Friday, October 4, 2013

"நாள்தோறும் சிலுவையில் அறையப்படும் " ஒரு இந்தியத் தலைவர் - ப.இசக்கி

"துன்பப்படுகிறவர் பாக்கியவான்'

First Published : 04 October 2013 01:57 AM IST

அவர் ஒரு பொருளாதார நிபுணர். ராஜதந்திரி. 120 கோடி மக்கள் பலம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர். அது மட்டுமின்றி அவர் மீது அந்த "கருப்புத் தலைவ'ருக்குத் தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால்தான் தன்னை அண்மையில் சந்திக்க வந்த அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

வாசலுக்கே வந்து வரவேற்பதும், வாசல் வரை சென்று வழியனுப்புவதும் நமது பண்பாடாக இருக்கலாம். ஆனால் அந்த "கருப்புத் தலைவர்' வாழும் வெள்ளை மாளிகையில் அது ஒரு அதிசயம். அங்கே எல்லாவற்றுக்கும் விதிமுறை உண்டு. அதை மீறினால் அது செய்தியாகி விடும். இந்த நிகழ்வும் அப்படித்தான்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில கிராமத்தில் ஏழை சீக்கிய குடும்பத்தில்தான் அந்த தலைவர் பிறந்தார். கடின உழைப்பால் கல்வியில் உயர்ந்தார். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டில் உதவித் தொகை பெற்றார். பொருளாதார நிபுணர் ஆனார்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகளின் அமைப்புகளில் பணியாற்றினார். இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் ஆனார். அவர் கையெழுத்திட்ட ரூபாய் நோட்டுகள் இன்றும் மதிப்புடையதாகத்தான் இருக்கிறது. பொருளாதார மேதை என புகழ்ந்துரைக்கப்பட்டார்.

1990-களில் இந்தியாவின் நிதியமைச்சராக அவர் இருந்தபோதுதான் நாட்டின் பொருளாதார புரட்சிக்கு வித்திட்டார். ஆமாம், புதிய பொருளாதார கொள்கை அவர் தலைமையில்தான் அமல்படுத்தப்பட்டது.

2004-ல் எதிர்பாராத சூழ்நிலையில் அவர் பிரதமர் ஆனார். "முனைவர்' பட்டம் பெற்ற முதல் இந்திய பிரதமரும் அவரே.

தேர்தலுக்கும் அவருக்கும் தூரம் அதிகம். அதனால்தான் மக்களை நேரடியாக சந்தித்து "அனுமதி' பெறாமலேயே பிரதமர் பதவியை அலங்கரித்து விரைவில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். அப்படியானால் அவர் ஒரு ராஜதந்திரிதானே!

இந்தியச் சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு திறந்து விட்டவர் அவர். அவர்களின் நலனை எள் முனையளவும் புறக்காணிக்காதவர்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே அணு உலை வியாபாரத்திற்கு அடித்தளமும் அமைத்துள்ளார்.

அப்படியானால் அவர் மீது கருப்புத் தலைவருக்கு "தனிப்பட்ட மரியாதை' வரத்தானே செய்யும். வெளிநாட்டில் நம் தலைவருக்கு கிடைத்த மரியாதை, நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்தது போலத்தான். அதை பார்க்கும்போது நாம் அனைவரும் புளகாங்கிதம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நம்மால் அடைய முடியவில்லை.

காரணம், அதற்கு முதல் நாள் உள்ளூரில் அவர் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரி நம் நினைவைவிட்டு அகல மறுக்கிறது. அதை எதிரிகள் யாரும் பூசவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த "இளவரசர்'தான் பூசினார்.

அந்த "இளவரசரை'யே தலைவராக ஏற்றுக் கொள்ளவும் தயார் என இவர் கூறிய பிறகும் அவர், இவர் முகத்தில் கரி பூசினார் என்பதுதான் கூடுதல் வருத்தம். அதற்காக கட்சிக்காரர்கள் யாரும் கோபப்படவில்லை. அது முடியவும் முடியாது. மாறாக கரி பூசியவருக்குதான் ஆதரவு பெருகியது. சரி, அது போகட்டும்.

கரி பூசிய முகத்தை கருப்புத் தலைவரிடம் அவர் எப்படி காட்டி இருப்பார். அவர் முகத்தை மறைத்திருந்தாலும் அந்த தலைவர் தெரிந்து கொண்டிருப்பாரே.
அதனால்தான் அந்த புண்பட்ட நெஞ்சுக்கு மருந்திட எண்ணி ஆதரவான அணைப்போடு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாரோ?

பரிசுத்த வேதாகமத்தில் ஒரு நிகழ்வு உண்டு. தேவாலயத்திலே இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கேட்டவர்கள் ஆச்சரியப்பட்டு, ""இவனுக்கு இந்த ஞானம் எப்படி வந்தது, இவன் தச்சன் அல்லவா, மரியாளின் குமாரன் அல்லவா, இவனுடைய சகோதர்களும், சகோதரிகளும் நம்முடனே இருக்கிறார்களே'' என்று கூறி இடறலடைவார்கள்.

அப்போது அவர்களின் சந்தேகத்தை அறிந்து கொண்ட இயேசு கிறிஸ்து, ""தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்'' என்பார். இது ஒப்பீடு அல்ல.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட அந்த தீர்க்கதரிசன வார்த்தை இன்றைய நிலைக்கு எப்படியெல்லாம் பொருந்துகிறது என்பதுதான்.
ஆனால் ஒன்று, இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறைதான் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அந்தத் தலைவரோ நாள்தோறும் சிலுவையில் அறையப்படுகிறார் என்பதுதான் வேதனையிலும் வேதனை. வேறென்ன சொல்வது?

--தினமணி, கட்டுரை, 04-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.