Saturday, July 13, 2013

நீர் நிலைகளைப் பாதுகாப்போம் - ஜி.ஜெயராஜ்


நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. புவியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது. மனித உடலும் ஏறக்குறைய அதே கட்டமைப்பில்தான் செயல்படுகிறது. கோடையில் நீர் நிலைகள் ஆவியாகி வற்றுவதுபோல் மனித உடலுக்கும் நீர் தேவை அதிகரித்து விடுகிறது.


கோடையில், தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு கூடிக்கொண்டே போகிறது.

குறிப்பாக, பாசனத்துக்கும் தண்ணீர் தேவை. நீர்ப் பாசனத்துக்குப் போதிய தண்ணீர் இல்லை என்றால் உணவு தானிய உற்பத்தி முடங்கி விடுகிறது.
இப்படி மனித வாழ்வின் இன்றியமையாத தேவையாகிவிட்ட தண்ணீரை நாம் கிணறு, குளம், ஆறுகள் என பல வழிகளில் பெறுகிறோம்.

இந்த நீர் ஆதாரங்களை உரிய முறையில் பாதுகாத்துப் பலன் அடைவதே இயற்கைப் பாதுகாப்புக்கு உகந்தது. அறிவியல் வளர்ச்சி காரணமாக நிலத்தின் அடியில் உள்ள நீரைக் கண்டறிந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து உறிஞ்சும் போக்கு ஏற்பட்டது.

இன்றைக்கு ஆழ்துளைக் கிணறுகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. விவசாயப் பாசனத்துக்கும் ஆழ்துளைக் கிணறுகளே பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், பூமியெங்கும் சல்லடையாகத் துளைத்து வைத்திருக்கிறோம்.

ஆழ்துளைக் கிணறுகள் காலத்தின் கட்டாயம் என்று வைத்துக் கொண்டாலும், நிலத்தடி நீர் அள்ளக் அள்ள குறையாமலா இருக்கும்? இதன் விளைவு, நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. நிலத்தடி நீர் மிகவும் உறிஞ்சப்படும்போது, ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பக் கடல்நீர் புகுந்து உப்பு நீராகி விடுகிறது.

மனிதன் இன்று பெரும்பாலும் இந்த நீரையே பருகிக் கொண்டிருக்கிறான். இயற்கையான நீரில் இருக்கும் பலவகையான நுண் சத்துக்கள் ஆழ்துளைக் கிணற்று நீரில் இருப்பதில்லை. மனித உடல் சீராக இயங்குவதற்குத் தேவைப்படும் சத்துகள் கிடைக்காததால் பலவித நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

இருப்பினும், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க உலக அளவில் சில வழிகள் கையாளப்படுகின்றன. தரிசு நிலங்களைக் கோடை காலத்தில் உழுது, மழைக் காலத்தில் அதில் நீர் பிடிப்பு ஏற்படுத்துவது, பயன்பாடு இன்றி தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களைத் தேர்வு செய்து அவற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடிக்கு நீரைச் செலுத்துவது, நீரோடைகள் மற்றும் ஆறுகளில் தடுப்பு அணைகள் கட்டி நீரைத் தேக்கி வைப்பது, மழை நீரை வீணாக வடிந்தோட விடாமல் தடுத்து நிலத்தடிக்குக் கொண்டு செல்வது என பல வழிகள் நிலத்தடி நீரை மேம்படுத்த கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை நாம் முறையாகச் செய்கிறோமா என்பதே கேள்வி. நிலத்தடி நீரை அதிக அளவு உறிஞ்சுவதை அனுமதிப்பதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது. பண வலிமை உள்ள ஒருவர் அதல பாதாளத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து ராட்சத மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி, பக்கத்துக் கிணறுகளை வற்ற வைத்து செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தி விட முடியும்.

சிறு விவசாயிகளை, விவசாயப் பணியில் இருந்து கூண்டோடு வெளியேற்றும் இந்தச் செயல், தெரிந்தோ தெரியாமலோ நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது மிக அவசியம். நகரங்களில் "ஃபில்டர்' குடிநீர் என்ற பெயரில் லாரிகளில் விநியோகம் செய்வது அதிகரித்துவிட்டது. பண வசதி உள்ளவர்கள் இந்த நீரை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் நகராட்சியையோ, மாநகராட்சியையோ நம்பியிருப்பதில்லை. இதனால், குடிநீர் தேவையை மையமாக வைத்து வியாபார நிறுவனங்கள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவையும், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சப்படும் நீர்தான் என்பதை மறக்கக் கூடாது.

நகர்ப்புறங்களில் ஏற்கெனவே இருக்கின்ற நீர்நிலைகளைப் பாதுகாக்க சரியான திட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஒரு காலத்தில் ஆற்றில் இருந்து நேரடியாக இந்த நீர்நிலைகளுக்கு நீர் பாய்ந்து கொண்டிருந்த கால்வாய்ப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா நிலங்களாகி விட்டன.
நீர் நிலைகளைச் சுற்றிலும் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துக் கொள்வதும் அதிகரித்து விட்டதால், அந்த நீர்நிலைகள் இருப்பதே வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலத்தின் கோலத்தால், அதே நீர் நிலைகள் ஒரு கட்டத்தில் கழிவு நீர் சேரும் இடமாகிக் காணாமல் போய் விடுகின்றன.

குளம், குட்டையாக இருந்தாலும், பெரிய நீர்த்தேக்கங்களாக இருந்தாலும் அவற்றை கோடைக் காலத்தில் மராமத்து செய்து கரையைப் பலப்படுத்தி, மழைக் காலத்தில் நீர் நிரம்புவதற்கு உரிய வழிவகை செய்தால் மட்டுமே நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும். தமிழகம் போன்ற மாநிலங்கள் சமவெளி பிரதேசங்கள் அதிகம் உள்ள பகுதியாக இருக்கின்றன. சரியான நீர்த் தேக்க வசதிகள் இல்லாததால், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய பரிதாபம்தான் தொடர்கிறது.

எனவே, எதிர்காலச் சந்ததிகளைக் கருத்தில்கொண்டு நமது புவி அமைப்புக்கேற்ற நீர்த்தேக்க வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சத்தான நீரைப் பருகும் வாய்ப்பைப் பெறுவோம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.