Saturday, July 20, 2013

தமிழில் வாதிடலாம் : மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி !



 
வழக்கு விசாரணையில் தமிழில் வாதாட உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், அண்மையில் இரண்டு வழக்குகளில் ஆஜரான வழக்குரைஞர் பகவத் சிங், தமிழில் வாதாட அனுமதிக்குமாறு நீதிபதி எஸ். மணிக்குமாரிடம் வேண்டினார். அதற்கு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும் தமிழில் தனது வாதத்தை பகவத் சிங் முன்வைத்தார். இதையடுத்து, பகவத் சிங் ஆஜரான இரண்டு வழக்குகளின் கீழான மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், அரசியலமைப்புச் சட்ட விதிகளையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டிய அவர், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலம் மட்டுமே வழக்கு மொழியாக இருப்பதால், தமிழில் வாதிட முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நீதிபதி மணிக்குமார் தள்ளுபடி செய்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது. வழக்குரைஞர்கள் பகவத் சிங், ஏ.கே.ராமசாமி உள்ளிட்டோர் ஆஜராயினர்.

தமிழில் வாதிடக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக நீதிபதியிடம் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் தமிழில் வாதிடலாம் என்றார். மேலும் தனது முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், வழக்குரைஞர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. மேல்முறையீடு செய்து கொள்கிறோம் என வழக்குரைஞர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

பாஸ்போர்டைத் தொலைத்துவிட்டு, சவூதி அரேபியாவில் தவிக்கும் தனது கணவரை மீட்கக் கோரி கோவில்பட்டியைச் சேர்ந்த ஆயிஷாபானு தாக்கல் செய்த மனுவும்,

வீட்டு வரைபட அனுமதி கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த சுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவும் தமிழில் வாதிடுவது தொடர்பான கோரிக்கை காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.                           

நன்றி :- 20-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.