Friday, July 19, 2013

மாடத்தட்டுவிளை என்ற ஒரே கிராமத்திலிருந்து 117 பேர் கண்தானம் !

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை என்ற கிராமத்தில் மட்டும் 117 பேர் கண்தானம் செய்து அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றனர்.

இந்த கிராமத்தில் செயல்படும் புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திருஇயக்கமே இந்த கண்தான விழிப்புணர்வுக்கு காரணமாக இருந்து பலரது வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறது.

மாடத்தட்டுவிளையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கண்தான விழிப்புணர்வு என்ற விதை ஊன்றப்பட்டது.

கோட்டாறு மறைமாவட்ட இளைஞர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் பங்கேற்றனர். அந்த நிகழ்வுகளில் கண்தானம் குறித்து பேசப்பட்ட கருத்துகள் இந்த இளைஞர்களை ஈர்த்தது. அதன் விளைவாக புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திருஇயக்கம் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் மாடத்தட்டுவிளையில் ஆலய பங்குத்தந்தையாக இருந்த அருள்தந்தை டோமினிக், துணை பங்குத்தந்தை டைட்டஸ் மோகன் ஆகியோர் கண்தானம் குறித்த விழிப்புணர்வை அந்த கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.

திருக்குடும்ப திருஇயக்கத்தைச் சேர்ந்தவர்களின் தொடர் முயற்சியால் இப்போது இந்த கிராமத்தில் இறந்தவர்களிடமிருந்து கண்களை தானமாக வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்பட்டிருக்கிறது.

இந்த விழிப்புணர்வு காரணமாக இந்த கிராமத்திலிருந்து மட்டும் இதுவரை 117 பேரிடமிருந்து கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலுள்ள அகர்வால் கண் மருத்துவமனையுடன் கடந்த சில ஆண்டுகளாக கைகோர்த்துள்ள திருக்குடும்ப திருஇயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் கிராமத்தில் இறந்தவர்கள் குறித்து மருத்துவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து கண்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, கண் தெரியாதவர்களுக்கு அவற்றை பொருத்துவதற்கு சேவையாற்றுகிறார்கள்.

இந்த இயக்கத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என்று இப்போது 40 பேர் இருக்கிறார்கள். மண்ணில் புதைக்கும் கண்களை மனிதரில் விதைப்போம், கண்தானம் செய்வோம் காலமெல்லாம் வாழ்வோம் என்ற எண்ணத்துடன் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்தான விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளதாக இந்த இயக்கத்தின் இயக்குநரும், புனித செபஸ்தியார் ஆலய பங்குத் தந்தையுமான அருள்தந்தை சேசுரத்தினம் தெரிவித்தார்.

இதுபோல் உடல்தானம், ரத்ததானம் குறித்தும் இந்த இயக்கத்தினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த கிராமத்தில் தொடர்ந்தார்போல் ஆலய பங்குத் தந்தையர்களாக பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரியார்கள் கண்தானம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள்.                                                                                     

நன்றி :- தினமணி, 19-07-2013

மாடத்தட்டுவிளை மாத்திரமல்ல அருகிலுள்ள அப்பட்டுவிளை, முளகுமூடு, பாலவிளை, செட்டிசாரவிளை, செம்பருத்திவிளை, மாத்திரவிளை, ஏற்றக்கோடு ஆகிய கிராமங்களிலும் இப்போது கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.
மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் மாடத்தட்டுவிளை பகுதி மக்களுக்கு திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற கண்வங்கி தொடக்க விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருக்குடும்ப திருஇயக்கத்தினர் கெüரவிக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.