Sunday, October 6, 2013

அரிய புத்தகங்கள் அணிவகுக்கும் நூலகம் ! சென்னை கோபாலபுரம் கணபதி காலனியில் !



""எனது மாமனார் கிருஷ்ணன் இலக்கிய ஈடுபாடு கொண்டவர். அதிலும் ஆங்கில இலக்கியத்தின் மீது ஈடுபாடு அதிகம். அவருடைய தந்தை ராணா ஆங்கிலத்திலிருந்து பல விஷயங்களை மொழி பெயர்த்தவர். "ஜெய்ஹிந்த்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.


இருவருக்கும் ஒரு நூலகம் தொடங்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அது நிறைவேறவில்லை. எனது மாமனார் இறந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. அவரது நினைவாக இந்த நூலகத்தைத் தொடங்கி கடந்த ஓர் ஆண்டாக  நடத்தித்திக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் எஸ்.வி. ஜெகந்நாதன்.

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கணபதி காலனியில் தனது வீட்டின் ஒரு பகுதியில் இந்த நூலகத்தை அவர் இலவசமாக நடத்திக்கொண்டிருக்கிறார்:
 ""இந்த நூலகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களே அதிகம். பல அரிய புத்தகங்கள். சில புத்தகங்கள் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் அச்சடிக்கப்பட்டவை. அவற்றின் அடுத்தடுத்த பதிப்புகள் வந்த போதிலும் எங்களிடம் முதல் பதிப்புகளே இருக்கின்றன.

 உதாரணத்திற்கு ஆல்ஃப்ரட் டெனிஸன் எழுதிய "கேரத் அன்ட் லின்னெட்' என்ற புத்தகம் 1872ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டது. வியர் மிட்சல் எழுதிய "தி அட்வென்ச்சர்ஸ் ஃப்ரான்காய்ஸ்' என்ற புத்தகம் 1898ல் அச்சடிக்கப்பட்டது. ஃபிரான்ஸில் மன்னராட்சியை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை விவரிக்கிறது இந்தப் புத்தகம். அந்த வகையில் இங்கிலீஷ் சினானிமஸ், ஏஜ் ஆஃப் ஷேக்ஸ்பியர், தி புளூ பொய்ட்ரி புக், சோல்ஜர்ஸ் த்ரீ அண்ட் அதர் ஸ்டோரிஸ் போன்ற புத்தகங்கள் எல்லாம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சடிக்கப்பட்டவை. அந்தப் புத்தங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கின்றன.

எனது மாமனார் இறப்பதற்கு முன் இவையெல்லாவற்றையும் கட்டிலுக்கு அடியில் பரப்பி வைத்திருந்தார். பலரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒரு நூலகத்திற்கு அவற்றிலிருந்து பல புத்தகங்களை ஒரு பெட்டியில் வைத்துக் கொடுத்தார்.

அவர் இறந்த பிறகும் பல மாதங்கள் வரை அந்தப் புத்தகங்களை யாருக்கும் படிக்கக் கொடுக்காமல் பெட்டியிலேயே அவர்கள் வைத்திருந்ததை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதற்குப் பிறகுதான் அந்தப் புத்தகங்களையும் கொண்டு வந்து, "கிருஷ்ணா மெமோரியல் டிரஸ்ட்' தொடங்கி எங்கள் வீட்டின் ஒரு பகுதியிலேயே இப்படியொரு நூலகத்தைத் தொடங்கும் எண்ணம் வந்தது.

பல முக்கியப் பிரமுகர்களும் தங்களுக்குத் தேவையான விஷயங்களை இந்த நூலகத்திற்கு வந்து அறிந்து செல்கிறார்கள். எனது மனைவி அரசுத் துறையில் பணிபுரிகிறார். அவர் அலுவலகம் சென்று விடுவதால் அவருடைய அன்னையும், நானும் நூலகத்தைக் கவனித்துக் கொள்கிறோம்.

இருவரின் உடல் நலம் காரணமாக நூலகத்தை முழு நேரமும் கவனித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் சிலர் முக்கியமான சில புத்தகங்களை களவாடிச் செல்வதும் வருத்தமளிக்கிறது.

எனவே ஒரு நல்ல லைப்ரரியனைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அரிய புத்தகங்களை வாங்க இயலாதவர்கள் எங்கள் நூலகத்தில் படித்து சிறப்படைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். வருங்காலத்தில் நூலகத்தை மேலும் விரிவுபடுத்தி ஒரு தலை சிறந்த நூலகமாக மாற்ற வேண்டும் என்பதே எமது குறிக்கோள்'' என்கிறார் எஸ்.வி. ஜெகந்நாதன்.                                                              

தினமணி ஞாயிறு கொண்டாட்டம், 06-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.