Friday, October 4, 2013

5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு; 'நோட்டா' வசதி அறிமுகம்!




டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இந்தத் தேர்தலில், வேட்பாளர்களை நிராகரிக்க வகை செய்யும் 'நோட்டா' வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. 'None Of The Above' 

(மேற்குறிப்பிட்டுள்ளோரில் எவருமில்லை) என்பதன் சுருக்கமே NOTA (நோட்டா) ஆகும். 

5 மாநிலத் தேர்தல் தேதிகள் மற்றும் இடைத்தேர்தல்கள் குறித்த அறிவிப்பை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் வெளியிட்டார். 
 
நவ.19-ல் தொடங்கி டிச.4 வரை 

அதன்படி, ராஜஸ்தானில் டிச.1-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மத்திய பிரதேசத்தில் நவ.25 ஆம் தேதியும், மிசோரம் மாநிலத்தில் டிச.4 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

டெல்லியில் டிச.4-ல் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் நவ.11 மற்றும் 19 தேதிகளில் இரு கட்டமாகவும் வாக்குப் பதிவு நடைபெறும். இந்தத் தேர்தல்களின் முடிவுகள், டிசம்பர் 8-ல் வெளியாகும். 

'நோட்டோ' அறிமுகம் 

இந்த 5 மாநிலத் தேர்தல்களில், வேட்பாளர்களை நிராகரிக்க வகை செய்யும் பட்டனை அறிமுகப்படுத்தப்படுகிறது. தேர்தலில், வேட்பாளர்களை நிராகரிக்க தனி வசதி செய்து தரப்படுவது இதுவே முதல் முறை. 

அதன்படி, அனைத்து வாக்கு எந்திரத்திலும் வாக்காளர்கள் விரும்பினால், வேட்பாளர்களை நிராகரிக்க வகை செய்வதற்கு தனி பட்டன் இடம்பெறும். தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் ஏற்காத பட்சத்தில், வாக்காளர்கள் இந்தப் பட்டனை நாடலாம். இந்த வசதி 'நோட்டோ' அழைக்கப்படுகிறது. 

ஏற்காடு இடைத் தேர்தல் 

ஏற்காடு இடைத் தேர்தல் டிசம்பர் 4-ல் நடைபெறும். நவம்பர் 9-ம் தேதி முதல் நவம்பர் 16-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். நவம்பர் 20-ம் தேதி வேட்பு மனுத்தாக்கலை திரும்பப் பெற கடைசி நாள்.

இந்த இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு, டிசம்பர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி இந்து, 04-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.