Tuesday, October 15, 2013

நீலகிரியில் அமைந்துள்ள அவலாஞ்சி


நீலகிரி மாவட்டத்தில் ஊட்டிக்கு அருகே அமைந்திருப்பது அவிலாஞ்சி பகுதியாகும். இயற்கையை விரும்புவோருக்கு ஏற்ற சுற்றுலா தலமாகும் இது.

ஊட்டியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த அவிலாஞ்சி. இது ஊட்டியில் இருந்து எமரால்ட் கேம்ப் வழியாக அப்பர் பவானி செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது.

எங்கு நோக்கினும் கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகளைக் கொண்ட அவலாஞ்சியில் இயற்கை வரைந்த பல எழில்மிகு கோலங்களைக் காணலாம். ஊட்டிக்குச் செல்வோர் பெரும்பாலும் பொட்டானிக்கல் கார்டனையும், ஊட்டி ஏரியில் படகு சவாரியையுமே முக்கியமாகக் கருதுவார்கள். ஆனால், நன்கு திட்டமிட்டு ஊட்டி செல்லும் போது அவலாஞ்சியை தவறாமல் பார்த்து வரவும்.

அவலாஞ்சிக்கு செல்லும் வழியெங்கும் மிக அரிய, விதவிதமாக மரங்களை பார்த்துக் கொண்டே செல்லலாம். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சில சமயங்களில் மான்களும், காட்டெருமைகளும் தரிசனம் தரும். அவலாஞ்சிக்குள் நுழைந்ததுமே, ஏதோ ஒரு புதிய உலகத்துக்குள் காலடி வைத்த உணர்வு அனைவருக்குமே தொற்றிக் கொள்ளும்.

அவலாஞ்சியைப் பார்க்க வனத்துறையினரின் அனுமதியை பெற வேண்டியது அவசியமாகிறது. ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே வனத்துறை அலுவலகம் உள்ளது. நீங்கள் அவலாஞ்சி செல்வதற்கு ஒரு நாள் முன்கூட்டியே இங்கு அனுமதி பெற வேண்டும். தொலைபேசியிலோ, ஆன்லைனிலோ அனுமதி பெற முடியாது. மேலும், நீங்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாளைக்கு முந்தைய நாள் எந்த அரசு விடுமுறையாவது இருந்தால், அதற்கும் முந்தைய நாளே அனுமதி பெற வேண்டும்.

சிறப்பு அனுமதி பெற்று அவலாஞ்சியில் வனத்துறையின் சோதனை மையம் வரை சென்று வரலாம். அவலாஞ்சியில் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்றால் அதற்கும் அனுமதி பெற வேண்டும். அவலாஞ்சியில் குண்டா மின் உற்பத்தி திட்டம் செயல்பட்டு வருகிறது.  எனவே, அந்த திட்டத்துக்கு அருகே மின் ஊழியர்களின் சில குடியிருப்புகள் மட்டுமேக் காண முடிகிறது. மற்றபடி அங்கே ஆட்களின் நடமாட்டத்தைக் காண்பது அரிதாகவே உள்ளது.

அவலாஞ்சியில் வனத்துறையின் விருந்தினர் இல்லம் ஒன்று மட்டுமே உள்ளது. அதில் தங்க வேண்டும் என்றால், ஊட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.                                                
தினமணி-12-10-2013                                      


0 comments:

Post a Comment

Kindly post a comment.