Sunday, October 6, 2013

300 கவிஞர்களின் கல்லறைகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்கர்


மறைந்த கவிஞர்களின் பெருமையை நினைவுகூரும் விதமாக, அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வலரான வால்டர் ஸ்கோல்ட், 300 கவிஞர்களின் கல்லறைகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

மசாசூசெட்ஸ் நகரில் உள்ள அன்னி விட்னி, வில்லியம் ரீட் ஹன்டிங்டன் மற்றும் மேரி பார்கர் எடி ஆகியோரின் கல்லறைகளை திங்கள்கிழமை பார்வையிட்டபோது, இந்த சாதனையை வால்டர் ஸ்கோல்ட் எட்டினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மறைந்த 500 கவிஞர்களின் கல்லறைகளைப் பார்வையிட விரும்புவதாகவும், வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மறைந்த ஒரு கவிஞரைப் பற்றி புத்தகம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும்' தெரிவித்தார்.

தற்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 201 கவிஞர்களின் கல்லறைகளை அவர் அடையாளம் கண்டுள்ளார்.

மேலும் ஸ்கோல்ட் கூறுகையில், ""கல்லறைகளைத் தேடி நீண்ட நாட்கள் பயணம் செய்வேன் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது'' என்றார்.

"மறைந்த கவிஞர்களுக்கான அமெரிக்க சமுகம்' என்ற அமைப்பை நிறுவிய ஸ்கோல்ட், 2009ஆம் ஆண்டு முதல் கவிஞர்களின் கல்லறைகளுக்குப் பயணம் செய்து அவர்களைப் பற்றிய குறிப்புகளை சேகரித்து வெகுகாலங்களாக மறக்கப்பட்ட எழுத்தாளர்களை நினைவுப்படுத்தி வருகிறார்.

 அந்த ஆண்டில் மட்டும் 90 நாட்களில் 23 மாகாணங்களுக்கு பயணம் செய்து 150 கல்லறைகளை பார்வையிட்டுள்ளார்.

கல்லறைகளில் சேகரிக்கப்பட்ட குறிப்புகள், விடியோ பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அருங்காட்சியகம் மற்றும் பிற நிறுவனங்களில் கொடுத்து நிதி திரட்டி, வழிப்பயணத்துக்கான செலவைச் சரிக்கட்டி வருகிறார்.                                                                                                                     
தினமணி, 06-10-2013                                                                                                       

0 comments:

Post a Comment

Kindly post a comment.