Sunday, July 14, 2013

உத்தரகண்டில் உதவும் கரங்களாய் ஆஸ்ரமங்கள் !

இந்தியாவின் வடபகுதியில் இயற்கை எழில் கொஞ்சும், ஆன்மிகக் காற்று வீசும் தேசம் என்றால் நம் கண் முன்னே சட்டென வந்து நிற்பது உத்தரகண்ட் மாநிலம்தான்.

 வடக்கில் திபெத்தையும், கிழக்கில் நேபாளத்தையும் எல்லையாகக் கொண்டு அமைந்துள்ள பசுமையான மலைகளையும், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களையும், மலையேற்றம், சிகரமேற்றம், பனிச்சருக்கு, படகுசவாரி என பல இயற்கைச் சாகச அம்சங்களையும் கொண்டது உத்தரகண்ட்.
 ஏரி மாவட்டமான நைனிடாலையும், "மலைகளின் ராணி' என்று போற்றப்படும் மசூரியையும் தன்னகத்தே கொண்ட பிரதேசம் இது. "தேவர்களின் பூமி' என்றும், "பூலோக சொர்க்கம்' என்றும் சுற்றுலாவாசிகளால் வருணிக்கப்படும் புனிதத் தன்மை பெற்றதும்கூட.

 இந்த மாநிலத்தின் இன்றைய நிலையோ பரிதாபத்துக்குரியது. ஆம், உத்தரகண்ட் இன்றைக்கு உருக்குலைந்து கிடக்கிறது. பெரு மழையும், வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மரண ஓலங்களும், கூக்குரல்களும், அபலைக் கண்ணீரும் சேர்ந்து சோகத்தை வெளிப்படுத்தும் மாநிலமாக துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 கடந்த ஜூன் மாதம் பிற்பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் அதன் நீட்சியாக உருவான நிலச்சரிவுகளும் இயற்கையின் கோரத்தாண்டவமாக மாறிப் போய்விட்ட அவலம்தான் இதற்கெல்லாம் காரணம்.

 உயிரிழந்தோர் ஆயிரம் பேர் என்றால், காணாமல் போனோர் பல ஆயிரம் பேர். மீட்கப்பட்டோர் லட்சம் பேர் எனப் பாதிக்கப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

 "சார் தாம்'கள் எனப்படும் நான்கு புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பு பெருந்துயரமாக மாறியது என்றால் அது நிதர்சனம்.
 ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும், சாதகர்களும் விரும்பி வாசம் செய்யும் பிரதேசத்தில் இத்தகைய பேரிடர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவதில் அரசுடன் சேர்ந்து உதவிக் கரங்களாய் ஆஸ்ரமங்களும் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதுதான் ஆறுதல் அளிக்கும் விஷயம்.

 ரிஷிகேஷில் உள்ள பல ஆஸ்ரமங்கள் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் பாதித்தோருக்கு சிறிதும் தயங்காமல் உதவிக் கரம் நீட்டுவதில் முக்கியப் பங்கு வகித்ததைக் கேள்விப்படும் போது நம்மால் புருவத்தை உயர்த்தாமல் இருக்க முடியவில்லை.

 உத்தரகண்டில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் ருத்ரப் பிரயாகை, சமோலி, உத்தரகாசி, பிதோரகர்ஹ் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தவிர, ரிஷிகேஷ் வழியாகப் பாய்ந்தோடும் கங்கையின் கரையோரப் பகுதியும் வெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பவில்லை.

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை அரசுடன் சேர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், பாபா ராம்தேவின் பதஞ்சலி யோக பீடம், அகில இந்திய காயத்ரி பரிவார், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம், சிவானந்த ஆஸ்ரமம், தயானந்த ஆஸ்ரமம், ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப் குருத்துவாரா, கோவிலூர் மடம், ஆந்திரா ஆஸ்ரமம் என நூற்றுக்கணக்கான ஆஸ்ரமங்கள் தத்தமது சக்திக்கேற்ப நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.

 துயர் துடைப்புப் பணிகள் குறித்து ரிஷிகேஷில் உள்ள முக்கிய ஆஸ்ரம நிர்வாகிகள் தங்களது அனுபவங்களை எம்மிடம் பகிர்ந்து கொண்டனர்:

 வேதாந்த ஆச்சார்ய சாந்தாத்மானந்த
 சரஸ்வதி சுவாமிகள்
 சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் :


 வெள்ளச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட மக்களுக்கு பசியாற்றுவதற்காக பூரி, உருளைக்கிழங்கு தரப்பட்டன. பிறகு ரிஷிகேஸýக்கு அழைத்து வரப்பட்டு ஆஸ்ரமத்தில் தங்கவைக்கப்பட்டு உணவும், தேவைப்படுவோருக்கு மாற்று உடைகளும் வழங்கப்பட்டன. ஆஸ்மரத்தின் சார்பில் சிவபுரியிலும், ஸ்ரீநகரிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்ரீதர், ககன் தீப் சிங் ஆகியோர் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்து மீட்கப்பட்ட மக்களைத் தமிழகத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு ஆஸ்மரத்தின் சார்பில் தேவையான உதவிகளும் செய்யப்பட்டன. ரிஷிகேஷ் பகுதியில் கங்கைக் கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து மூன்று நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது.

 சமோலி மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. முருகேசன் ஆஸ்மரத்தைத் தொடர்பு கொண்டு நிவாரணப் பணிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சமோலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆஸ்ரம நிர்வாகத்தின் கீழ் இயங்கும் "எய்ம் ஃபார் சேவா' அமைப்பு, தமிழகத்தின் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமோலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது.

 இதன்படி, சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை மாவு, 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ பால் பவுடர், 2 கிலோ துவரம் பருப்பு, டீத் தூள் பாக்கெட் ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பணியில் ஆஸ்ரமத்தில் வேதம் படித்து வரும் 30 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணி சிறப்பாக முடிக்கப்பட்டு விட்டால் அடுத்ததாக 5 ஆயிரம் குடும்பங்களுக்கு போர்வை, ஆடைகள் வழங்கவும் உள்ளோம்.

 விசாலாட்சி மெய்யப்பன்
 கோவிலூர் மடம் நிர்வாகி: 


 கங்கையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மடத்திற்குள் புகுந்துவிட்டது. மடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் தாழ்வான பகுதி வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து சில அடிகள் உயரத்திற்கு சகதியும் சேர்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. பிற இடங்களில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டோருக்கு மடத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. சமோலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, துணிமணிகள், உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

 சுவாமி பத்பநாபானந்த ஜி
 தெய்வீக வாழ்க்கைச் சங்கம்
 (சுவாமி சிவானந்த ஆஸ்ரம்) நிர்வாகி: 


 கங்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பாதிப்பு. கங்கையின் சீற்றத்தை இந்தப் பேரிடர் உணர்த்துவதாக உள்ளது. ரிஷிகேஷ் கங்கைக் கரையோரத்தின் தாழ்வான பகுதியானதால் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் வீடுகளின்றி அவதியுற்றனர். அவர்களை அங்கிருந்து மீட்டு அவர்களுக்கு என உணவு சமைத்து பொட்டலங்களாக வழங்கப்பட்டன. தங்குமிடமும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கும் வகையில் பாதிக்கப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஆஸ்ரமம் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிவாரணப் பணியில் ஆன்மிக அமைப்புகள் ஒருங்கிணைந்து  ஈடுபட்டோம்.
 .
 குமார்
 ஆந்திர ஆஸ்ரமம் (திருப்பதி திருமலை தேவஸ்தான
 ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்) ஊழியர்:


 மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டோர் ஆந்திர ஆஸ்ரமத்தில் தங்க வைக்கப்பட்டனர். உணவு, உறைவிடத்துடன் அவர்களுக்கு மருந்து, சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டன. ஆந்திர அரசு ஏற்பாட்டில் ஊர் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உறவினர்களைத் தொடர்பு கொள்ள ஆஸ்மர வளாகத்தில் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டது. 450 பேருக்கு மருத்துவ வசதி அளிக்கப்பட்டது.

 தர்ஷன் சிங்
 குருத்வாரா ஸ்ரீ ஹேம்குண்ட் சாஹிப் மேலாண்மை அறக்கட்டளை மேலாளர்:


 இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவதற்காக இரவு, பகல் பாராமல் 10 லட்சம் ரொட்டி, சப்ஜி தயாரித்து வழங்கினோம். தொடர்ந்து உணவுப் பொருள்கள் வழங்கி வருகிறோம். நிவாரணப் பணியில் தாமே முன்வந்து இளைஞர்கள் பலர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதற்காக ஹரியாணா, பஞ்சாப், தில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர் என்று கண்களில் நீர் கசிய உருக்கத்துடன் கூறுகிறார் தர்ஷன் சிங்.வெள்ள நிவாரணப் பணிகளில் ஆஸ்ரமங்கள் காட்டி வரும் ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் "பிரார்த்திக்கும் உதடுகள் போன்று சேவை செய்யும் கரங்களாகவும்' ஆஸ்மரங்கள் திகழ்வதை நமக்கு உணர்த்துவதாக  உள்ளது.
 .
 -வே.சுந்தரேஸ்வரன்
 படங்கள்: டி.ராமகிருஷ்ணன் 


நன்றி :- தினமணி ஞாயிறு கொண்டாட்டம், 14-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.