Saturday, July 20, 2013

கூடா நட்பு :பெண் எஸ்.ஐ. கொலை :3 ஆண்டுகளுக்குப் பின் டி.என்.ஏ. சோதனை முயற்சி !

கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்


காஞ்சிபுரம் அருகே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, கொலை செய்யப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணியின் உடலை போலீஸார் புதன்கிழமை தோண்டி எடுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கலைவாணி (25). இவர், கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் தேதி முதல் மாயமானார். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு கலைவாணியின் இருசக்கர வாகனம் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதில், வக்கீல் ஒருவரின் குமாஸ்தாவான வெங்கடேசனிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் தனக்கும், கலைவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரை வாலாஜா அழைத்துச் செல்லும் போது காரில் இருந்து கீழே தள்ளி கொன்றதாகவும், உடலை மாநகராட்சி பஸ் டிரைவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுப்பன் உதவியுடன் வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் களத்தூரில் உள்ள பாலாற்றில் புதைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வெங்கடேசன் கொடுத்த தகவலின்படி, காவேரிபாக்கம் தாசில்தார் கார்த்திகேயன், மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன், செய்யூர் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம், காவேரிபாக்கம் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்ளிட்ட குழுவினர் பாலாற்றில் செவ்வாய்க்கிழமை ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன், தோண்டும் பணி தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தோண்டிப் பார்த்தும் எந்த தடயமும் சிக்கவில்லை.

இந்த நிலையில் புதன்கிழமை காலை 10 மணி முதல் இதே குழுவினர் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தோண்டிப் பார்த்தும் எந்த தடயமும் சிக்கவில்லை. நீண்டநேர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு அழுகிப் போன நிலையிலும், முழுவதும் எலும்புக்கூடாகாமலும், அடையாளம் தெரியாத நிலையில் ஒரு உடல் கிடைத்தது. 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரின் உடல் டி.என்.ஏ. சோதனைக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டது.

காவேரிபாக்கம் வட்டாட்சியர் கார்த்திகேயன், மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன், செய்யூர் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம், காவேரிபாக்கம் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்ளிட்ட குழுவினர் ஜேசிபி உதவியுடன் புதன்கிழமை எஸ்.ஐ. கலைவாணியின் உடல் தேண்டி எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அதில் அந்த உடல் பெண்ணின் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த உடல் கலைவாணியின் உடலா? என்பதை கண்டறிய டி.என்.ஏ. சோதனைக்கு உள்படுத்த சென்னைக்கு அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனையின்போது எஸ்.ஐ. கலைவாணியின் தந்தை கந்தசாமி, தாய் லலிதா உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் கிராமத்து மக்கள் பெருமளவில் குவிந்திருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய வெங்கடேசன், அவருக்கு உதவியாக இருந்து சுப்பன், கார் டிரைவர் சுந்தரம் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் டிரைவர் சுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் போலீஸ் அதிகாரி ஒருவரை விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.