Thursday, October 3, 2013

சென்னை: 176 முறை ரத்த தானம் செய்த இராயபுரம் ராஜசேகரன் கெளரவிக்கப்பட்டார் !



தேசியத் தன்னார்வ ரத்த தான நாளையொட்டி செவ்வாய்க்கிழமையன்று, தமிழகத்திலேயே அதிகமான முறை ரத்த தானம் செய்திருக்கும் சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் கௌரவிக்கப்பட்டார்.

சென்னை, ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் 1973-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி முதல் இதுவரை 176 முறை ரத்ததானம் அளித்து, ரத்த தானம் செய்வதில் ஆர்வமுடையவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். "தி இந்து" நிருபரிடம் அவர் கூறியதாவது: 

"1972 -ம் ஆண்டு, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எனக்கு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தினால் தலையில் அடிபட்டு சாகும் நிலைக்குச் சென்றுவிட்டேன். அந்த நிலைமையில் முகம் தெரியாத பலர் எனக்கு ரத்த தானம் செய்து உதவினார்கள். மற்றவர்களின் ரத்த தானத்தால் உயிர் பிழைத்த நான், மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் உடல் குணமடைந்த அடுத்த வருடம் முதல் ரத்த தானம் செய்து வருகின்றேன். இதுவரை 176 முறை ரத்த தானம் செய்துள்ளேன். 

என்னுடைய மகள், மகன் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் ரத்த தானம் செய்பவர்களாக மாற்றியுள்ளேன். என் மனைவியும் ரத்த தானம் செய்பவர்தான். உடல்நிலை பாதிப்பால் சமீபத்தில் நிறுத்தி விட்டார். 

நான் வசிக்கும் ராயபுரம் பகுதியிலிருக்கும் முப்பது இளைஞர்களை ரத்த தானம் செய்பவர்களாக மாற்றியுள்ளேன். இதைத்தான் எனக்குக் கிடைத்த சிறந்த பெருமையாக நினைக்கிறேன்" என்று கூறினார். 

சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்த தான விழாவில் ராஜசேகரன் கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில், 530 தன்னார்வ ரத்த தான அமைப்புகளுக்கு மாநில குடும்ப நல மற்றும் சுகாதார அமைச்சர் கே.சி. வீரமணி பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் குருதிப் பரிமாற்று குழுமத்தின் இயக்குநர் டி. விவேகானந்தன், "தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 7,51,680 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன" என்றார். 

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, சென்னை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் டி. ஆனந்த், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.                                                                              

தி இந்து, 02-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.