Saturday, July 27, 2013

சிறுவனைச்.. சீரழித்த குடிவெறியன் ' குற்றத்தில் சமூகத்திற்கும் அரசுக்கும் பொறுப்புண்டு !


மனிதன் மிருகமாகி வருகிறான் என்பதற்கு, லேட்டஸ்ட் உதாரணம்
    
 மதுரை மாவட்​டத்தில் நடந்த சம்பவம். 

டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வன்னிவேலம்​பட்டி கிராமத்தில், நான்கு வயது சிறுவன் முத்துகிருஷ்ணன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டவர்கள் கலங்காமல் இருக்க முடியாது.வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறும் முத்துகிருஷ்ணனின் தாய் லெட்சுமிக்கு நம்மால் எந்த ஆறுதலையும் கூற முடியவில்லை. 
 
அழுகையி​னூடே 22-ம் தேதி அன்று நடந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்​பித்தார். ''எனக்கு ரெண்டு குழந்தைங்க. மூத்தவன் முத்து​கிருஷ்ணன், எப்போதும் துறுதுறுன்னு வாசல்ல விளை​யாடிகிட்டு இருப்பான். ஊருல பொம்பளைங்க எல்லாரும் வேலைக்குப் போனாலும், புள்ளைகளைப் பார்த்துக்​கணும்னு சொல்லி, என்னை வேலைக்குப் போக வேண்டாம்னு என் வீட்டுக்காரர் தடுத்துட்டார். அந்தக் கொலைகாரன் செல்வம் எப்போதாவது இந்தப் பக்கம் வருவான். என் புருஷனோட அண்ணனுக்குப் பழக்கங்கிறதால, என் பையன் அவனை பெரியப்பான்னுதான் கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட்ட புள்ளையை, இப்படி சாகடிச்சுட்டானே பாவி...'' - மேற்கொண்டு பேச முடியாமல் கதறி அழுதார்.


சற்று நேரத்தில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். ''அன்னைக்கு சாயங்காலம் வாசல்ல விளையாடிக்கிட்டு இருந்த பையனைக் காணோம். அம்மாயி வீட்டுக்குப் போயிருப்பான்னு தேடிப்போனா, அங்கேயும் வரலை. கட்டட வேலைக்குப் போயிட்டு வந்த என் வீட்டுக்காரரும், புள்ளையைக் காணோம்னு ஊரெங்கும் தேடுறாரு. அப்ப கம்மாயில குளிச்சிட்டு வந்த செல்வத்துகிட்ட, 'என் மவனை பார்த்தீங்களா?’னு கேட்டேன். 'நான் பார்க்கலையே... நல்லா தேடிப்பாருங்க. குழிக்குள்ள எங்கேயும் விழுந்திருக்கப் போறான்’னு சொல்லிட்டுப் போயிட்டான். ஆனா, தெருக்காரங்க சிலரு, 'உன் மவனை அந்த செல்வம்தான் கூட்டிட்டுப் போனான்’னு உறுதியா சொன்னாங்க. ஊரே சேர்ந்து கேட்டும், அவன் உண்மையை சொல்லலை. அவனும் சேர்ந்து தேடினான். இதுக்கு மேல பொறுக்க முடியாதுனு ஊர்க்காரங்க அவனை அடிச்சுக் கேட்டாங்க. அப்பவும் சொல்லல. ராத்திரியாயிடுச்சு... அப்புறம்தான் போலீஸுல சொன்னோம். அவங்ககிட்டதான் அவன் நடந்ததைச் சொல்லியிருக்கான். என் பச்சைக் கொழுந்தைப் பொதைச்சு வெச்ச இடத்தையும் காட்டினான். ஒண்ணும் தெரியாத என் பையனை குடிவெறியில் சித்ரவதை செஞ்சு, கழுத்தைத் திருகி கொன்னுருக்கானே... படுபாவி, நல்லா இருப்பானா?'' என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார். 

ஊர்க்காரர்கள் நம்மிடம், ''எப்பவும் குடிபோதையில தான் இருப்பான். அன்னைக்கு சாயங்காலம் ஒரு பொம்பளைப் புள்ளைகிட்டே, 'நவ்வாப்பழம் பறிச்சுத் தர்றேன், வா’ன்னு கூப்பிட்​டுருக்கான். அந்தப் புள்ளை ஓடிருச்சு. அப்புறம்தான் முத்துகிருஷ்ணனை பழம் பறிச்சுத் தர்றேன்னு கூட்டிட்டுப் போயிருக்கான். ஏற்கெனவே அவன் மிட்டாயெல்லாம் வாங்கிக் கொடுத்து பழகியி​ருந்ததால, முத்துகிருஷ்ணனும் அவன்கூடப் போயிட்டான். கூட்டிட்டுப் போய் படாதபாடு படுத்தியிருக்கான். கடிச்சுக் குதறியிருக்கான். அழுத பையனை கழுத்தை நெரிச்சுக் கொன்னு கம்மாயில புதைச்சுட்டு, எதுவும் நடக்காத மாதிரி குளிச்சுட்டு ஊருக்குள்ளே வந்தான். அவன் பையனை ஒளிச்சு வெச்சிருக்கான்னுதான் முதல்ல நெனைச்சோம். இப்படிப் பண்ணுவான்னு நெனைக்கலை. அந்த செல்வத்தைத் தூக்குல போடணும். இல்லை, சுட்டுக் கொல்லணும். அவன் திரும்பவும் எந்தக் காலத்திலும் ஊருக்குள்ள வரக் கூடாது'' என்றனர்.
கொலை, சிறார் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற பிரிவுகளில் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
.
மது விற்பனையால் கிடைப்பது கோடிக்கணக்கான வருமானம் மட்டும் அல்ல; இதுபோன்ற மோசமான சம்பவங்களும்தான் என்பதை அரசு எப்போது புரிந்துகொள்ளப்போகிறது?
 -----------------------------------------------------------------------------------------------------------------
- செ.சல்மான், படங்கள்: பா.காளிமுத்து,   ஜூனியர் விகடன், 31-07-2013 
------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

Kindly post a comment.