Sunday, October 13, 2013

தினமணியில் சுவையான பகுதி மெய்யாலுமா ? மாதிரிக்கு ஒருநாள் - 13-10-2013




நம்ப முடியவில்லைதான், ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. வரப்போகும் மக்களவைத் தேர்தலில் உடல்நிலை காரணமாக "அன்னை' போட்டியிடப் போவதில்லையாம். இந்திரா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மருமகளுக்கு பதிலாகப் பேத்தி போட்டியிடப் போகிறாராம். ஒருவேளை பிரியங்காவும் போட்டியிட முடியாமல் போனால்? வாரம் தவறினாலும் அவரது கணவர் ராபர்ட் வதேரா, ரேபரேலி தொகுதியில் வலம் வருவது தவறுவதில்லையாம். அதனால், அவரேகூடப் போட்டியிடக் கூடும் என்கிறார்களே, மெய்யாலுமா?
===
அமைச்சர் அப்பாவியாக இருந்தால் அதிகாரிகளுக்கு கொண்டாட்டம்தானே! அதிகாரிகளுக்கு மட்டுமா, அமைச்சரைச் சுற்றிப் பற்றி இருக்கும் தொண்டர்கள்பாடு அதைவிடக் கொண்டாட்டம். தீபாவளி வந்ததும் வந்தது, முத்துக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த அமைச்சரைச் சுற்றி இருக்கும் அதிகாரிகளும், ரத்தத்தின் ரத்தங்களும். சுற்றுலாப் போகக் கூட வருமானம் இல்லாத துறையில் இந்த ஆண்டு ரவுண்டி கட்டி கல்லாவாம். தீவாக இருந்த இடத்தில் திடலெல்லாம் கடைகள் என்று வந்து விட்ட பிறகு கேட்கவா வேண்டும்? இடநெரிசலில் விழி பிதுங்கி நிற்கிறதாம் அந்தத் திடல். கடைக்குக் கடை கல்லா கட்டுவது தெரியாமல் "முருகா' "சண்முகா' என்று பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாராமே அமைச்சர், மெய்யாலுமா?
===
தேவர்களில் தலைவனான இந்திரனை வேதங்கள் "சக்ரா' என்று குறிப்பிடுகின்றன. அதிதியின் மகனான இந்திரனும் அக்னியும் இரட்டைக் குழந்தைகள். இந்திரனின் குமாரிதான் திருப்பரங்குன்றத்தில் முருகனின் கைப்பிடித்த மனைவி தேவயானி. 

இந்திரனைப் பற்றிய குறிப்புகள் இந்து மதத்தில் மட்டுமல்ல பார்சிக்களின் சொராஸ்ட்ரியன் மதத்திலும் காணப்படுகிறது. தீவா என்று சொராஸ்ட்ரியன் மதத்திலும், "சக்ரா' என்று பௌத்த மதத்திலும், "ஓட்சாமின்' என்று பர்மாவிலும், ப்ரா இன் என்று தாய்லாந்திலும், "இந்தேரா' என்று மலேசியாவிலும், "தினிதான்' என்று சீனாவிலும், "டாய்ஷாகுதேன்' என்றும் ஜப்பானிலும்கூட இந்திரன் என்கிற தேவதை அறியப்படுவதுண்டு.
÷உடன்பிறப்புகளுக்குக் கழகத்தின் வரலாறும் கொள்கைகளும் தெரியவில்லை என்று வருத்தப்பட்டாராம் அடுத்த வாரிசு. 

அன்பகத்தில் கழகப் பேச்சாளர்களை வரவழைத்து "உங்களுக்கெல்லாம் கழகக் கொள்கைகளைச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்' என்று கூறி அவர் பரிந்துரைத்த பெயரைக் கேட்டதும் பலருக்கும் சிரிப்பு வந்து விட்டதாம். காரணம், கழகத்தின் வரலாறையும் கொள்கைகளையும் பற்றிப் பாடமெடுக்க அவர் தேர்ந்தெடுத்த பெண்மணி காங்கிரஸ், கா.கா.தே.கா. (காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்), அ.தி.மு.க. என்று பல கட்சிகள் மாறி, இப்போது தி.மு.க.வில் சங்கமித்திருப்பவர். நல்ல வேளை குஷ்புவிடம் பாடம் கேட்கச் சொல்லாமல் விட்டாரே என்று கூறிச் சிரித்தார்களாமே வந்திருந்த கழகப் பேச்சாளர்கள், மெய்யாலுமா?
===
இரண்டு முறை அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தவரும், மத்திய அமைச்சரவையில் மிக அதிக காலம் அமைச்சராக இருந்து சரித்திரம் படைத்தவருமான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தலைவரின் பெயர் கொண்ட அதிகாரி அவர். பெயரிலேயே தங்கம் வைத்திருப்பவர். நேர்மைக்குப் பெயர் போனவர். அவரை ஆணையராகப் போட்டது முதலே தானியக் கிடங்குகளில் இருக்கும் பெருச்சாளிகளைப் போல கிடைத்ததை எல்லாம் கபளீகரம் செய்யும் அதிகாரிகளும் ஊழியர்களும் கொதிப்படைந்து விட்டனராம். இவர்களுக்குத் தொழிற்சங்கங்கள் ஆதரவுக்கரம் நீட்டினவாம். தொழிற்சங்கங்களின் கட்சி பேதமற்ற கூட்டணியின் கூட்டு முயற்சியில்தானாமே அந்த நேர்மையான அதிகாரி மாற்றப்பட்டார், மெய்யாலுமா?
===
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், வாரத்தில் ஐந்து நாள்களில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் முகாம் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தைத் தொடங்கிய அன்றைய ஆணையர் ஆர். நடராஜ் தானே மக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டது காவல் துறை மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதன் வெற்றி, பிற மாநிலங்களிலும் இதை செயல்படுத்த வைத்தது.

நடராஜுக்குப் பிறகு வந்த ஆணையர்களும், முடிந்தவரை மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் வந்து மனுக்களைப் பெற்று, குறைகளை உடனடியாகத் தீர்த்து வந்திருக்கிறார்கள். கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பதவி வகிக்கும் இப்போதைய காவல் துறை ஆணையர் இதுவரை ஒருநாள் கூட மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு வந்து மனுக்களைப் பெற்றதே இல்லையாமே. குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்தான் மனுக்களை அவர் சார்பில் பெறுகிறாராமே, மெய்யாலுமா?
===
மூன்றாவது அணி என்றாலே, யார் தலைவர் என்கிற குழப்பம் வந்துவிடும் போலிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க. இரண்டு கட்சிகளும் இடம் பெற்றால், யார் அந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிப்பது என்பதில் சிக்கல் இப்போதே தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். வைகோ தலைமையில் கூட்டணி என்றால் தே.மு.தி.கவும், விஜயகாந்த் தலைமையில் கூட்டணி என்றால் வைகோவும் அந்த அணியில் இருக்கத் தயாராக இல்லையாம். இந்தக் குழப்பத்தை பயன்படுத்தி மூன்றாவது அணி வராமல் தடுக்கும் முயற்சியில் அறிவாலயம் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே, மெய்யாலுமா?
===
சென்னை மாநகரிலுள்ள வட்டச் செயலாளர்களும், பகுதிச் செயலாளர்களும், மாமன்ற உறுப்பினர்களும் கையில் "கடன் விண்ணப்பம்' என்கிற காகிதத்துடன் தான் வலம் வருகிறார்கள். ஏறத்தாழ ஒரு லட்சம் விண்ணப்பங்கள் இதுபோல அவர்களுக்கு வாரி வழங்கப்பட்டிருக்கிறதாம். வருமானச் சான்றுடன் இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பதினைந்தாயிரம் ரூபாய் கடன் தரப்படும் என்று சொல்லப்படுகிறதாம்.
அதை நம்பி 150 ரூபாய் கையூட்டுக் கொடுத்துப் பலர் வருமானச் சான்று பெற்று விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். பணம்தான் வந்து சேர்ந்தபாடில்லை. "இன்னா துரை, கடன் தர்ரேன்னு சொல்லி ஏமாத்தரே..' என்று கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் வட்டத்தையும், பகுதியையும், மாமன்ற உறுப்பினர்களையும் நச்சரிக்கத் தொடங்கி விட்டனர்.
மாநகராட்சிக்கும் இந்த விண்ணப்பத்திற்கும் தொடர்பில்லை என்கிறாராம் ஆணையர். "அப்படியானால் கடன் தரப்போவது எந்த சாமி?' என்று பூர்த்தி செய்து தந்தவர்கள் விழிக்கிறார்களாமே, மெய்யாலுமா?
===
மருதுபாண்டியர் பூமியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களுக்கிடையேயான கோஷ்டிப்பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, அரசு விழாக்களில் தான் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவது பொறுக்காமல் சுதர்சனச் சக்ரத்தை வீசத் தொடங்கி இருக்கிறாராம் மாநிலங்களவை உறுப்பினரான அமைச்சர். யார் யார் எவ்வளவு "நிதி' சேர்த்திருக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை சேகரித்திருக்கும் அவர், விரைவிலேயே சிதம்பர ரகசியங்களைப் போட்டு உடைக்க இருக்கிறாராம். அதற்கு, தில்லியிலுள்ள தலைமையேகூட அவருக்குத் துணை நிற்கிறதாமே, மெய்யாலுமா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.