Thursday, November 28, 2013

சாலையைவிட வீடு பள்ளமா ? உதவுகிறது ஹைடிராலிக் தொழில்நுட்பம் !

பள்ளத்திளிருந்து  உயர்த்தப்படும் வீடு
 உயர்த்த உதவும் ஹைடிராலிக்கருவி
வீட்டின் உரிமையாளர் இந்திரா நகர் தாசன்

திருவள்ளூர் அருகே பள்ளத்தில் இருக்கும் வீட்டை எவ்வித சேதமும் இல்லாமல் நவீன தொழில்நுட்பத்துடன் உயர்த்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சர்யத்துடனும், ஆர்வமுடனும் பார்த்துச் செல்கின்றனர்.

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தசரதன். இவருக்கு அப்பகுதியில் சுமார் ஆயிரம் சதுர அடி கொண்ட ஒரு வீடு சொந்தமாக உள்ளது. வீடு அமைந்துள்ள சாலை சிறிதாக சிறிதாக உயர்த்தப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டதால் அவரது வீடு சாலையை விட தாழ்வாகியது.

இதனால் மழை நீர், கால்வாய் கழிவு நீர், சாலையில் இருந்து வரும் மண் ஆகியவை வீட்டுக்கு வந்ததது. இதனால் தசரதனும் அவரது குடும்பத்தாரும் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து புதிய தொழில்நுட்பத்துடன் எவ்வித சேதமும் இல்லாமல், இருக்கும் வீட்டை சில அடி தூரம் உயர்த்தி அமைத்துத் தரும் நிறுவனம் இருப்பதை அறிந்த தசரதன், அந்நிறுவனத்தை அணுகி, தன்னுடைய வீட்டை சுமார் 5 அடிக்கு உயர்த்தி வருகிறார்.

÷இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் பலரும் அங்கு வந்து, வீட்டை உயர்த்தும் பணியை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து தசரதன் கூறியது: நான் ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு என் விருப்பத்திற்கேற்ப இந்த வீட்டை கட்டினேன். நாளடைவில் வீடு தாழ்வாக சென்றதால் பல இன்னல்களை சந்தித்தேன். ஆனால் வீட்டை இடிக்கவும் மனமில்லை.

இந்த நிலையில் எவ்விதச் சேதமும் இன்றி வீட்டை உயர்த்தி அமைக்கும் நிறுவனம் சென்னையில் இருப்பதை அறிந்து அவர்களை அணுகி வீட்டை உயர்த்தி வருகிறேன். அவர்கள் சதுர அடிக்கு ரூ. 250 கட்டணமாக கேட்டனர்.

மேலும் பணியின்போது வீடு சரிந்தாலோ, விரிசல் ஏற்பட்டாலோ அதற்கு அந்த நிறுவனமே பொறுப்பு என்றும் எனது வீட்டை தூக்கி நிறுத்த 45 நாள்கள் பிடிக்கும் என ஒப்பந்தம் போடப்பட்டு இப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை இப்பணி எனக்கு திருப்திகரமாக உள்ளது என்றார்.

இதுகுறித்து பணியை மேற்கொண்டு வரும் நிறுவன மேலாளர் தணிகைமணி கூறியது: வீட்டின் உள்புறத்தில் தாய் சுவர் எனப்படும் முக்கிய சுவற்றை ஒட்டி 2 அடி ஆழத்துக்கு பள்ளம் எடுத்து அங்கிருந்து சுவற்றை உடைத்து அதில் எங்களது உபகரணங்கள் மூலம் செங்கல், சிமென்ட், மணல் கலவை மூலம் உயர்த்துவோம்.

எங்கள் நிறுவனம் முதன் முதலில் சென்னையில் ஒரு பாலத்தை உயர்த்தி அமைத்தது. அதன் பின்னர் வீடுகளை உயர்த்த ஆரம்பித்து இதுவரை சென்னை ஆவடி, அம்பத்தூர், கேளம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட மற்றும் தமிழகம் முழுவதும் 140 வீடுகளை உயர்த்தி அமைத்துள்ளோம். இதுவரை எந்த வீடும் சேதமடைந்ததில்லை என்றார்.                                                                                                  

நன்றி ;-    தினமணி , 28 - 11 - 2013                                                                           

0 comments:

Post a Comment

Kindly post a comment.