Friday, October 4, 2013

தமிழகத்தில் 2 அரசுப் பள்ளிகளில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் அறிமுகம்




இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இரண்டு அரசுப் பள்ளிகளில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தை உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தத் தொழில்நுட்பத்தை அமைச்சர் பழனியப்பன் தொடங்கிவைத்தார்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வர்கள் இல்லாமலேயே இணையத்தில் தகவல்களை சேமித்து வைக்கலாம். இணைய ஆய்வகம் வாயிலாக மாணவர்கள் தங்களது அறிவு மற்றும் திறனை பிற பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும்.

இந்த இரண்டு பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கான பாடங்கள் அனிமேஷன் வடிவில் வழங்கப்பட உள்ளன. இதற்காக இரண்டு பள்ளிகளிலும் கிளவுட் கம்ப்யூட்டிங் லேப் (Cloud Computing lab) அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50 லட்சம் செலவில் 11 லேப்-டாப்கள், 13 டேப்லெட்கள், இன்டராக்டிவ் போர்டு, புரொஜக்டர், பிரிண்டர், "வைஃபை' இணைப்பு உள்ளிட்டவை ரூ.50 லட்சத்தில் வழங்கப்பட்டன.

லர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் மற்றும் டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து இவற்றை வழங்கியுள்ளன.
லர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை ஆகியவற்றின் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த மேம்பட்ட கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சண்முகவேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி, 04-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.