Monday, October 14, 2013

பெண்களின் ஒவ்வொரு சொல்லும் அசைவும் கண்காணிக்கப்படுகிறது: மாலதி மைத்ரி


 கடல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வின் துடிப்பையும் எதிர்ப்புத் தன்மையையும் கொண்டவை மாலதி மைத்ரியின் கவிதைகள். மாலதி மைத்ரி தீவிர பெண்ணியச் செயல்பாட்டாளர். சங்கராபரணி, நீரின்றி அமையாது உலகு, நீலி, எனது மதுக்குடுவை ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். புதுச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டவர். விடுதலையை எழுதுதல், தந்தையரைக் கொல்வது எப்படி போன்ற கட்டுரை நூல்கள் முக்கியமானவை. மின்னஞ்சல் மூலம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

90களுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் பெண் குரல்கள் இத்தனை வீச்சுடனும் அதிக எண்ணிக்கையிலும் வெளிப்பட்டதற்கான காரணங்கள் எவை?
அம்பேத்கர், பெரியார் சிந்தனைகள் தொடங்கி வைத்த சமூக மாற்றங்களின் விளைவால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களுக்கும் அடிப்படைக் கல்வி சென்று சேர்ந்தது. உலக அளவிலான பெண்ணியப் போராட்டங்கள் இந்தியச் சூழலிலும் பல தாக்கங்களை உருவாக்கின. உலகமயமாதல் உருவாக்கிய வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெருக்கடி, இடப்பெயர்ச்சி போன்றவை கல்வியறிவு பெற்ற முதல் தலைமுறைப் பெண்களை அதிகம் பாதித்தது. அதுவரை ஆணை மையமாகவும் பெண்ணைத் துணை நிலையிலும் வைத்துப் பேசப்பட்ட அனைத்து அரசியலும் பொய்யானவை, வன்முறையானவை என்ற தெளிவு கிடைத்தது. பெண் என்ற தனித்த நிலையில் எனது அடையாளம் என்ன, எனது இருப்பின் அர்த்தம் என்ன என்ற தேடல் பெண்களைத் துரத்தியது. இத்தேடலின் தொடர்ச்சியாகப் பெண் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள, ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்ள, மரபாகத் தனக்கு அளிக்கப்பட்டிருந்த வரையறையை மீறவும், தன்னை அடைத்து வைத்த இடத்தை மீறவும், புதிய உலகை புதிய அரசியலை உருவாக்கவும் முனைந்த காலமிது. இந்துத்துவப் பிற்போக்கு வன்முறை அரசியல் தேசிய அளவில் விரிவடைந்தபோது பெண்கள் மீதான அடக்குமுறை புதிய வடிவங்களைப் பெறும் என்ற அச்சுறுத்தல் உருவானது. அதே சமயம் தலித் அரசியலின் எழுச்சி பொது அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வடிவத்தைத் தந்தபோது பெண்ணியம் தன் செயல்பாட்டுக்கான தேவையைக் கூடுதலாக உணர்ந்துகொள்ள முடிந்தது. பின் நவீனத்துவம், தலித்தியம் போன்றவை அதுவரை தமிழில் பேசப்படாத சிந்தனை - கோட்பாட்டு உரையாடல்களைத் தொடங்கி வைத்து ஆண் மைய அழகியல் மற்றும் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கின. பெண்ணியத்திற்கான மேலதிகத் தேவைகளை உணர்த்திக்கொண்டே இருந்தன. இவையெல்லாம் இணைந்துதான் பெண்களைப் புதிய அடையாளத்துடன் புதிய மொழியுடன் எழுதத் தூண்டின. நிறைய பெண்கள் எழுத வந்தார்கள்.

பெண்கள் கவிதைகள் சார்ந்தே அதிகம் இயங்கக் காரணம் என்ன?
பெண்களின் எழுத்து மட்டுமல்ல; ஒவ்வொரு சொல்லும் அசைவும் கண்காணிக்கப்படுகிறது. எழுதும் பெண்களின் மீது குடும்பம், சாதி, மதக்கட்டுப்பாடுகள், பண்பாட்டுத் தணிக்கைகள் என்பவை தொடர்ந்து கவிந்தபடியே உள்ளன. அந்த அழுத்தங்களுக்கு எதிரான போராட்டம் மிகக் கடுமையானது. பெண்களின் மீதான கட்டுப்பாடு, காவல், தணிக்கை மற்றும் தாக்குதல் இவைகளை மீறியே பெண் ஒவ்வொரு வரியையும் எழுத வேண்டியுள்ளது. கவிதை பெண்களுக்கான மொழியாக இருப்பதற்கு அதன் உழைப்புக் காலம் முதல் காரணமாக உள்ளது. தனக்குள் ஓயாமல் பொங்கிக்கொண்டிருக்கும் மொழியை சிறிய காலப்பகுதியில் பதிவு செய்வது எளிதாக அமைந்துவிடுகிறது. கவிதையின் உருவக, குறியீட்டு மொழி பல உள்ளடுக்குகளைப் பொதிந்துவைக்க வசதியாக உள்ளது. உடனடி கண்காணிப்பை மீற இது ஒரு உத்தி. அதனால் பெண்களின் இலக்கிய வடிவம் கவிதை என்ற தோற்றத்தைப் பெற்றுள்ளது.

புனைகதையிலும் சிவகாமி, பாமா, சு. தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி, சல்மா இவர்களின் எழுத்து இந்திய அளவிலும் உலக அளவிலும் தற்காலத் தமிழ் இலக்கியத்தை அடையாளப்படுத்திவருகின்றன.

உங்களைப் பாதித்த எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோர் என் அரசியல் நிலைப்பாட்டுக்குப் பாதையமைத்துத் தந்தவர்கள், அம்பை, பாமா, சிவகாமி, தோப்பில் முகமது மீரான், பிரேம் எழுத்துக்கள் என் அரசியல் வாசிப்புக்கும் புரிதல்களுக்கும் மிக நெருக்கமானவைகளாக உள்ளன. பல புதிய கேள்விகளை எனக்கு அறிமுகப்படுத்துகின்றன. பாரதியின் நவீனத்துவத்திற்கான அலைச்சலும் இன்குலாபின் அரசியல் தெளிவும் என் அரசியல் கவிதைகளுக்கு ஊக்கம் தருகின்றன.

சமூக, மனித உரிமை ஆர்வலராக இருந்து எழுத்தாளராக ஆனவர் நீங்கள். அந்த அனுபவங்கள் உங்கள் கவிதைகள் மீது ஏற்படுத்திய தாக்கம் பற்றிக் கூறுங்கள்.

தமிழ் சமூகத்தின் இறுகிப்போன சாதிய ஏற்றத்தாழ்வுகள், தொடர்ந்து நிகழும் சாதிய வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், குடும்பத்தைக் காப்பாற்ற ஓய்வும் உறக்கமும் இன்றி உழைத்துக்கொண்டிருக்கும் பெண்கள், அந்தப் பெண்களின் மீதான தினசரி வன்முறைகள். பெண் குழந்தைகளுக்கான கல்வி மறுப்பு. கோயில், ஊர், அரசு நிலங்கள் என அனைத்தையும் தன் உடமையாக்கிக்கொண்டு மக்களை ஏமாற்றும் ஆதிக்க சாதி அரசியல்வாதிகள் இவையே என்னையும் என் வாழிடத்தையும் சூழ்ந்திருப்பவை. இவை அனைத்தும் என் சிந்தனையை, உணர்வுகளைச் சிக்கலாக்கியவை. என் அடையாளம், சுயம் என்பவை இவற்றைக் கடந்து உருவாக வேண்டியதாக இருந்துவருகின்றன. இவை தொடரும்வரை நான் என்பது என்ன என்ற கேள்விதான் இதுவரை எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கேள்விகளுடன் நான் அணுகும் அனைத்தும் அரசியலாக இருப்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல இயல்பானதாகவும் உள்ளது.

கவிஞராக உங்களை ஈழ விடுதலைப் போராட்டமும், முள்ளிவாய்க்கால் துயரமும் கடுமையாக பாதித்துள்ளன. தமிழர்களின் தார்மீகத் தோல்வியாக அதை எண்ணுகிறீர்களா?
ஈழத்தில் நடந்த சாட்சிகளற்ற தமிழனப் படுகொலையின் சாட்சியாக நின்று தமிழ்ப் படைப்பாளிகள் தொடர்ந்து பேசியிருக்க வேண்டும். யு. ஆர். அனந்தமூர்த்தி ‘மோடி பிரதமராக இருக்கும் இந்தியாவில் நான் வாழ விரும்பவில்லை’ என்று கருத்து வெளியிட்டார். இந்தத் துணிவு தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஏன் இல்லாமல் போனது? “ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காக்கத்தவறியதுடன் தமிழினப் படுகொலைக்கு துணைபோகும் இந்தியா அரசின் குடிமக்களாக வாழ்வது அவமானம்” என்பது போன்ற ஒரு அறிக்கை வெளியிட்டு மத்திய, மாநில அரசுகள் கொடுத்த விருதுகளைத் திருப்பி அனுப்ப மூத்த படைப்பாளிகள் எவருக்கும் தோன்றவில்லை. ஈழப் படுகொலையின் துயரம் பாதிக்காமல் தமிழகத்தில் ஒருவர் வாழ முடியும் என்ற நிலையைப் பார்த்து அச்சப்படுகிறேன்.

உலகமயமாதல் தாக்கங்களுக்கு உட்பட்ட பிறகும் குடும்பம், சாதி என்னும் அடிப்படை அமைப்பு வலுவாகவே உள்ளது. பழமைவாதக் கருத்துகளும் மேலெழுந்துள்ளன இதற்கான காரணங்கள் என்ன?
பிறப்பிலிருந்து இறப்புவரை சாதிய அடையாளத்துக்கு ஒவ்வொரு காலத்துக்கேற்பப் புது வடிவங்கள் தரப்படுகின்றன. உலகமயமாதல் மனிதரின் புற அடையாளத்தை நவீனமாக மாற்றியிருக்கிறது. பாட்டனைவிட பேரனின் சாதி வெறி கொடிய வடிவத்தை அடைந்திருக்கிறது. அன்று மணியடித்து ஊர்க்கோயிலில் கூடித் திரண்டார்கள். இன்று கைபேசி, குறுஞ்செய்தி, முகநூல், வலைதளம், இணையதளம் வழியாக படை திரட்டிக்கொண்டு தலித்துகளைக் கொன்று கொள்ளையடிக்கிறார்கள். மரபான ஒரு சாதிக் குடும்பம்தான் சாதியடையாளத்தின், பெண்ணடிமைத்தனத்தின் அடிப்படை. மரபான குடும்ப அமைப்பை அழித்தால்தான் சாதியையும் பெண்ணடிமைத்தனத்தையும் ஒழிக்க முடியும். முதலில் அரசியல் செயல்பாட்டாளர்களும் அறிவுஜீவிகளும் உள்சாதி உறவுகளை விட்டு வெளியேறி சாதிய அடையாளங்களை மறுக்க வேண்டும். சுய சாதி நண்பர்களை மட்டும் வைத்துக்கொள்ளுதல், சாதியச் சடங்குமுறைத் திருமணங்களை ஆதரித்தல் என்பவைதான் நவீன சாதிவெறியின் வடிவங்கள். நவீன சிந்தனைகளை ஏற்றவர்கள் தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு சாதி மறுப்பு துணைகளைத் தேர்ந்தெடுக்க உரிமை அளிக்க வேண்டும், வழிகாட்ட வேண்டும்.

உங்களது சமீபத்திய கவிதைகளில் வெறுப்பின் மொழி இருக்கிறது. ரௌத்திரத்துக்கும் வெறுப்புக்கும் வித்தியாசம் இல்லையா?
எனது தற்போதைய கவிதைகளில் உள்ள கோபம், வெறுப்பு இரண்டுமே அரசியல் போராட்டங்கள் அடைந்துள்ள நிலைமைகள் பற்றியது. ஈழத்தின் இனப்படுகொலையை தம் துயரமாக உணராத அதே போன்ற தன்மையுடன் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான மக்களின் போராட்டத்தையும் தமிழகப் பொது நினைவு பொருட்படுத்தாத நிலையை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? மதவாத, இந்துத்துவ வன்முறை ஒரு தேசிய சக்தியாகப் பெருகிவரும் சூழலில் வெறுப்போ, கோபமோ அனைத்திற்கும் உள்ளாகவிருப்பது துயரம் சார்ந்த உளவியல்தான். என் கவிதைகளை உங்கள் மொழியில் வாசித்துப் பாருங்கள் அந்த துயரம் உள்ளிழுக்கும். அதற்குப் பின் உங்கள் அரசியல் செயல்பாடு பற்றிய கேள்விகள் முன்னெழும்பும்.                      

தி இந்து -12-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.