Friday, October 4, 2013

மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் இந்தியா - இந்திய இராணுவ முன்னாள் தலைமைத்தளபதி!

 
 
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற "ஆட்சி முறையில் உள்ள சிக்கல்கள்' குறித்த குழு விவாதத்தில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  எம்.ஜி.தேவசகாயம், இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, ஊழலுக்கு எதிரான இயக்க துணைத் தலைவர் எஸ்.எம்.அரசு.

மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் நாடு உள்ளது என இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைtத் தளபதி வி.கே. சிங் கூறினார்.
ஆட்சி முறையில் ஒருங்கிணைப்புக்கான அமைப்பு, ஊழலுக்கு எதிரான இயக்கம் மற்றும் லயோலா கல்லூரி ஆகியவை இணைந்து சென்னையில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஆட்சி முறையில் உள்ள சிக்கல்கள் குறித்த குழு விவாதத்தில் பங்கேற்று முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பேசியது:

எந்தவொரு நாடு அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பெறவில்லையோ, அந்த நாடு ஒரு போதும் முன்னேறாது. வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் வராத வகையில், பக்கத்து நாடுகளுடன் சுமுக உறவை வளர்த்துக் கொள்ளுதல், உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் என அனைத்து செயல்பாடுகளிலும் சமமான வளர்ச்சியை ஏற்படச் செய்ய வேண்டும்.

ஆனால், இந்தியாவுடன் பக்கத்து நாடுகள் சுமுக உறவைக் கொண்டிருக்கவில்லை. பாகிஸ்தான், சீனா மட்டுமல்லாமல் நட்பு நாடுகளாகக் கருதப்படும் வங்கதேசம், இலங்கை, பூட்டான் ஆகிய நாடுகளாலும் கூட இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

இது மட்டுமல்லாமல், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைத் திட்டங்களைத் தயாரித்து வரும் "பால்கம்' நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. அதவாது அந்த நிறுவனத்தின் 71 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. இது தேச நலனை கடுமையாகப் பாதிக்கும். இதுபோன்ற காரணங்களால் இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நிலைமையை இளைய சமுதாயத்தினரால்தான் மாற்ற முடியும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக 30 கோடி இளைஞர்கள் வாக்களிக்கப் போகிறீர்கள். எனவே, நன்கு சிந்தித்து நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி: நேர்மையானவர்கள், சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையில், இப்போதைய தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பண பலம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விடலாம் என்ற நிலைதான் உள்ளது. வாக்காளர்களும் வாக்குக்குப் பணம் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

தேர்தலில் கட்சிகள் தாங்களாக செலவு செய்வதை தடுக்க வேண்டும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் "தேசிய தேர்தல் நிதி' ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த நிதியத்துக்கு நன்கொடை அளிக்கும் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் 100 சதவீத வரிச் சலுகை அளிக்க வேண்டும்.

இந்த நிதியத்திலிருந்தே, ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட அளவில் தேர்தல் செலவுகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என்றார்.

குழு விவாதத்தில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அந்த சட்டம் காரணமாக சமூகத்திலும், ஆட்சி முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் கூறினார்.

பின்னர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த வி.கே. சிங் கூறியது: ராணுவ நிதி எதுவும் தவறுதலாகப் பயன்படுத்தப்படவில்லை. ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களை பல்வேறு செயல் திட்டங்களில் ஈடுபடவைத்து அம்மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காகவே ராணுவத்தின் நிதி செலவிடப்பட்டது. அரசியல் நோக்கத்துக்காகவே, ராணுவத்தின் இந்த நடவடிக்கை தவறுதலாக சித்திரிக்கப்படுகிறது.

நாட்டின் நலனுக்காக மட்டுமே ராணுவம் செயல்பட்டு வருகிறது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தலைவணங்கும் செயலிலோ அல்லது ஆதரவு தெரிவிக்கும் செயலிலோ ராணுவம் இறங்காது என்றார்.

மேலும் பாஜக-வில் சேரப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இப்போதைக்கு சமூக சேவையில்தான் நான் ஈடுபட்டு வருகிறேன். நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில்தான் ஈடுபட்டு வருகிறேன்.

ஹரியாணாவில் நடைபெற்றது முன்னாள் ராணுவத்தினரின் ஊர்வலம். அதன் காரணமாகவே அதில் நான் பங்கேற்றேன் என்றார் அவர்.                                  

தினமணி, 04-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.