Sunday, October 6, 2013

பாலம் கல்யாணசுந்தரம் பொன்று உதாரண புருஷராகத் திகழுங்கள்



பாலம் கல்யாணசுந்தரத்தின் (இடமிருந்து 2-ஆவது) அன்புப் பாலம் தொண்டு நிறுவனத்தின் வைர விழாவில் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தருக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்குகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். உடன் (இடமிருந்து) தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, துணை வேந்தர் பொன்னவைக்கோ. 
 
சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இருட்டைப் போக்கும் விளக்காகவும், கரையைக் கடக்க உதவும் படகாகவும், பிறர் துன்பம் போக்க பாலமாகவும் திகழ்ந்து வரும் அன்புப் பாலம் தொண்டு நிறுவனத்தை நிறுவிய பாலம் கல்யாணசுந்தரம் போன்று உதாரண புருஷராகத் திகழுங்கள் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர்  எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் அன்புப் பாலம் தொண்டு நிறுவனத்தின் வைரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கலாம் பேசியது:
தர்ம சிந்தையுடன் எளிமையோடு, நேர்மையான மனிதராக வாழ்ந்து மகத்தான சேவை செய்துவரும் பாலம் கல்யாணசுந்தரம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகின்றார்.

ஸ்ரீவைகுண்டம் குமரகுரு கல்லூரியில் 30 ஆண்டுகள் நூலகராக உழைத்து பணியாற்றி கிடைத்த ரூ.11 லட்சம் பணத்தை ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி, சீருடை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவைக்காக செலவிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட ரூ.30 கோடியை சர்வதேசக் குழந்தைகளுக்கு வழங்கியவர்.

உன்னத லட்சியம் கொண்ட மனிதர் பாலம் கல்யாணசுந்தரம் போன்று என்னால் எதைக் கொடுக்க முடியும் என்ற லட்சியத்தை மனதில் உருவாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து பேசும்போது, எளிமைக்கும், நேர்மைக்கும், தன்னலமற்ற சேவைக்கும் அடையாளமாகத் திகழும் பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை மாணவர்களுக்கு நல்லதொரு உதாரணம். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் படிக்கும் 66 ஆயிரம் மாணவர்களில் 10 ஆயிரம் பேர் பல்வேறு சலுகைகள், உதவிகள் மூலம் இலவசக்கல்வி பெறுகின்றனர் என்றார்.

பாலம் கல்யாணசுந்தரம் பேசும்போது, இருப்பவர்களிடம் இருந்து பெற்று இல்லாதவர்களுக்கு வழங்க பாலமாகத் திகழ்ந்த எனக்கு என் தாயார் சொன்ன அறிவுரை - எதற்கும் பேராசைப்படாதே. கிடைத்த பணத்தில் 10-ல் ஒரு பங்கை ஏழை, எளியவர்களுக்குக் கொடு என்பதுதான்.

நீங்களும் ஒரு வருடம் பிறருக்குக் கொடுக்கும் பழக்கத்தைக் கடைபிடியுங்கள். அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை உணர்வீர்கள் என்றார்.

விழாவில் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், நூலகர் கே.எஸ்.மணிவண்ணன் ஜமால் முகமது ஈசா ஆகியோருக்கு சேவைத் திலகம் பரிசும் வழங்கப்பட்டன.

தினமணி, 06-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.