Saturday, July 6, 2013

படிக்கலாம், அழிக்கலாம், புறக்கணிக்கலாம்! - முல்லை


வாசிப்பு வழக்கம் இன்று அதிகரித்திருக்கிறதா குறைந்திருக்கிறதா என்னும் கேள்விக்கு, நூலகங்கள் வளர்ந்திருக்கின்றனவா, குறைந்திருக்கின்றனவா என்னும் கேள்வியே பதிலாக அமைந்துவிடுகிறது. நூலகம் தோன்றிய கதையை வண்ணமயமாகப் பதிவு செய்திருக்கிற அதே வரலாற்றில்தான் நூலகங்கள் புறக்கணிக்கப்படும் கதையும் பக்கம் பக்கமாகப் பதிவாகியுள்ளன. சில பக்கங்களை மட்டும் இங்கே புரட்டுவோம்.

இனி அனைவரும் படிக்கலாம் 

நூலகத்தின் சரித்திரம் என்பது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள், களிமண்களைத் தகடுகளாக்கி அதில் தங்கள் கதைகளை கோட்டோவியங்களாகக் கிறுக்கி கோயில்களிலும், அரண்மனைகளிலும் வைத்துப் பாதுகாத்தார்கள். அதுதான் நூலகத்தின் தொடக்ககால கட்டுமானம்.

நூலகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அச்சுத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டபோது நிகழ்ந்தது. கிபி 18ம் நூற்றாண்டில் தான் பொது நூலகத்தின் தேவை பெருமளவில் உணரப்பட்டது. 1897ல் நூலகச் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. இங்கிலாந்து முழுவதும் பொது நூலகமும் நூலகச் சட்டமும் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிஷ் காலனிகளிலும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

‘கன்னிமரா என்றொரு அற்புதம்!’

லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியக வளாகத்தில் ஒரு நூலகம் இருப்பதைப் போல சென்னை ராஜதானியில் உள்ள அருங்காட்சியக வளாகத்திலும் ஒரு நூலகம் உருவாக்க வேண்டும் என்று விரும்பினார் அருங்காட்சியகக் காப்பாளர் கேப்டன் ஜீன் மிட்செல். இங்கிலாந்தில் குடிமையியல் பயிற்சி வழங்கிய ஹெய்ல்பரி கல்லூரியில் உபரியாக இருந்த நூல்களை சென்னை ராஜதானிக்கு அனுப்பி வைக்குமாறு தலைமை நிர்வாகத்துக்கு இவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து 1860ல் பெருமளவு நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதைக்கொண்டு சிறிய நூலகம் ஒன்றைத் தொடங்கினார் மிட்செல். சுமார் 30 ஆண்டுகள் அந்த வளாகத்திலேயே நூலகம் இயங்கியது. 

1890ல் சென்னை ஆளுநராக செயல்பட்ட கல்வியாளர் கன்னிமரா பிரபு, தனியாக ஒரு நூலகம் கட்ட முடிவு செய்தார். 1890 மார்ச் 22 அன்று பாந்தியன் திடலில்ரூ. 6 லட்சம் செலவில் நூலகத்துக்கான கட்டடப் பணிகளைத் தொடங்கிவைத்தார். கலைநுணுக்கங்கள் ததும்பக் கட்டப்பட்ட அக்கட்டிடம் 1896ல் முழுமை பெற்றது. ஆனால் அதற்குள் கன்னிமரா பணி உயர்வு பெற்று லண்டன் சென்றுவிட்டார். ஆயினும் அவரது சேவையைப் போற்றும் வகையில் அவரது பெயரையே நூலகத்துக்கு சூட்டினார்கள். அதுவே இன்று தமிழகத்தின் பெருமைக்குரிய அறிவடையாளமாக நிற்கும் கன்னிமரா நூலகம்.

40 ஆயிரம் நூல்களோடு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் தற்போது 7 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் உள்ளன. அவற்றில் தமிழ்நூல்கள் மட்டும் 1 லட்சம். உலக அளவில் அதிகபட்ச தமிழ்நூல் சேகரிப்பு மையம் இதுதான். இது தவிர 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இதழ்கள், பிரெய்லி நூல்கள் உள்ளன.
1948ல் மெட்ராஸ் பப்ளிக் லைப்ரரி ஆக்ட் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முதல் நூலக ஒழுங்குமுறைச்சட்டம் இதுதான்.

அந்தச் சட்டத்தின்படி தமிழகத்தின் மைய நூலகமாக கன்னிமரா மாற்றப்பட்டது. 1954 சட்டத்தின்படி (Delivery of Books and Newspapers  (Public Libraries Act ) இந்தியாவில் வெளியாகும் எல்லா நூல்கள், பருவ இதழ்களின் ஒரு பிரதியை, கொல்கத்தா தேசிய நூலகம், டெல்லி பொது நூலகம், மும்பை டவுன்ஹால் நூலகம், இந்திய நாடாளுமன்ற நூலகம், கன்னிமரா நூலகம் ஆகிய நூலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கன்னிமாரா நூலகம் 1973ல் மேம்படுத்தப்பட்டது. 55,000 சதுர அடியில் மூன்று மாடிகளுடன்கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1998ல் மீண்டுமொரு மூன்று மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. ஆங்கில நூல்கள் பிரிவு, பப்ளிக் சர்வீஸ் கல்வி மையம், பருவ இதழ்கள் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, பாடநூல்கள் பிரிவு, மைக்ரோஃபிலிம் பிரிவு, டிஜிட்டல் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்படுகின்றன. இதுதவிர ஐ.நா சபை வெளியீடுகள், ஆசிய வங்கி வெளியீடுகளின் மையமாகவும் இது விளங்குகிறது.

கன்னிமராவின் முதல் நூலகராகப் பொறுப்பு வகித்தவர் எட்கர் தர்ஸ்டன். இந்தியப் பழங்குடி மக்கள் குறித்து விரிவான களப்பணிகளும் ஆய்வுகளும் மேற்கொண்டவர்.

கன்னிமரா நூலகத்தில் சுமார் 4 லட்சம் புத்தகங்களின் தலைப்புகளை ஆன்லைனில் பார்க்கமுடியும். இதுதவிர 5,000 தமிழ் நூல்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. விக்டோரியா மகாராணிக்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான அட்லஸ், 1781ல் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ பிரசார நூல்கள், 1600ல் பருத்தியிழை காகிதத்தில் அச்சிடப்பட்ட பைபிள் உள்ளிட்ட ஏராளமான பழமையான நூல்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலகத்துக்கு நாளொன்றுக்கு 2500 வாசகர்கள் வந்து செல்கிறார்கள். 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நிரந்தர புத்தகக்கண்காட்சியும் உண்டு.

“மற்றும் பல…’

சென்னைப் பல்கலைக்கழக நூலகம், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம், மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி, ஓரியண்டல் மேனு ஸ்கிரிப்ட் லைப்ரரி, ஓலைச்சுவடி நூலகம் உள்ளிட்ட பல நூலகங்கள் சென்னையில் உள்ளன

தனியார் நிர்வாகத்தில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் குறிப்பிடத்தகுந்தது. அனைத்து விதமான இலக்கியங்கள், சங்க இலக்கியங்களின் முதற்பதிப்புகள், இதழ்களின் சேகரிப்பும் இங்குண்டு.
சம்ஸ்கிருதச் சுவடிகளைக் கொண்டுள்ள

 கீழ்த்திசைச் சுவடிகள் நூலகமும் குறிப்பிடத்தகுந்தது. மெக்கன்சி என்ற ஆங்கிலேயரின் ஆர்வத்தில் உருவானது இந்நூலகம். அவருடைய தீவிரமான தேடலில் கிடைத்த சுவடிகள் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. தியாசபிக்கல் சொசைட்டி நூலகம் அடையாறில் செயல்படுகிறது. இதுவும், மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் நூலகமும் சமயம் சார்ந்த நூல்களின் களமாக விளங்குகின்றன.

கடும் வாழ்க்கை நெருக்கடி கடந்து தனிமனிதர்கள் சேகரித்த அரிய நூல்கள் பிற்காலத்தில் நூலகங்களாக மாற்றப்பட்டதுண்டு. திருவான்மியூர் உவேசா நூலகம், எழும்பூர் மறைமலையடிகள் நூலகம் ஆகியவை அத்தகையவை. தனித்தமிழ் இயக்கம், சைவ சமய மறுமலர்ச்சி சார்ந்த நூல்கள் மறைமலையடிகள் நூலகத்தில் நிறைந்துள்ளன

இது தவிர  தி.நகர் சிங்காரவேலர் நினைவு நூலகம், எழும்பூர் பெரியார் பகுத்தறிவு நூலகம், சி.ஐ.டி நகர் கார்ல் மார்க்ஸ் நூலகம், தொல்பொருள் ஆய்வுத்துறை நூலகம், தரமணி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் ஆகியவையும் சென்னையில் பயனளிக்கக்கூடிய முதன்மையான நூலகங்கள்.

சென்னை தவிர்த்து, பிற நகரங்களிலும் இப்படி அடையாளம் காட்டத்தக்க நூலகங்கள் பலவுண்டு.

 தமிழகத்தின் இரண்டாவது பெரிய நூலகம் திருவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் பொது நூலகம். 134 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் உதவியுடன் வட்டாட்சியர் சரவணமுத்துப்பிள்ளை உருவாக்கிய இந்த நூலகத்தில் 1953 ஆண்டு முதல் வெளியான அரசிதழ்கள், அரசாணைகள் பாதுகாக்கப்படுகின்றன. 20,000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களும் 21,000 ஆங்கிலப் புத்தகங்களும் இங்குள்ளன.

மதுரை உத்தமப்பாளையத்துக்கு 1876ல் காலரா தடுப்பு அலுவலராக வந்த ஹென்றிவேல் மார்ஷல், அவரது மகள் மேரி ஜோசப்பின் ஆகியோரால் தொடங்கப்பட்ட நூலகம் பிற்காலத்தில் மார்ஷல் நினைவு நூலகம் என்று பெயர்மாற்றப்பட்டது. அந்நூலகம் தமிழகத்தின் பழமையான நூலகங்களில் ஒன்று. ஹென்றிவேல் தனது மருத்துவ சேவைக்கென்று கிடைத்த தங்கப் பதங்களை விற்று இந்நூலகத்தை தொடங்கினார். இங்கு பல்வேறு அரிய நூல்கள் இடம் பெற்று உள்ளன. புதுக்கோட்டையில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரின் பிரமாண்டமான உழைப்பில் உருவான ஞானாலயா நூலகம் தமிழின் மிகப்பெரிய பொக்கிஷம்.

நாகர்கோவில், காரைக்குடி, மதுரை, தஞ்சாவூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், கும்பகோணம், திருப்பனந்தாள், காரைக்கால், சிதம்பரம், பாண்டிச்சேரி, நீலகிரி பகுதிகளில் செயல்படும் கிறிஸ்தவ நூலகம், இந்து மதாபிமான சங்கம், காந்தி கலைமன்ற நூலகம், சாயபுமரைக்காயர் நூலகம், அஞ்சுமன் நுஸ்ரத்துல் பொதுநூலகம், சாஹிப் இல்ல நூலகம், ஸ்ரீவித்யா ராஜகோபால் நூலகம், பாரதியார் அருங்காட்சியகம், சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம் ஆகியவை தனிமனிதர்களின் உழைப்பால் விளைந்தவை.

தொன்மமும், தமிழும் மணக்கும் மதுரையில் சென்னைக்கு இணையாக நூலகங்கள் நிரம்பியுள்ளன. பிரம்மஞானசபை நூலகம், காந்தி அருங்காட்சிய நூலகம், தியாகராஜர் கல்லூரி நூலகம் என பல அரிய நூல்கள் அடங்கிய பல நூலகங்கள் அங்கு செயல்படுகின்றன.


”இங்கு புத்தகங்கள் அழிக்கப்படும் “
  
மூவேந்தர் காலத்தில் கோயில்கள் பொக்கிஷக் கருவூலமாகவும் கலைக்கூடமாகவும் மட்டுமின்றி நூலகங்களாகவும் திகழ்ந்தன. தமிழ், சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்ட இதிகாசங்கள், காப்பியங்கள், தேவார, திருவாசகங்கள், திவ்ய பிரபந்தங்கள் ஓலைச்சுவடிகளிலும், தாமிரப் பத்திரங்களிலும் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அரசர்கள் அதற்காக மானியங்களை (சந்திர தானம்) வழங்கினர். அருங்காட்சியங்கள் சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. மாலிக்காபூரின் படையெடுப்பில் ராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் ஆகிய இடங்களில் இருந்த கோயில்களும் சரஸ்வதி பண்டாரங்களும் அழித்தொழிக்கப்பட்டன.

இவ்விதம் அறிவாயுதமாக விளங்கும் நூலகங்களை அழித்தொழிப்பது நூலகத்தின் சரித்திரம் தொடங்கிய காலத்தில் இருந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் காலம் வரைக்கும் நிலைத்து நீடிக்கிறது.

அண்மைக்காலத்தில், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த  தலிபான்கள் தொன்மையான நூல்கள் அடங்கிய நூலகங்களை முதலில் குறிவைத்து அழித்தார்கள். குவைத்துக்குள் ஊடுருவிய இராக் அங்கிருந்த நூலகங்களை அழித்தது. பிரமாண்டமான பாக்தாத் நூலகத்தின் மீது அமெரிக்கா குண்டு வீசி அழித்தது.

1934ல் ஐசக் தம்பையா, கா.மு.செல்லப்பா ஆகிய இரு தமிழர்களால் விதையிடப்பட்டு 1981ல் சுமார் 1 லட்சம் புத்தகங்களோடு ஆசியாவின் மிகப்பெரும் நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூலகம் சிங்களர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

( தற்பொழுது மீளமைக்கப்பட்ட்ள்ளது. இருந்தாலும் ஆசியாவின் அடையாளம் என்று சுட்டப்பட்ட யாழ் நூலகத்தில் இருந்த அரிய தமிழ் நூல்கள் இருக்க வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் தமிழகத்தில் உள்ள நூல் வெளியீட்டாளர்கள் அனைவரும் தங்களது படைப்புக்களை இலவசமாக யாழ் நூலகத்திற்கு அனுப்பி வைத்து தங்களது தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தலாம். தமிழ் ஆர்வலர்களும் ஆளுக்கொரு நூலை அனுப்பி வைக்கலாம் )

‘புறக்கணிக்கிறார்கள்!’ 

நூலகங்கள் அயல்நாட்டு எதிரிகளால் மட்டும் அழிக்கப்படுவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் தமிழகப் பொது நூலகத்துறையின் வளர்ச்சி பின்னோக்கியதாகவே இருக்கிறது. போதிய நிதி ஒதுக்கப்பட்டாததால் மேம்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை. தமிழகம் முழுதுமுள்ள பல மாவட்ட நூலகங்கள் உரிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் சூனியமாகக் காட்சியளிக்கின்றன. பல நூலகங்கள் திறக்கப்படுவதே இல்லை. திறந்தாலும் வருவார் இல்லை. காரணம், ஊழியர்களுக்கு போதிய சம்பளம் இல்லை. வாசிப்புக்கேற்ற சூழல் இல்லை.

தமிழகத்தில் மொத்தம் 4002 அரசு பொது நூலகங்கள், 1666 கிளை நூலகங்கள் உள்ளன. 32 மாவட்ட மைய நூலகங்கள் உள்ளன. இதுதவிர ஊர்ப்புற நூலகங்களும், பகுதிநேர நூலகங்களும் செயல்படுகின்றன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழும் பல நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஏழு மாவட்டங்களில் 12 நடமாடும் நூலகங்கள் இயங்குகின்றன. எல்லா மாவட்டத்திலும் நடமாடும் நூலகம் கொண்டு வரப்படும் என்றார்கள். ஆனால் இருக்கும் நடமாடும் நூலகங்களிலேயே சில தற்போது இயங்கவில்லை. நூலகத்துறையில் ஏறக்குறைய 6,000 பணியிடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன

ஊர்ப்புற நூலகர்களுக்கு மிகக்குறைந்த தொகுப்பூதியமே வழங்கப்படுவதால் அவர்கள் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

1984ல் உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் சொத்துவரி, வீட்டுவரியோடு சேர்த்து ஒரு ரூபாய்க்கு 3 காசுகள் வீதம் நூலகவரியும் வசூலிக்கப்பட்டது. 1972ல் அது 5 காசாக உயர்த்தப்பட்டது. 1993ல் 10 காசுகளாக உயர்ந்தது. இந்த 10 சதவிகித வரியே இன்றளவும் நூலகத் துறையின் நிதியாதாரம். ஆனால் அரசு முழுமையாக இந்தத் தொகையை நூலக மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதில்லை என்கிறார்கள்.

நூலகத்துறைக்கு நூல்களை தேர்வுசெய்து வாங்குவதற்கு ஒரு குழு நியமிக்கப்படுவதுண்டு. அதில் ஏராளமான பாரபட்சங்கள், அரசியல் தலையீடுகள். தொடக்கத்தில் 600 நூல்கள் வாங்கப்பட்டதை 2007ல் 1000 நூல்களாக உயர்த்தி உத்தரவிட்டது அரசு. ஆனால் 2009க்குப் பிறகு நூலகத்துறைக்குப் புதிய புத்தகங்களே வாங்கப்படவில்லை. நிதியின்மை காரணம் என்கிறார்கள். கடந்த 3 வருடங்களில் வெளிவந்த எந்தப் புத்தகத்தையும் நூலக வாசகன் படிக்க முடியாது.

‘கண்முன் அழிவு!’

நூலகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் புதிதாகக் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆக்கப்பூர்வமான விஷயமாக இருந்தாலும் அதற்கு நூலகத்தின் நிதியை பயன்படுத்துவது விமர்சனத்துக்கு உட்பட்டது. ஆனால் இதுவும் கூட அரசியல் காரணங்களால் இக்கட்டில் சிக்கியுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தின் நிலையும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. மராட்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட அந்த நூலகத்தில் மிகப்பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள் உள்ளன. ஆனால் அந்நூலகத்துக்கான நிர்வாக அதிகாரி பணியிடம் நெடுங்காலமாக காலியாக இருக்கிறது.
தமிழுக்கு மிகப்பெரும் தொன்மையும், சரித்திரமும் உ ண்டு. அதற்கான அத்தனை சான்றுகளும் நூலகங்களில் தான் உறைந்து கிடக்கின்றன. நூலகங்களை புறக்கணிப்பதும், அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருப்பதும், முடக்குவதும் தமிழுக்குச் செய்கிற துரோகம். யாராக இருந்தாலும் அவர்கள் சரித்திரத்தின் சாபத்துக்கு ஆளாகநேரிடும்.                                                  


 நன்றி :-   http://www.aazham.in/?p=2433                                                  


0 comments:

Post a Comment

Kindly post a comment.