Saturday, October 12, 2013

தவறின்றி உச்சரிப்போம் - திருப்பூர் கிருஷ்ணன்


காலஞ்சென்ற தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தனின் தமிழ் உச்சரிப்பு மிகத் திருத்தமாக இருக்கும். கேட்கக் கேட்கத் திகட்டாத பேச்சு அவருடையது. அதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.

தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் சில ஆண்டுகள் அவர் கண்பார்வை அற்றவராக இருந்தார். எனவே தொலைபேசியில் நண்பர்களுடன் பேசுவது, வானொலி கேட்பது இவையே அவரது முக்கியமான செயல்பாடுகளாக இருந்தன. தன் அன்பர்களையும் நண்பர்களையும் பெரிதும் மதித்த அறிஞர் அவர். புகழ்வேட்கையை முற்றிலுமாகத் துறந்தவர். தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொண்ட பழுத்த ஆன்மிகவாதி.

இறுதி நாள்களில் அவரை வாட்டி வதைத்துவந்த ஒரு விஷயம், தமிழர்களின் தமிழ் உச்சரிப்புதான். ழகர லகர ளகரங்களை பெரும்பாலான தமிழர்கள் சுத்தமாகத் தொலைத்துவிட்டார்களே என்று அவர் பெரிதும் மனம் வருந்திக் கொண்டிருந்தார்.

இப்போது மேடையில் பேசும் புகழ்பெற்ற பேச்சாளர்களில் உச்சரிப்புத் திருத்தத்தோடு பேசுபவர்கள் மிகக் குறைவு. முன்பெல்லாம் மேடைப் பேச்சு என்றால் திருந்திய உச்சரிப்பு என்பது ஓர் அடிப்படைத் தகுதியாகக் கருதப்படும். இன்று அப்படியல்ல. விஷயத்தை சுவாரஸ்யமாகச் சொன்னால் போதும். உச்சரிப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று கருதத் தொடங்கிவிட்டார்கள். பல பேச்சாளர்களுக்கு ழகர ளகரத் தடுமாற்றம் எப்போதும் இருக்கிறது.

அமரர் கி.வா.ஜகந்நாதன் ஒரு துணுக்கு சொல்வார். வாழைப்பழம் விற்கும் ஒரு மூதாட்டி கன்னியாகுமரியிலிருந்து வாழைப்பழக் கூடையுடன் ரயிலில் புறப்பட்டாளாம். அப்போது கொஞ்சம் காய்வெட்டாக இருந்ததால் "வாகப்பகம்' என்று கூவி விற்றாளாம். மதுரை வரும்போது அவை சரியான பதத்தில் கனிந்ததாம். எனவே "வாழைப்பழம்' என்றாளாம். அரக்கோணத்தில் அவை மேலும் கனிந்ததால் "வாளப்பளம்' ஆனதாம். சென்னைக்கு வருவதற்குள் அவை கனியோ கனி என்று கனிந்துவிட்டதால் அந்த மூதாட்டி, "வாயப்பயம்', "வாயப்பயம்' என்று கூவி விற்கத் தொடங்கினாளாம். சென்னைவாசிகளின் உச்சரிப்பு பற்றிய கி.வா.ஜ.வின் கிண்டல் இது.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் எண்பது விழுக்காட்டினர் உச்சரிப்பைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவர்களாய் இருந்தார்கள். அது மட்டுமல்ல, அந்த மோசமான உச்சரிப்போடு கூட பல பேச்சுப் போட்டிகளில் அவர்கள் பரிசுபெற்றதாகவும் கூறினார்கள். உச்சரிப்பு சரியில்லை என்றால் பேச்சுப் போட்டியிலிருந்தே அவர்களை விலக்கி வைப்பதுதானே நியாயம்? பள்ளிகள் எப்படி இத்தகைய மாணவர்களை பேச்சுப் போட்டிகளுக்கு தேர்வுசெய்து அனுப்புகின்றன என்பதே ஆச்சரியம்.

இசைக்கலைஞர்களில் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரது திருத்தமான உச்சரிப்பில் சிலப்பதிகாரப் பாடல்கள் உள்பட பல இனிய தமிழ்ப் பாடல்களை நாம் இன்று கேட்கும்போதும் மனம் மயங்குகிறது. அவரிடம் இருந்த இன்னொரு நற்பழக்கம். பிறமொழிப் பாடல்களைப் பாடினால் கூட, அந்த மொழி வல்லுநர்களிடம் கேட்டு உச்சரிப்பை சரிசெய்துகொண்டு அதன் பின்னரே பாடுவார்.

"தமிழ் வாழ்க' என்பதைக் கூட "தமில் வால்க' என்று உச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தற்போது தமிழ் உணர்வு பெருகியிருப்பது உண்மையே. ஆனால் தமிழ் அறிவு பெருகியதாகத் தெரியவில்லை.
யாரும் பெரிதாக தமிழ்த் தொண்டெல்லாம் செய்யத் தேவையில்லை. தமிழை மோசமான உச்சரிபோடு பேசி, தமிழ்த் தாயை வதைக்காமல் இருந்தாலே போதும். அடிப்படைத் தமிழ்த் தொண்டு என்பது சரியான உச்சரிப்பில் தமிழைப் பேசுவதுதானே!                                                                                                                                

தினமணி- 12-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.