Wednesday, July 31, 2013

ஹெல்மெட் அணியாததால் 3 ஆண்டுகளில் 1,648 பேர் சாவு !

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் நேரிட்ட இரு சக்கர வாகன விபத்துகளில் ஹெல்மெட் அணியாததால் 1,648 பேர் உயிரிழந்துள்ளனர்.

காவல்துறை புள்ளிவிவரங்களின்படி சென்னையில் நேரிடும் மொத்த விபத்துகளில் 25 சதவீதம் மோட்டார் சைக்கிளால் ஏற்படுபவை ஆகும். இதற்கு அடுத்தபடியாக லாரிகள் 18 சதவீதத்தையும், இலகு ரக வாகனங்கள் 17 சதவீதத்தையும், கார் 11 சதவீதத்தையும் பிடித்துள்ளன.

தோராயமாக சென்னையில் நேரிடும் சாலை விபத்துகளினால் தினமும் 3 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

2011 புள்ளிவிவரப்படி சென்னையில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 1,505 பேர் உயிரிழந்துள்ளனர், 8,197 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் 667 பேர் உயிரிழந்துள்ளனர்.

2012 சாலை விபத்துகளில் 1,325 பேர் உயிரிழந்துள்ளனர், 7,956 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் சென்றதினால் 643 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு இதுவரை ஹெல்மெட் அணியாததால் 338 பேர் உயிரிழந்துள்ளனர்.

"சிறு அசௌகரியங்களை காரணம் காட்டி சிலர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுகின்றனர். ஆனால் விபத்துகளில் சிக்கி உயிரை இழக்கும் தருவாயில்தான் வாகன ஓட்டி தான் செய்த தவறை உணருகிறார்' என போக்குவரத்துப் பிரிவு காவல்துறை உயர் அதிகாரி கூறினார்.

ஆர்வம் இல்லை: சென்னையில் இப்போது 50 சதவீதத்துக்கு குறைவான வாகன ஓட்டிகளே ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுகின்றனர்.

கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என சில ஆண்டுக்கு முன்பு அரசு உத்தரவிட்டபோது, சென்னையில் 99 சதவீத வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தனர். அதன் பின்னர், அந்த உத்தரவை அரசு தளர்த்தியதால், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய ஆர்வம் காட்டுவதில்லை என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

8.70 லட்சம் வழக்குகள்: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2011-ஆம் ஆண்டில் 3,48,273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 1,79,52,355 அபராதம் வசூல் செய்யப்பட்டது. 2012-ல் 4,80,961 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4,56,22,650 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்தாண்டு இதுவரை 41,368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 41,54,250 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது மொத்தம் 8.70 லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

 ஆண்டு   சாலை விபத்து இறப்பு       ஹெல்மெட் அணியாததினால் ஏற்பட்ட இறப்பு

2011                  1,504                                     667



2012                  1,325                                     643



2013                   7,12                                      338



2013-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களில் ஜூலை 21-ஆம் தேதி வரை நேரிட்ட விபத்துகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.                                                       

நன்றி :- தினமணி, 30-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.