Thursday, July 18, 2013

முதல் பெண் இராணுவ வீரரின் மரணம் -ந.ஜீவா

சாந்தி டிக்கா - மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜல்பைகூரியைச் சேர்ந்த பெண்.
இன்று அவர் இல்லை. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு...

2005 - சாந்தி டிக்காவுக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது.  ரயில்வேயில் வேலை செய்த அவருடைய கணவரின் இறப்பைத் தொடர்ந்து கிடைத்தது வேலை.

இரண்டு குழந்தைகளின் தாயான அவருக்குள் இதைவிட பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இராணுவத்தில் சேர்ந்தால் என்ன? பெண்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்வார்களா? முயற்சி செய்து பார்க்கலாம் என்று செயலில் இறங்கினார் சாந்தி டிக்கா.

அக்டோபர் 2011 - சாந்தி டிக்காவை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டார்கள். அதுவும் இந்திய ராணுவத்தின் ரயில்வே பொறியாளர் படைப் பிரிவில் ஒரு படை வீரராக. ஆண்களுக்கு என்னென்ன தேர்வுகள் இருக்குமோ அத்தனையும் சாந்தி டிக்காவுக்கும் வைக்கப்பட்டன.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் 1.5 கி.மீ. தூர ஓட்டப் பந்தயத்தில் அவருடன் பங்கேற்ற ஆண்களை விட 5 விநாடிகள் முன்னதாக ஓடிக் கடந்தார்.

அதுபோன்று 50 மீட்டர் ஓட்டத்தில் 12 விநாடிகள் தன்னுடன் பங்கேற்ற ஆண்களை முந்தினார்.

துப்பாக்கி சுடுதல், வேறு பல உடற் தேர்வுகள், எழுத்துத் தேர்வுகள் எல்லாவற்றிலும் தேறி, ஆண்களைப் போலவே, இன்னும் சொல்லப் போனால், அவர்களுக்கும் மேலான தகுதியுடன் இராணுவத்தில் ஒரு  வீரராகச் சேர்ந்துவிட்டார் சாந்தி டிக்கா.

இந்திய இராணுவத்தில் வீரராகச் சேர்ந்த முதல் பெண் அவர்தான் என்ற பெருமையும் சேர்ந்து கொண்டது.

அதற்கு முன்பும் இராணுவத்தில் பெண்கள் சேர்ந்திருக்கிறார்கள். அதிகாரிகளாக. சாதாரண வீரராக அல்ல.

அதற்கு முன்பு பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படாததற்குக் காரணம், இராணுவத்துக்குத் தகுதியான உடல் வாகு பெண்களுக்கு இல்லை என்று கருதப்பட்டதே. குழந்தை பெறுதல், பெண்களுக்கேயுரிய உடற் பிரச்னைகள் எல்லாவற்றையும் காரணமாகச் சொன்னார்கள்.
சாந்தி டிக்கா ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவரை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு, நிறையப் பெண்கள் விமானப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மே 2013 - சாந்தி டிக்காவுக்கு சல்சா ரயில்வே ஸ்டேஷனில் டூட்டி. மே மாதம் 8 ஆம் தேதி காலை வேலைக்குப் போனவர். தொடர்ந்து 36 மணி நேரம் வேலை செய்திருக்கிறார். அவர் டூட்டி பார்த்த இடத்திற்கு மாற்றுவதற்கு ஆள் வரவில்லை.

தூக்கம் இல்லாமல், ஓய்வில்லாமல் வேலை பார்த்த அவர் 36 மணி நேரம் கழித்து டூட்டி முடிந்து வீட்டுக்குச் சோர்வுடன் கிளம்பினார்.
பாதையில் சிலர் மறித்தார்கள். வாயில் துணியைக் கட்டி, கடத்திச் சென்றார்கள். அடித்தார்கள். கடைசியில் ஒரு ரயில்வே கம்பத்தில் அவரைக் கட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.


மறுநாள் காலை அந்தப் பகுதியில் உள்ள ஆதிவாசிகள் பார்த்து, கட்டுக்களை அவிழ்த்து அலிபுர்துவார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
மே 15 ஆம் தேதி மருத்துவமனைக் கழிவறைக்குச் சென்ற சாந்தி டிக்கா திரும்பவில்லை. நீண்ட நேரம் ஆளைக் காணவில்லை என்று கதவை உடைத்துப் பார்த்தால், தூக்கில் தொங்கியிருக்கிறார், இந்திய ராணுவத்தின் முதல் பெண் வீரரான அவர்.

யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? உண்மையில் சாந்தி டிக்கா தற்கொலை செய்து கொண்டாரா? யாராவது கொலை செய்தார்களா? என்று ஏகப்பட்ட கேள்விகள்.

சாந்தி டிக்கா சிலரிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் வாங்கியிருந்தார். அதனால் அவர்களுடன் தகராறு ஏற்பட்டது. அதுவே அவர் கடத்தப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை சொன்னது. இறந்த அவரின் பையில் சில காகிதங்கள் இருந்தன என்று அந்தப் பகுதியின் காவல்துறை ஆய்வாளர் சொன்னார். அந்தக் காகிதங்களில் என்ன எழுதப்பட்டிருந்தன என்பதைச் சொல்ல மறுத்துவிட்டார் அவர்.

மே 16 ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள ஆதிவாசிகள் அமைப்பு சாந்தி டிக்காவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று 12 மணி நேர பந்த் நடத்தியது.
நீதிக்காகக் காத்திருக்கிறார்கள் தாயை இழந்த சாந்தி டிக்காவின் இரு பிள்ளைகளும்.                                                                                                                               

நன்றி :- தினமணி கதிர், 14-07-2013



0 comments:

Post a Comment

Kindly post a comment.