Friday, July 12, 2013

புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் இறப்பு !



புகைப் பிடிக்கும் பழக்கத்தால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை நீடித்தால், 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 லட்சமாக உயரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், உயிரிழந்த 50 லட்சம் பேர் புகையிலைப் பொருள்களை நேரடியாகப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். அதேசமயம், 6 லட்சம் பேர் மற்றவர்கள் விடும் புகையை சுவாசித்து அதன்மூலம் ஏற்பட்ட விளைவினால் உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

20-ம் நூற்றாண்டில், புகையிலை பழக்கத்தால் சுமார் 100 கோடி பேர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நூற்றாண்டில் இது அதிகரிக்கும் என்று சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநரான மருத்துவர் மார்கரெட் சான் கூறுகையில், "புகையிலை நிறுவனங்களையும், அதன் விளம்பரங்களையும் கட்டுப்படுத்தத் தவறினால், இப்பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புகையிலைப் பொருள்களின் மூலம் மக்கள் உயிரிழப்பதைத் தடுக்கும் கடமை ஒவ்வொரு நாட்டுக்கும் உண்டு' என்று தெரிவித்தார். 92 நாடுகளில் புகைப் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், 23 லட்சம் பேர் பயனடைந்துள்ளதையும் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.                                                                               

நன்றி :- தினமணி, 12-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.