Friday, July 26, 2013

125-110 - வயது தம்பதிகள் ; 10 பேரன்கள், 3 பேத்திகள், 24 கொள்ளுப் பேரன்கள், செஞ்சியில்!

செஞ்சி, ஜூலை.26–

செஞ்சி அருகே ஜம்போதி என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் ரங்கசாமி கவுண்டர் என்ற முதியவர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு 125 வயது ஆவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அவருடைய மனைவி பெயர் சடச்சியம்மாள். அவரும் உயிருடன் இருக்கிறார். அவருக்கு 110 வயது ஆகியிருப்பதாக சொல்கின்றனர்.

ஆனால் இதற்கான ஆதாரமான பிறப்பு சான்றிதழோ ஜாதகமோ எதுவும் இல்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரங்கசாமி கவுண்டருக்கு 115 வயது என்றும், சடச்சியம்மாளுக்கு 100 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரங்கசாமி கவுண்டருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் பாலகிருஷ்ணன் அவருக்கு 80 வயது ஆகிறது. 2–வது மகன் கலியபெருமாளுக்கு 75 வயதும், 3–வது மகன் வீரமுத்துக்கு 65 வயதும் ஆகின்றன. 10 பேரன்கள், 3 பேத்திகள், 24 கொள்ளுபேரன் பேத்திகள், ஒரு எள்ளுபேத்தி ஆகியோரும் உள்ளனர்.

இவர்கள் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ரங்கசாமி கவுண்டரும், சடச்சியம்மாளும் தனி வீட்டில் வசிக்கிறார்கள்.

இவ்வளவு காலமும் ஆடு மேய்த்தே ரங்கசாமி கவுண்டர் குடும்பத்தைக் கவனித்து வந்தார். சமீப காலமாக உடல்நிலை தளர்வு ஏற்பட்டதால் ஆடு மேய்பதை நிறுத்தி விட்டார். அவர்களுக்கு மகன்கள் மற்றும் பேரன்கள் உணவுப் பொருட்களை வழங்குகிறார்கள். சடச்சியம்மாள் சமையல் செய்து கொடுக்கிறார்.

உங்களது உண்மையான வயது 125 தானா என்று கேட்டபோது ரங்கசாமி கவுண்டர் கூறியதாவது:–

எனது வயது தொடர்பாக ஜாதகமோ மற்ற ஆதாரங்களோ இல்லை. ஆனால் நான் 6 வயதாக இருந்தபோது எங்கள் ஊரில் புயல் அடித்தது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அது எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. அதில் இருந்து எனது வயதை கணக்கிட்டு வருகிறேன். தற்போது 125 வயது ஆகியுள்ளதாக கணக்கிட்டுள்ளேன். இதை வைத்துதான் எனக்கு 125 வயது ஆகிறது என கூறுகிறேன்.

 நான் 2–ம் வகுப்புவரை தான் படித்துள்ளேன். 20 வயதாக இருந்தபோது கங்காணியார் என்பவர் என்னை இலங்கைக்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு 2½ வருடம் தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்து விட்டு ஊருக்கு திரும்பிவிட்டேன். கிராமத்தில் விவசாயம் செய்வதுடன் ஆடுகளையும் வளர்த்து வந்தேன். 35 வயதில் எனக்கும் சடச்சியம்மாளுக்கும் திருமணம் நடந்தது.

நான் ஆடு மேய்க்க செல்லும்போது மலை பகுதியில் உள்ள மூலிகை தழைகளை பறித்து சாப்பிடுவேன். அதுதான் என்னை ஆரோக்கியத்துடன் வைத்து இவ்வளவு காலம் உயிரோடு வாழ்வதாக கருதுகிறேன்.

சமீபகாலமாகதான் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் உள்ளது. கம்பு ஊன்றி நடக்கிறேன். மற்றபடி எனக்கு பெரிய அளவில் உடல் நிலை பாதிப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி சடச்சியம்மாளுக்கு சரியாக பேச்சு வரவில்லை. எனவே அவரிடம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியவில்லை.                                          

நன்றி :- மாலைமலர், 26-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.