Monday, June 24, 2013

பிரிட்டன் அருங்காட்சியகத்தில் தானாகவே நகரும் சிலை!

பிரிட்டனின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்தில் தானாகவே நகரும் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது 4000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து நாட்டு சிலையாகும். 10 அங்குலம் உள்ள அந்த சிலை எகிப்தில் "மம்மி' புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. சுமார் 80 ஆண்டுகளாக இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.

பொதுமக்கள் பார்வையில் படும்படி நேராக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, 180 டிகிரி சுழன்று பின்பகுதி மட்டும் பார்வையாளர்களுக்கு தெரியும்படி மாறி நின்றது. இது அருங்காட்சிய கண்காணிப்பாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சிலையை மீண்டும் நேராக வைத்தனர். ஆனால் அடுத்த சில நாள்களிலேயே சிலை மீண்டும் பின்புறமாகத் திரும்பிக் கொண்டது.

இதையடுத்து அந்த சிலை இருந்த பகுதியில் "டைம் லேப்ஸ் விடியோ கேமரா' பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இரவு நேரத்தில் அசையாமல் இருக்கும் சிலை, பகல் நேரத்தில் தானாகவே மெதுவாக நகர்ந்து திரும்பிக் கொள்வது தெரியவந்தது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
"மம்மி' முறையில் பதப்படுத்தி பாதுகாக்கப்படும் சடலம் அழிக்கப்பட்டால் அந்த ஆவி அதனுடன் புதைக்கப்படும் சிலையில் புகுந்துவிடும் என்று எகிப்தில் அக்காலத்தில் நம்பப்பட்டது. எனவே இது ஆவியின் வேலையாக இருக்கலாம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அருங்காட்சியகத்துக்கு வருபவர்கள் அங்கும், இங்குமாக நடப்பதால் ஏற்படும் அதிர்வலைகள் மூலம் கூட சிலை திரும்பியிருக்க வாய்ப்பு உண்டு என்று விஞ்ஞான ரீதியாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.

எது எப்படியோ, அந்த சிலையைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அருங்காட்சியகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

நன்றி :- தினமணி, 24-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.