Saturday, July 20, 2013

தந்தைக்கு 2-ஆம் திருமணம்,செய்து வைத்த தாய் - மகள் மீது அமிலம் வீசிய இளைஞர் !:

     அமிலம் வீசியதில் காயமடைந்து 
பாளையங்கோட்டை 
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 
சிகிச்சை பெற்று வரும் சிதம்பரம் மற்றும் அவரது மகள் சீதா.

திருநெல்வேலி பேட்டை அருகேயுள்ள திருப்பணிகரிசல்குளம் துர்க்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவரது மனைவி சிதம்பரம் (42). இவர்களது மகள் சீதா (19). இவர் பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்களது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குமாரவேல் (52). இவர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுந்தர் (26).

குமாரவேலின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாராம். இந்நிலையில் குமாரவேல், சிதம்பரத்தின் சித்தி மகளான வேணி (45) என்பவரை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம். தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்தது சுந்தருக்கு பிடிக்கவில்லையாம்.

மேலும், தன் தந்தைக்கு இரண்டாவது திருமணத்தை சிதம்பரமும் அவரது கணவர் செல்லக்குட்டியும்தான் நடத்தி வைத்ததாகக் கூறி அவர்கள் மீது சுந்தர் கோபத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், புதன்கிழமை காலை 7 மணியளவில் சுந்தர் கையில் அமிலப் பாட்டிலுடன் செல்லக்குட்டியின் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த சிதம்பரத்தின் மீது அமிலத்தை ஊற்றியுள்ளார். முகம், முதுகு, மார்பு, கை கால்களில் அமிலம் பட்டு எரிச்சலில் அவர் கூச்சலிட்டுள்ளார். 
 
இதையறிந்ததும் அவரது மகள் சீதா ஓடி வந்து தடுக்க முயன்றுள்ளார். இதனால் சீதா மீதும் அமிலத்தை ஊற்றிவிட்டு சுந்தர் தப்பியோடிவிட்டாராம். இதில் சீதாவுக்கும் உடலின் பல இடங்களில் அமிலம் பட்டுக் காயம் ஏற்பட்டது.

அமிலம் பட்டத்தில் காயமடைந்த தாய், மகள் இருவரையும் அப்பகுதி மக்கள் உடனடியாகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   
 
நெல்லையில் 12 கெமிக்கல் கடைகளுக்கு போலீசார் சீல்                                                                                                         
இந்தியாவில் அமிலம் விற்பனையை ஒழுங்குபடுத்த கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விதித்தது. 
 
இந்நிலையில் திருநெல்வேலியில் 2 பெண்கள் மீது அமிலம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமிலம் வீசிய சுந்தரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த அமிலத்தை திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு கெமிக்கல் கடையில் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடை எந்தவித உரிமமும் இல்லாமல் செயல்பட்டதும், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரான திருநெல்வேலி அருகேயுள்ள திம்மராஜபுரத்தைச் சேர்ந்த அரிகர ஐயங்கார் மகன் சுரேஷ் (33) என்பரைப் போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த அமில கேன்களுக்கும் சீல் வைத்தனர்.  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநகர பகுதியில் உள்ள அனைத்து ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் போலீஸார் கடந்த இரு தினங்களாக திடீர் சோதனை நடத்தினர்.  இந்த சோதனைகள் குறித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

 திருநெல்வேலி பேட்டை பகுதியில் 2 பெண்கள் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மாநகர பகுதியில் உள்ள அனைத்து ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாநகர பகுதியில் உள்ள 13 கடைகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

 இதில் 12 கடைகள் முறையான உரிமம் மற்றும் ரசாயனங்களை விற்பனை செய்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து 12 கடைகளையும் போலீஸார் சீல் வைத்தனர். அந்த கடைகளில் உள்ள அமிலங்களை என்ன செய்வது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும்.  கடைகளில் சட்டவிரோதமாக அமிலம் உள்ளிட்ட எந்தவிதமான பொருள்களை விற்பனை செய்தாலும், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும என்றார் ஆணையர்.

 பேட்டியின் போது மாநகர துணை ஆணையர் மு. ராஜராஜன், உதவி ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர்உடனிருந்தனர்.                                                
 
நன்றி :-தினமணி, 18 & 19 ஜூலை, 2013                                           


 

0 comments:

Post a Comment

Kindly post a comment.