Friday, July 19, 2013

இரண்டாம் உலகப்போரில் வீசிய வெடிகுண்டு ஹங்கேரியில் சிக்கியது !



இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட சோவியத் யூனியன் தயாரிப்பான 100 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் ஹங்கேரியில் செகஸ்பெகர்வர் மத்திய நகரத்தில் இருந்து 10,000 பேரை போலீஸார் வெளியேற்றினர்.

புடாபெஸ்ட் தென்மேற்கு பகுதியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சிறுவர் பள்ளி அருகே மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து செகஸ்பெகர்வர் மாகாண தலைமை அலுவலர் நார்பெர்ட் டான்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"கடந்த சில நாள்களில் ஹங்கேரியில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான வெடிகுண்டு இதுதான். இந்த குண்டில் 25 கிலோ வெடி பொருள்கள் நிரம்பியுள்ளது' என்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது கடைசி மாதத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் பிரிட்டன் நாட்டுப் படைகளால் ஹங்கேரியில் வீசப்பட்டன. இதில் வெடிக்காத பல குண்டுகள் கட்டடப் பணிகளின் போது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு 14 முறை இந்தப் பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புடாபெஸ்ட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால், 1500 பேரை போலீஸார் புதன்கிழமை வெளியேற்றினர்.

வெடிகுண்டுகள் அனைத்தும் யாருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.                                                                                                  

நன்றி ;- தினமணி, 19-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.