Monday, June 24, 2013

வட அமெரிக்கா- மெக்ஸிகோவில் தொன்மையான மயன் நகரம் கண்டுபிடிப்பு !

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மிகவும் தொன்மை வாய்ந்த மயன் நகரத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
54 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நகரம் பிரமிடுகளும், மாளிகைகளும் நிறைந்தவையாக இருந்துள்ளது.

மெக்ஸிகோவின் தென்கிழக்கே வனப்பகுதியில் இந்த நகரம் புதையுண்டு கிடந்துள்ளது.

கி.மு.2600-ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவில் மயன் நாகரிகம் தோன்றியுள்ளது. மயன் மக்கள் கணிதம், வானியல், எழுத்துகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியுள்ளனர். பின்னர் மயன் நாகரிகம் மெதுவாக அழியத் தொடங்கியது.

எனினும் அவர்கள் அமைத்த கட்டடங்கள் இப்போதும் மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் உள்ளன.

மயன் இனத்தவரின் நாள்காட்டி முடிவுற்றதை அடுத்துதான் சமீபத்தில் உலகம் அழிய இருக்கிறது என்ற செய்தி பரவியது நினைவுகூரத்தக்கது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட நகரம் கி.பி.600 முதல் கி.பி.900 ஆண்டுகளுக்கு உள்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இக்காலகட்டத்தில்தான் மயன் நாகரிகம் முற்றிலுமாக அழிந்தது.

பாதி இடிந்த நிலையில் காணப்படும் பிரமிடுகள் 75 அடி உயரமுள்ளதாக இருக்கிறது. விளையாட்டுத் திடல், பலிபீடம், வீடுகள், இறந்தவர்களின் நினைவிடங்கள், கடை வீதிகள் உள்ளிட்டவை அந்த நகரில் இருந்துள்ளன. சிதிலமடைந்த வண்ணம் பூசப்பட்ட சிலைகளும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் தொடர்ந்து அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது. எனவே மயன் நாகரிகம் குறித்து மேலும் பல புதிய தகவல்கள் தெரியவரும் என்று அப்பகுதிக்குச் சென்றுள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.         

நன்றி:- தினமணி, 24-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.