Friday, October 4, 2013

எல்லையில் தீவிரவாதிகளுடன் 10-வது நாளாகக் கடும் சண்டை


காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுடன் 10-வது நாளாக கடும் துப்பாக்கிச் சண்டை வியாழக்கிழமையும் தொடர்ந்தது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், கிரண் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படையினரின் உதவியுடன் 30 முதல் 40 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் வியாழக்கிழமை ஊடுருவ முயற்சி செய்தனர்.

அப் பகுதியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் தங்களது பணியை முடித்து பாசறைக்குத் திரும்பினர். மற்றொரு பிரிவினர் பணியை ஏற்கும் தருணத்தில் இந்த ஊடுருவல் முயற்சியை தீவிரவாதிகள் மேற்கொண்டனர்.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே விடியவிடிய கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

இப் பகுதியில் 10 நாள்களாக நடந்துவரும் சண்டையில் இதுவரை இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர். தீவிரவாதிகள் 10 முதல் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்தியாவால் கைவிடப்பட்ட பதுங்கு குழிகளில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நிலைகொண்டு ஊடுருவ முயற்சி மேற்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

இந்திய நிலைகளைக் கைப்பற்றவில்லை: இந்திய நிலைகளை தீவிரவாதிகள் கைப்பற்றிவிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் தவறானவை என்று கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் இணைந்து எல்லை நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளனர். அந்தக் குழுவினர்தான் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

இந்நிலையில், ஊடுருவல் முயற்சிகளில் பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தொடர்பில்லை என அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் தப்பியோட்டம்: ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை மாலை தொடங்கிய துப்பாக்கிச் சண்டை வியாழக்கிழமை காலை முடிவுக்கு வந்தது. எனினும், தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.

ஸ்ரீநகர், செளரா பகுதியில் அகமது நகர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை புதன்கிழமை மாலை சுற்றிவளைத்தனர்.

பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதுடன் கையெறி குண்டுகளையும் வீசினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் லேசான காயமடைந்தனர்.                                                                                                                          

தினமணி, 04-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.