்ரஹநிவாசன் எனும் புனைப் பெயரில் ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ளார்.

எம்.வி.வெங்கட்ராம் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கு, மாற்றுத் திறனாளி மறுவாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'ஊனம் வைத்துப் பாகுபாடு, ஊருக்கு உதவா சாபக்கேடு' எனும் கருத்தை மையமாக வைத்துள்ளனர்.

இக்கருத்தை மையமாக வைத்து சொந்தக் கற்பனையில் சிறுகதை எழுதி, வி.ஆர். கணேஷ், நிர்வாக இயக்குநர், அன்னை திறனேற்றப் பயிற்சித் திண்ணை, 14, அய்யலு பாலுச்சாமி சந்து, தவிட்டுச்சந்தை, மதுரை-625 001. (செல்போன்: 9840911021) என்ற முகவரிக்கு 26.12.2013-ம் தேதிக்குள் அனுப்பிட வேணடும்.

கதையானது முழுநீள வெள்ளைத் தாளில் 4 அல்லது 6 பக்கமுள்ளதாகவும், கதையாசிரியரின் பெயர், முகவரி, தொலைபேசி அல்லது அலைபேசி எண் என முழுத் தகவல்களுடனும் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அளிக்கலாம். மொழிபெயர்ப்பு கதை, சிறுவர் கதைகள் ஏற்கப்பட மாட்டாது. வரும் ஜனவரி 14-ஆம் தேதி எம்.வி.வெங்கட்ராம் நினைவு நாள். ஆகவே, அன்று நடத்தப்படும் விழாவில் போட்டியில் முதலிடம் வகிக்கும் ஆண், பெண் எழுத்தாளருக்கு தலா ரூ.2,000, இரண்டாமிடம் வகிப்பவர்களுக்கு ரூ.1,000 என பரிசளிக்கப்படும். பங்கேற்போருக்கு சான்றுகள் வழங்கப்படும்.

இத்தகவலை 
அவ்ராம் அமி நிறுவனத் தலைவர் கே.தேவராஜ்
மற்றும் அதிதி டிரஸ்ட் வி.ஆர். கணேஷ் 
ஆகியோர் தெரிவித்துள்ளனர்.   

தினமணி, 15, நவம்பர், 2013                                             


0 comments:

Post a Comment

Kindly post a comment.