Tuesday, November 19, 2013

தஞ்சைத் தரணியில் தமிழர்கள் விடுத்த வேண்டுகோள் !


முள்ளி

தொன்மைச்சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் மிக்கத் தமிழினம் மிகப்பெரும் நெருக்கடியையும் அறைகூவலையும் எதிர்நோக்கியுள்ளது இலங்கையில் பூர்வீகக்குடியினரான ஈழத்தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனஅழிப்பு செய்து வருகிறார்கள்.

 தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன .தமிழர்களின் வாழ்வாதாரங்களும் பொருளாதாரமும் அழிக்கப்படுகின்றன.அவை சிங்களரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரப்படுகின்றது தமிழர் தாயகமண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு மனிதஉரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இந்தக் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக ஈழத்தமிழர்கள் 30ஆண்டுகாலம் அறவழியிலும் 30 ஆண்டுகாலம் மறவழியிலும் போராடினார்கள்.

கடந்த 60 ஆண்டுகாலத்தில் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழவழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஏதிலிகளாக உலகநாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.

உள்ளநாட்டில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்தும் ஊர்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்கள் தாயகமண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

இளம் பெண்கள் சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழர்கள் பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன.

சிங்களகுடியேற்றங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

சுருங்கக் கூறின் ஈழத்தமிழர்கள் ஒரு தனித்தேசம் என்பதையும் அவர்கள் இறைமை உள்ள மக்கள் என்பதையும் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பதையும் அடைளாயம் தெரியாமல் அழிக்கவேண்டும் என்பதே சிங்கள அரசின் நோக்கமாக இருந்து வருகிறது.

 இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் ஈழத்தமிழர்களின் பண்பாடு, வரலாறு, மொழி, வாழ்விடம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை அடியோடு துடைத்து அழிப்பதற்காக கட்டமைப்பு சார்இனஅழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழினம் அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கையில் தனித்துவம் பெற்ற தேசமாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு இன்று ஏற்பட்ட கதி நாளை மலேசியாவிலும், தென்னாபிரிக்காவிலும், பிற நாடுகளிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் ஏற்படலாம்.

எனவே தமிழகத்தில் ஏழு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்தும் நமக்கு மிக அண்மையில் உள்ள இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடிய அவலத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

அனைத்து தமிழர்களுக்கும் அரணாகவும் அவர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகத்தமிழர்களும் தொடர்ந்து ஒன்று பட்டு போராடவும் கை கோத்து நிற்க வேண்டும்.

இந்தியாவிலும் உலகநாடுகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் ஆகியோரை நம்முடன் இணைந்து குரல்கொடுக்க அவர்கள் அனைவரையும் நமக்கு ஆதரவாக ஒன்று திரட்டியாக வேண்டும்.

உலகத்தமிழர்கள் தமது கடமைகளையும் பொறுப்பபுகளையும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கிற அபாயங்களையும் உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும் என முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சியில் கூடியுள்ள தமிழர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் இதுவாகும்.

நன்றி :- தென் ஆசியச் செய்தி, நவம்பர், 16-30

0 comments:

Post a Comment

Kindly post a comment.