Sunday, July 14, 2013

லால்குடி அருகே பழைமை வாய்ந்த கோவிலில் புதையல் கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பழமை வாய்ந்த கோயிலில் மண் கலசத்தில் புதையல் கண்டெடுக்கப்பட்டது.

லால்குடி அருகேயுள்ள திருமணமேடு ஊராட்சியில் உள்ளது பஞ்சநதீஸ்வரர் கோயில்.

இந்த கோயிலைப் புனரமைத்து, குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் இந்து அறநிலையத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கோயிலின் மகாமண்டபம் அருகே தூண் அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது, மண் கலசம் ஒன்று கிடைத்தது. இதை அங்கிருந்த பணியாளர்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அறிந்த வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு லால்குடி வருவாய் வட்டாட்சியர் ஞானமணி ஸ்டெல்லா தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண் கலசம் சுமார் 6 கிலோ எடை கொண்டதாகவும், அதன் உள்ளே 33 காசுகள் மண் படிந்த நிலையிலும், மீதமுள்ளவை மண் கலசத்தில் மண்ணோடு ஒட்டியுள்ள நிலையில் உள்ளன.

கோயிலில் வேறு எதுவும் கிடைத்ததா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு லால்குடி போலீஸாருக்கு லால்குடி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.                                                                                                                        

நன்றி :- தினமணி, 14-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.