Sunday, October 13, 2013

இலங்கை வடக்கு மாகாணத்தில் சமரசம். 9 உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு !



இலங்கை வடக்கு மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பதவி ஏற்காத ஒன்பது உறுப்பினர்களும் திங்கள்கிழமை (அக்டோபர் 14) பதவி ஏற்பார்கள் என்று ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

கடந்த சில நாள்களாக நீடித்து வந்த பிரச்னையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத் தேர்தலில் 30 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழ் கட்சிகளின் 9 உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பதவி ஏற்கவில்லை.

இதற்கு வடக்கு மாகாண அமைச்சர்கள் நியமனத்தில் கருத்துவேறுபாடு, அதிபர் ராஜபட்ச முன்னிலையில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பதவி ஏற்று கொண்டது ஆகியவை அவர்களின் அதிருப்திக்கான காரணங்கள் என்று கூறப்பட்டது.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழ மக்கள் விடுதலை முன்னணி கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சனிக்கிழமை கூட்டாகச் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து அங்கம் வகிப்பதாக தெளிவுபடுத்தினர்.

"தேர்லுக்கு முன்பு ஒற்றுமையுடன் சேர்ந்து வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.
ஆனால் தற்போது இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், பதவி ஏற்காத 9 உறுப்பினர்களும் முல்லைத்தீவில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் பதவி ஏற்பார்கள்' என்று ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.                                                                                                                       

தினமணி - 13-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.