சோழர்களின் புலிக்கொடி
கம்பீரமாகப் பறந்த தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு எழுப்பியுள்ள
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மூன்றாண்டுகளாக எண்ணற்ற சிற்பிகள்,
கட்டிடக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் பேரில்
எழுப்பப்பட்டது. தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழர்களும் அள்ளித் தந்த
நிதியின் உதவியால் இது கட்டிமுடிக்கப்பட்டது.
ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த அனைத்துத் தேசிய இன மக்களும் போராடியபோது, பஞ்ச நதிகள் பாய்ந்தோடும் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேய இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குருதி தோய்ந்த மண்ணில் அவர்களுக்கான நினைவகம் இன்றும் நின்று நிலவுகிறது.
தமிழ்நாட்டில் முத்தமிழ் வளர்த்த மூதூர் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் நினைவகத்தில் காந்தியப் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிரிழந்த தளபதிகளுக்கும் படை வீரர்களுக்கும் சென்னையில் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. அந்நிய நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு நமது மண்ணில் நினைவுச் சின்னம் எதற்கு என யாரும் கேட்டதில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு இங்கே எதற்கு நினைவுச் சின்னம் என அதிகார வர்க்கம் கேட்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நினைவகங்களைப் போல முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் அமைக்கப்பட்டுள்ளது. தியாகவடிவமாக எழுந்து நிற்கும் பெருமைக்குரிய இந்தப் புனிதமான நினைவு இல்லத்தை திறக்கவிடாமல் தடுக்க இந்திய அரசும் தமிழக அரசும் முயற்சிகளை மேற்கொண்டன.
தனிநபர்கள் சிலரைக் கொண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நினைவு இல்லத்தை அடியோடு தகர்க்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னணியில் தமிழக காவல்துறை நின்றது. வேறுபலரும் திறப்பு நிகழ்ச்சியினை நடைபெறவிடாமல் தடுக்க திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டனர்.
நவம்பர் 3ஆம் தேதி அன்று தில்லியில் இருந்து இந்திய அரசின் உயர் அதிகாரிகள் தமிழக அரசுக்கு கொடுத்த நிர்பந்தத்தை எதிர்த்து நிற்க திராணியில்லாமல் அது பணிந்தது. நவம்பர் 4ஆம் தேதியன்று தஞ்சையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பந்தலுக்குச் சென்று அதைப் பிரிக்க வேண்டும் என மிரட்டினார். எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் பந்தலைப் பிரிக்க முடியாது என நமது தோழர்கள் மறுத்தனர்.
நவம்பர் 5ஆம் தேதியன்று நிகழ்ச்சியை நடத்த உயர்நீதி மன்றத்தின் அனுமதியைப் பெற்றோம். இந்த வழக்கில் நமக்காக மூத்த வழக்கறிஞர் விஜயன் அவர்கள் வாதாடி வெற்றி பெற்றுத் தந்தார்கள். ஆனால் அந்த தீர்ப்புக்கு தடை வாங்கும் வெறியுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் மதுரைக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன், உடனடியாக முடிவெடுத்து செயல்படவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எனவே பத்திரிகையாளர்கள், உள்ளூரிலிருந்த தோழமைக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட நவம்பர் 8ஆம் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே நவம்பர் 6 அன்று நண்பர் ம. நடராசன் அவர்கள் தலைமையில் உணர்ச்சிப் பாவலர் காசிஆனந்தன் உலகத் தமிழர் கொடியை ஏற்றிவைத்தார். முற்றத்தை நான் திறந்து வைத்தேன். நிகழ்ச்சி இனிது நடந்தேறியது.
இந்தச் செய்தியறிந்தவுடன் காவல்துறை அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். கிடுகிடுத்துப்போனார்கள்.
இதைத் தொடர்ந்து நவம்பர் 8,9,10 ஆகிய நாட்களில் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தேறின. அழைக்கப்பட்ட தலைவர்களும் தமிழறிஞர்களும் கவிஞர்களும் திரைப்படக் கலைஞர்களும் கலந்துகொண்டு உரையாற்றிச் சிறப்பித்தனர்.
முதல் இரண்டு நாட்கள் நிகழ்ச்சி முடிந்தபிறகு 10ஆம் தேதியன்று அதிகாலையில் 3 மணிக்கு காவல்துறையினர் பந்தலுக்குள் நுழைந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஒலிபெருக்கி உரிமையாளரையும் அவருடைய துணைவரையும் கைது செய்தனர்.
பந்தலில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளை சட்டவிரோதமான முறையில் பறிமுதல் செய்து அகற்றினர். இதற்கு அவர்கள் சொன்ன ஒரே காரணம் முதல் நாளில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டத்தில் பேசியதுதான்.
சட்டப்படி இது தவறாக இருந்தாலும் அதற்கு அபாரதம் விதிக்க முடியுமே தவிர ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் கிடையாது. எப்படியேனும் இந்த நிகழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக காவல்துறை இதைச் செய்தது.
உடனடியாக செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளை எச்சரித்தேன். பிறகு நமது தோழமைக் கட்சித் தலைவர்கள் சென்று உயர் காவல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதின் விளைவாக பகல் 12 மணிக்கு மேல் அனுமதி கிடைத்தது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட ஒலிபெருக்கிகளைத் திருப்பித் தரவில்லை.
உடனடியாக வேறு ஒலிபெருக்கிகளை கொண்டுவந்து பொருத்தி நிகழ்ச்சிகளை இடைவேளையில்லாமல் தொடர்ந்து நடத்தி முடித்தோம்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற திறப்பு நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடத்தப்பட்டதைவிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரைசாரையாக வந்து இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டது நெஞ்சத்தை நெகிழவைப்பதாகும். குறிப்பாக திரளான பெண்கள் கலந்து கொண்டது முக்கியமானதாகும்.
நிகழ்ச்சி நடைபெற்ற பந்தலுக்குள் மக்கள் நிரம்பி வழிந்ததைப் போலவே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் மக்கள் நிரம்பி வழிந்தார்கள். நிகழ்ச்சி முடிவுற்ற மறுநாளும் அதைத் தொடர்ந்தும் மக்கள் திரள் முற்றத்தில் அலைமோதியது தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும்.
தமிழகமெங்கும் மட்டுமல்ல, தமிழீழத்திலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வேறுபல நாடுகளிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் யாருக்கும் எதிரானது அல்ல.
இது மக்களால் கட்டப்பட்ட மக்கள் சொத்தாகும். இந்த முற்றம் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் மையம் அல்ல. நாடெங்கும் இருக்கக்கூடிய தமிழ் உணர்வாளர்கள் சாதி, மதம், கட்சி பேதங்களை மறந்து அங்கு கூடினர். தங்களுடைய கட்சி உணர்வுகளை பந்தலுக்கும் முற்றத்திற்கும் வெளியே வைத்துவிட்டு தமிழர்களாக உள்ளே வந்தனர். நெகிழ்வுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி குறிப்பிட்டதொரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. இம்முற்றம் அனைத்துத் தமிழர்களுக்கும் சொந்தமானது. எத்தகைய வேறுபாட்டிற்கும் இடமில்லை என்பதே அந்த உண்மையாகும்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு யார் காரணமோ அவர்களையும் அவர்களுக்குத் துணை நின்றவர்களையும் தவிர மற்ற அனைவரையும் திறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்தோம் என நான் அறிவித்தபடி அனைவரையும் அழைத்தோம்.
தமிழர் வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவருமே விரும்பினர். எனவே யாரையும் தவிர்க்க நான் விரும்பவில்லை.
தமிழர்களின் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழியாத முத்திரையைப் பொறிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. இதே தஞ்சை மண்ணில் பேரரசனான இராசராசன் எழுப்பிய கலைக்கோயில் அவனது வெற்றிகளின் பெருமித சின்னமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எழுந்து நிற்கிறது.
ஆனால், உலகத் தமிழர் பேரமைப்பு எழுப்பியுள்ள இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களின் அவலத்தின் அடையாளமாகும்.
இன்றைய இளைய தலைமுறையினரும் எதிர்காலத் தலைமுறையினரும் இந்த முற்றத்தைப் பார்வையிடும்போது நமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணி எண்ணி உள்ளங்களில் சினத் தீயாகப் பதிய வைக்கவேண்டும்.
இந்த அவலத்திற்குக் காரணமானவர்கள் யாரோ அவர்களைச் சுட்டெரிக்கும்வரை இந்த சினத்தீ அணையக்கூடாது. அணையவிடவும் கூடாது. இந்த நோக்கத்திற்காகத்தான் இந்த நினைவு முற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் இதை தடுக்க வேண்டும், தகர்க்க வேண்டும் என்ற தீய சிந்தனைகளுடன் செயல்படுபவர்களை தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். இந்த முற்றம் தமிழர்களின் சொத்தாகும்.
இதற்குத் தீங்கு செய்ய முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களால் புறக்கணிக்கப்படுவார்கள். மக்களும் அவர்களை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என எச்சரிக்கை செய்கிறேன்.
மக்களால் உருவாக்கப்பட்ட இந்த புனித முற்றம் யாராலும் அழிக்கப்படாமல் காலத்தை வென்று நின்று நிலைக்கும்.
நன்றி ;- தென் ஆசியச் செய்தி, நவம்பர், 16-30
NENJILAE URAMMUM NEETHIYUM ILATHA MANITHANIN SEYAL ITHU.
ReplyDeleteNENJINILAE URAMUM NEETHIYUM ILATHA MANITHANUDA SEYAL THAN INTHA MUTRATHAI IODITHU ULARGAL.
ReplyDelete