Thursday, October 3, 2013

29-வது மாநிலம் தெலிங்கானா அமைச்சரவை ஒப்புதல் : 72 மணிநேர பந்த் YSR காங்கிரஸ் அழைப்பு !




ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக ஹைதராபாத் இருக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சச்ர் சுஷில் குமார் ஷிண்டே, “தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்படவுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பின், எஞ்சிய ஆந்திரப் பகுதிக்கு சிறப்பு நிதியுதவி அளிப்பது தொடர்பாக இந்தக் குழு முடிவு செய்யும்” என்றார்.

மேலும், “ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து, தெலங்கானா, சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்கள் உருவாக்கப்படும். இந்த இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் பொதுவான தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும். 

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தெலங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திர மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் மாநிலம் பிரிக்கப்படும்” என்றார் ஷிண்டே. 

பிரதமர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்
 
இதனிடையே, டெல்லியில் பிரதமர் இல்லத்துக்கு முன் திரண்ட 30-க்கும் மேற்பட்ட தெலங்கானா எதிர்ப்புப் போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர், தடுப்புக் காவலை மீறி பிரதமர் இல்லத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தெலங்கானாவில் கொண்டாட்டம்
 
அதேநேரத்தில், தனி மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தகவல் அறிந்த, தெலங்கானா ஆதரவாளர்கள் ஆந்திரத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு அடைப்புக்கு அழைப்பு
 
தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆந்திராவில் வெள்ளிக்கிழமை தொடங்கி 72 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

தான் சிறையில் 16 மாத காலம் இருந்ததைக் காட்டிலும், இன்றைய மத்திய அமைச்சரவையின் ஒப்புதலால் காயமடைந்திருப்பதாக ஜகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் இவர் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது. 

சீமாந்திராவில் பலத்த பாதுகாப்பு
 
தனி தெலங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக சீமாந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலங்கானா உருவாவதற்கு ஆதரவான தீர்மானம், கடந்த ஜூலை 30-ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

அப்போது, அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.                                                                    

தி இந்து, 03-10-2013, 22.53hrs.

0 comments:

Post a Comment

Kindly post a comment.