Tuesday, July 16, 2013

கருப்புப் பண பரிவர்த்தனை : 22 வங்கிகளுக்கு அபராதம் ?

வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை பெறத் தவறியது மற்றும் கருப்புப் பண பரிவர்த்தனை நடைபெற்றது ஆகிய புகார்கள் தொடர்பாக 22 வங்கிகளுக்கு ரூ. 49.5 கோடி அளவிலான அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. 

அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர் குறித்த முறையான விவரங்களைப் பெறாமல் வைப்புத் தொகை பெறுகின்றன என்றும் இதனால், கருப்புப் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றும் இணையதளம் ஒன்று புலனாய்வுச் செய்தி அறிக்கை வெளியிட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ரிசர்வ் வங்கி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை அறிக்கை வெளியானதை தொடர்ந்து, அரசு வங்கிகள் உள்ளிட்ட 22 வங்கிகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புது தில்லியில் இது குறித்து ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பது:

வாடிக்கையாளர் குறித்த விவரம் பெறத் தவறியது, சந்தேகத்துக்கு இடமான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது குறித்த ஒவ்வொரு புகாரையும் தனித் தனியாக, விரிவாக விசாரித்ததில் சில விதிமீறல்கள் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வங்கிகளுக்கு அபராதம் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் விவரம், கருப்பு பண பரிவர்த்தனை குறித்த விதி மீறல், பண பரிமாற்றம் குறித்த முறையான அறிக்கை அளிக்காதது, ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்பிலான தங்க காசு விற்பனை பற்றிய அறிக்கை அளிக்காதது ஆகியவற்றுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, பரோடா வங்கி, ஃபெடரல் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு தலா ரூ. 3 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.

லக்ஷ்மி விலாஸ் வங்கி உள்ளிட்ட 5 வங்கிகளுக்கு தலா ரூ. 2.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. விஜயா வங்கி, யெஸ் வங்கி, ஓரியண்டல் வர்த்தக வங்கி, தனலக்ஷ்மி வங்கி ஆகியவற்றுக்கு தலா ரூ. 2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

கோடக் மஹிந்திரா, டாய்ட்ஷ் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 49.5 கோடியாகும். 

கருப்புப் பண பரிவர்த்தனை நடைபெற்றது உறுதியாகவில்லை என்றபோதிலும் இது பற்றி வருவாய்த் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் நடத்தும் விரிவான விசாரணை முடிந்த பிறகே எதுவும் கூற முடியும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

நன்றி :- தினமணி, 16-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.