Friday, October 4, 2013

பிரதமர் வீட்டுமுன் சீமாந்திரா பகுதி இளைஞர்கள் வியாழன்று ஆர்ப்பாட்டம் !

தெலங்கானா மாநிலம் ஏற்படுத்தக்கூடாது என்ரு வலியுறுத்தி
பிரதமர் இல்லம் முன் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
சீமாந்திரா பகுதி இளைஞர்கள்  


தெலங்கானா தனி மாநிலத்தை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லம் முன் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்கக்கூடாது என வலியுறுத்தி, அந்த மாநிலத்தின் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆந்திரத்திலும், தில்லியிலும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஜஸ்வந்த் சிங் சாலையில் உள்ள ஆந்திர மாநில அரசு விருந்தினர் இல்லம் முன்பாகக் குவிந்தனர்.

அப்போது, தில்லியில் வியாழக்கிழமை மாலையில் பிரதமர் தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தெலங்கானா மாநிலம் ஏற்படுத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தகவல் பரவியது.
இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டம் தொடங்கும் வேளையில் சுமார் 100 பேர் அடங்கிய குழுவினர் ரேஸ் கோர்ஸ் சாலைக்கு வந்தனர்.

பிரதமர் இல்லத்தின் வெளிப்புற வாயிலுக்கு எதிர்புறத்தில் உள்ள நடைபாதை அருகே உள்ள பகுதி ஊடகக் குழுவினர் செய்தி சேகரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியாகும். அங்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் "தெலங்கானா மாநிலத்தை உருவாக்காதே', ஆந்திரத்தை காப்பாற்று' ஆகிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த தொலைக்காட்சிக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பேட்டி கண்டு நேரலையாக தங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் பிரதமர் இல்லத்தின் வெளிப்புற வாயில் பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை வாயில் பகுதியில் நின்றிருந்த மத்திய ரிசர்வ் காவல் படையினர் தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே, சம்பவப் பகுதிக்கு தில்லி போலீஸார் பெருமளவில் வந்து போராட்டக்காரர்களை விலக்கி மறுமுனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீஸாரை பிரதமர் அலுவலக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்

அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு, இந்தியா கேட் அருகே இறக்கி விடப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.                                                                                                                                        

தினமணி, 04-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.