Saturday, October 12, 2013

எழுத்தறிவித்தவன்...இறைவனிடம் போவான் -வே.இராமசுப்பிரமணியன்


ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூவர், கல்லூரி முதல்வரை கொடூரமாக வெட்டிச் சாய்த்த செய்தி, படித்தவர் மனதை பதைக்க வைத்திருக்கிறது. எழுதுகோலும் புத்தகமும் கையில் பிடிக்க வேண்டிய மாணவர்கள், வீச்சரிவாளையும் விதவிதமான ஆயுதங்களையும் கையில் வைத்துக்கொண்டு கல்லூரிகளில் வலம் வரும் காட்சி சிறிது காலமாகவே அரங்கேறத் தொடங்கி இருக்கிறது.

"எந்தக் கல்வி எழுத்தைக் கற்றுக் கொடுக்கிறதோ, எந்தக் கல்வி மன வலிமையை உண்டாக்குகிறதோ, எந்தக் கல்வி அறிவைக் கூர்மைப்படுத்துகிறதோ, எந்தக் கல்வி ஒரு மனிதனை அவனுடைய சொந்தக் கால்களில் நிற்க வைக்கிறதோ, அந்தக் கல்விதான் எனக்குத் தேவை' என்று முழங்கிய சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குத் தமிழகத்து மாணவர்கள் நல்லதொரு மரியாதையைச் செலுத்தி இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாகவே பொறியியல் பட்டப் படிப்பு என்பது மிகுந்த கவலைக்குரியதாக மாறி வருவதை நாம் தெளிவாகக் காணமுடியும். ஏ.ஐ.சி.டி.இ. என்று அழைக்கப்படும் அகில இந்திய தொழிற்கல்வி ஆயம், 1992 முதல் 2001 வரை பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்குக் குறைந்தபட்ச தகுதியாக மேல்நிலைப் பள்ளியில் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி வந்தது. ஆனால், 2002 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்தக் கல்வித் தகுதி தளர்த்தப்பட்டு, மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்று விதிமுறைகளைத் தளர்த்தியது. 2011 ஆம் ஆண்டில் குறைந்தபட்சத் தகுதியை மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பில் 50 விழுக்காடு என்று ஏ.ஐ.சி.டி.இ. மாற்றி அமைத்தது.

இப்படி ஒருபுறம் அகில இந்திய தொழிற்கல்வி ஆயம், தகுதி அடிப்படையை காலத்திற்குக் காலம் மாற்றிக் கொண்டே வந்ததைப் போலவே, தமிழக அரசும் தகுதி அடிப்படைகளை மாற்றிக்கொண்டே வந்தது. 1992-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர வேண்டுமானால், மேனிலைப் பள்ளி இறுதி வகுப்பில் முற்பட்ட வகுப்பு மாணவர்கள் 70 விழுக்காடுகளும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 65 விழுக்காடுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 60 விழுக்காடுகளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்ற கல்வித் தகுதியை அரசு வைத்திருந்தது. 2002-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டுவரை, இது 60, 55 மற்றும் 50 விழுக்காடுகளாகக் குறைக்கப்பட்டது. 2008-2009 ஆம் ஆண்டு இத்தகுதி 55, 50 மற்றும் 45 விழுக்காடுகளாக மாற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டு முதல் தகுதி விழுக்காடுகள் 50, 45 மற்றும் 40 விழுக்காடுகளாக மீண்டும் குறைக்கப்பட்டன.

இப்படிக் குறைக்கப்பட்டதற்கான காரணம், நாட்டில் பொறியியல் வல்லுநர்களின் தேவை அதிகரித்தது அல்ல. பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாகிப் போனதுதான். தனியார் பொறியியல் கல்லூரிகளைக் காப்பாற்ற கல்வியின் தரம் காற்றில் பறக்கவிடப்பட்ட வினோதம் அரங்கேறியது.

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, அவற்றில் மாணவர் சேர்க்கைக்காக அனுமதிக்கப்பட்ட இடங்கள், சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் காலி இடங்கள் ஆகிய புள்ளி விவரங்களை நாம் பொருத்திப் பார்த்தால் சில உண்மைகள் எளிதில் விளங்கும்.

தில்லி குர்கோவானில் உள்ள "அஸ்பயரிங் மைன்ட்ஸ்' என்ற தனியார் நிறுவனம் பொறியியல் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு பற்றி ஆய்வு நடத்தி, தனது ஆய்வறிக்கையை 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் தற்போது இந்தியாவில் தொழிற்கல்வியின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் இருக்கும் 5 மாநிலங்களை ஆராய்ந்தபின், அம்மாநிலங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்புத் திறன் எப்படி இருக்கிறது என்று சோதித்த போது தமிழகம் 5வது இடத்தில், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கீழே இருக்கிறது என்று அந்த நிறுவனம் தர நிர்ணயம் செய்தது.

இதை விட வேடிக்கை, தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்புத்திறன் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை புது தில்லியில் 40 புள்ளிகளாகவும், புது தில்லிக்கு கீழே பிகார், ஜார்க்கண்ட், உத்திரகாண்ட், மேற்கு வங்காளம், பஞ்சாப், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கேரளம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகம், மகாராஷ்டிரம், சட்டீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய அத்தனை மாநிலங்களுக்கும் கீழே, 10க்கும் குறைவான புள்ளிகளைக் கொண்டு தமிழ்நாடு விளங்குகிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. எத்தனைக்கு எத்தனை பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கையில் கூடுகின்றனவோ, அத்தனைக்கு அத்தனை வேலை வாய்ப்புத் திறன் குறைகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

பேரளவில் உற்பத்தி என்பது இயந்திரங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், அது கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. கல்வி நிறுவனங்கள் உயர்தரக் கல்வியை வழங்குவதில் முனைப்புச் செலுத்த வேண்டுமே தவிர, எந்த வேலைக்கும் அருகதையற்ற பட்டதாரிகளை உருவாக்குவதால் என்ன பயன்?

பொறியியலிலோ, தொழில் நுட்பத்திலோ ஆர்வம் கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள்தான் பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்றால் அதில் பிரச்னை இருக்காது. ஆனால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டாலே, இறுதியாண்டில் மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களை உறுமீன்களாக எண்ணிக் கொத்திக்கொண்டு போய்விடும் என்ற தவறான எண்ணத்தில் இக்கல்லூரிகளில் சேர்பவர்களே இன்று அதிகம். தனக்கு ஈடுபாடு இல்லாத ஒரு பட்டப் படிப்பில், அது மிகப் பெரிய வேலை வாய்ப்பை அளிக்கும் என்ற தோற்ற மயக்கத்திலும், காட்சிப் பிழையிலும் ஏமாந்து போய் இக்கல்லூரிகளில் சேர்பவர்களில் பலர் இன்று பட்டம் பெறுவதற்குள் படாதபாடு பட்டு விடுகிறார்கள்.

மாணவர்கள்தான் இப்படி என்றால் பெற்றோர்கள் இதைவிட மோசம். தனது உறவினரின் மகனோ மகளோ பொறியியல் படிக்கிறார் என்பதாலோ, சக ஊழியரின் அல்லது அக்கம்பக்கத்து வீட்டுக்காரரின், நண்பர்களின் பிள்ளைகள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதாலோ, தங்கள் பிள்ளைகளும் பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர் பலர். மதிப்பெண் குறைந்திருந்தாலும், அந்தப் பிள்ளைகளுக்கு வேறு பல திறமைகள் இருந்தாலும் பொறியியல் படித்தால்தான் கௌரவம் என்று நினைக்கும் இந்தப் பெற்றோர்கள், வீட்டை விற்றாவது நன்கொடை வழங்கிப் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கவும், தரமற்ற, எந்தவித கட்டமைப்பு வசதியுமில்லாத பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கவும் தயங்குவதில்லை. இந்த பலவீனத்தைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகள்தான் அதிகம்.

அத்துடன் பிரச்னை நின்றுவிடவில்லை. பல தனியார் கல்லூரிகளில் முறையான, தகுதியுள்ள, ஆசிரியர்கள் கிடையாது. இந்தப் பிரச்னையில் கடுமையான நிபந்தனைகளும், தரநிர்ணயமும், கண்காணிப்பும் இல்லாமல் இருப்பதும்கூட, பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைவதற்குக் காரணமாக அமைகின்றன.

கானல் நீருக்குள் மாட்டிக் கொள்ளும் மாணவர்களின் நண்பனாகவும், வழிகாட்டியாகவும், மேதையாகவும் வாழக்கூடிய, மற்றும் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கக் கூடிய உந்துகோலாகவும் இருக்கும் ஆசிரியர்கள் இன்று மிகக் குறைவே. இந்த சமூக அவலத்தின் வெளிப்பாடே பொறியியல் கல்லூரி முதல்வரின் கொலை.

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்பதை இன்றைய மாணவர்கள் கொஞ்சம் மாற்றி "எழுத்தறிவித்தவன் இறைவனிடம் போவான்' என்று காட்டியிருக்கிறார்கள்.

"நலமோர் எள் துணையும் கண்டிலேன் - இதை
நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்'
என்றார் பாரதியார்.

கல்விக்கூடங்கள் எண்ணிக்கையில் வளர்ந்த அதே அளவிற்கு கோயில்களும் வளர்ந்துள்ளன. அதனால் தானோ என்னவோ ஆன்மிகத்தின் தரம் குறைந்த அதே அளவிற்கு கல்வியின் தரமும் குறைந்துவிட்டது.                                               

தினமணி, கட்டுரையாளர், நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம், 12-10-2013

கட்டுரையாளர்:
நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.