Sunday, June 16, 2013

திருச்சியில், பொட்டலங்களில் மண்பானை சமையல் !

பொதுவாக ஓட்டலில் சாப்பாடு பார்சல் வாங்குவோர் அதிலுள்ள இரண்டு மூன்று கூட்டு, பொரியல், குழம்புகள் என அனைத்தையும் சாப்பிடுவது கிடையாது. பெரும்பாலானோர் அவற்றை விரயம்தான் செய்வார்கள்.

 திருச்சி புத்தூர் திரெளபதியம்மன் கோவில் எதிரே வித்தியாசமாக ஓர் உணவகம் கடந்த 4 மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் என்ன வித்தியாசம்? 

 வீட்டில் சாப்பாடு இருக்கிறது. சாம்பார் மட்டும் வேண்டும் அல்லது கூட்டு, பொரியல் மட்டும் வேண்டும் என்றால் அதனை மட்டும் வாங்கிச் செல்லலாம். 
 
அதுவும் மண்பானைச் சமையலில் மட்டுமே தயாராகும் உணவுகளை.
 தனியார் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றிய மோகன்தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்:

 ""ஏதோ தொழில் செய்கிறோம், வருமானம் வருகிறது என்று இருக்கக் கூடாது. அந்தத் தொழிலில் சமூகத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும். நம்முடைய பாரம்பரிய சமையலையும் மீட்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.

 எனது மனைவி செல்வத்தின் பெயரை சற்றே மாற்றி "செல்லம்மாள் சமையல்' என்ற பெயரில் இந்தக் கடையை நடத்தி வருகிறேன்.
 
சாப்பாடு பாக்கெட் ரூ. 10. தயிர் ரூ. 10. மற்றவை அனைத்தும் ரூ. 7. சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், புளிக்குழம்பு, மோர், வாழைக்காய் கூட்டு, பொரியல், வாழைத் தண்டு பொரியல், முருங்கைக் கீரை கூட்டு,
 மணத்தக்காளி கீரை கூட்டு, பொன்னாங்கண்ணி கீரை கூட்டு, வெண்டைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், சேனைக் கிழங்கு வறுவல், காலிஃபிளவர் கூட்டு, கத்தரிக்காய் கூட்டு என எல்லாமும் கிடைக்கும்.
 
பொட்டலமாக தயாராக இருக்கும் இவற்றில் தேவையானதை மட்டும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
 
தினமும் தேவைக்கேற்ப சமைக்கும் வகையில் மண்பானைகளை மாநிலம் முழுவதும் தேடினேன். முடிவில் தற்போது திருநெல்வேலியில் இருந்து பானைகளை வாங்கி வருகிறேன்.
 
அதிகம் பயன்படுத்துவதால் ஒரு பானை 45 நாள்களுக்குத்தான் வருகிறது. இதற்காக முன்கூட்டியே ஏராளமான பானைகளை வாங்கி இருப்பில் வைத்திருக்கிறேன்'' என்கிறார்.
 
பானை வைத்து சமைக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விறகு அடுப்பு, அதிலிருந்து வரும் புகையை வெளியேற்றும் வகையில் பிரத்யேக வடிவமைப்பில் புகைப் போக்கி என சமையற்கட்டு முற்றிலும் நவீனமாக காட்சியளிக்கிறது.
 
பசும்பாலில் தயிர் தோய்க்கும் இவர், இதற்கென சிறு சிறு மண்சட்டிகளை புதுச்சேரியில் இருந்து வரவழைத்திருக்கிறார்.
 
 ""இன்னும் சில நாள்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, முற்றிலும் இலைகளை மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன். செலவு கூடுதலாக ஆனாலும், ஏற்கெனவே பெண்கள் விடுதி நடத்தி வருவதால் கையைக் கடிக்கவில்லை.
 
இங்கு மண்பானைச் சமையலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மகன் உணவக மேலாண்மை முடித்துவிட்டு, எங்களுடன் வேலை செய்கிறார். இந்தத் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்'' என்றார் அவர்.
 
பகல் உணவு மட்டும் தயாரிக்கப்படும் இந்த உணவகத்தில், காலை வேளையில் பித்தளை டபரா செட்டில் காபி கிடைக்கிறது. காபி டிக்காஷன் போடுவதற்கான அனைத்துப் பாத்திரங்களையும் பித்தளையிலேயே வாங்கி வைத்திருக்கிறார் மோகன்.
 
 - சா. ஜெயப்பிரகாஷ்
 
 படங்கள்: தேனாரமுதன்                                                                                                      

நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 16-06-2013

 

0 comments:

Post a Comment

Kindly post a comment.