Saturday, July 13, 2013

வெளிநாட்டு ஆபாச இணையதளங்களை முடக்க இயலாது : மத்திய அரசு பதில்

இந்தியாவில் வெளிநாட்டு ஆபாச இணையதளங்களை முடக்குவதோ, தடைசெய்வதோ கடினமானது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் மாணவி ஒருவர் அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, இந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் கம்லேஷ் வஸ்வானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்கள்தான் முக்கிய காரணமாக உள்ளன. எனவே, ஆபாச இணையதளங்களை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் பஞ்ச்வாணி வாதிட்டதாவது:

இணையதளங்களைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லாதது, மக்களை ஆபாச வீடியோக்கள் பார்க்க ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றமில்லை என்ற நிலை இருப்பதால், சந்தையில் ஆபாச வீடியோக்கள் அல்லது கிளிப்பிங்ஸ் தாராளமாக கிடைக்கின்றன. இவை இணையதளங்கள் அல்லது பிற சிடி.க்களில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்யப்படுகின்றன.

குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கும் இணையதளங்களிலும் பாலுணர்வு, வன்முறையை தூண்டக் கூடிய காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதைப் பார்க்கும் சிறுவர்கள், குழந்தைகள் மனதில் தவறான எண்ணங்கள் தோன்றுகின்றன. குற்றங்கள் பெருக ஆபாச இணையதளங்கள்தான் முக்கிய காரணம். எனவே அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், சர்வதேச ஆபாச இணையதளங்களை முடக்குவதோ கடினமானது. இந்த விஷயத்தில் தகுந்த தீர்வுகாண பல்வேறு அமைச்சகங்கள் இடையே ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. எனவே, இவ்விஷயத்தில் விரிவான பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார். இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.                                                                                         

நன்ரி :- தினமணி, 13-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.