Thursday, July 25, 2013

அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட பள்ளி மாணவிகள் 22 பேர் சுகவீனம்

மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும் அரசு விடுதி மாணவிகள்

நாமக்கல் அருகேயுள்ள வேலகவுண்டம்பட்டி அரசு மாணவிகள் விடுதியில் சிற்றுண்டி சாப்பிட்ட மாணவிகள் 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.



நாமக்கல்லை அடுத்துள்ள வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 45 மாணவிகள் தங்கி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவிகள் கூலித்தொழிலாளர்களின் மகள்கள் ஆவர்.


விடுதியின் காப்பாளராக நாமக்கல்லைச் சேர்ந்த வசந்தி, சமையலராக அருணா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை காலை மாணவிகளுக்கு இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது. உணவைச் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குள் மாணவிகளில் 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, தலைசுற்றல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 16 பேர் மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 6 பேர் பெரியமணலி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் காலை சாப்பிட்ட உணவாலேயே உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறியது:
காலை சிற்றுண்டிக்கு அளிக்கப்பட்ட இட்லி வேகாமல் இருந்ததுடன், சாம்பாரில் மஞ்சள் தூளின் அளவு அதிகமாக இருந்தது என்றனர்.
விடுதிக் காப்பாளர் வசந்தி கூறியது:

காலை உணவு சமைத்துக் கொண்டிருந்த போது மதிய உணவுக்குத் தேவையான இறைச்சியை வாங்கி வரக் கடைக்குச் சென்றுவிட்டேன். அந்த நேரம் பார்த்து சமையலர் வேகாத இட்லியை எடுத்து மாணவிகளுக்குப் பரிமாறிவிட்டார் என்றார்.

இந்தப் பாதிப்பை அடுத்து பெரியமணலி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் அந்த விடுதிக்குச் சென்று இதர மாணவிகளுக்கு உடல்நலப் பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் அளித்தனர்.

சமையலர் பணியிடை நீக்கம்: விடுதி மாணவிகளுக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பை அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, மாணிக்கம்பாளையம், பெரியமணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைப் பார்த்து நலம் விசாரித்தார்.

பின்னர், மாணவிகள் விடுதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த விடுதிக் காப்பாளர், சமையலர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, வேக வைக்காத உணவைப் பரிமாறிய சமையலர் அருணாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், விடுதிக் காப்பாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு மாதிரி ஆய்வுக்காக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்பட்டது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.