Friday, May 10, 2013

இணையத்துக்கு வேலி அவசியம் - சு. வெங்கடேஸ்வரன்


ஒத்த கருத்துகளையும், செயல்பாடுகளையும் உள்ள நண்பர்களை அறிந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து மகிழ்ந்திருக்கும் இடமென்றும், சமூகப் பிணைப்புகளை ஏற்படுத்த வழி செய்கிற இணைய வழி சேவை என்றும் பேஸ்புக், ஆர்குட், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அறியப்படுகின்றன. எனினும், வேண்டியவர்களையும், வேண்டப்படாதவர்களையும் கண்காணிக்க முடியும் என்பதும், மற்றவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளையும், விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற மனிதர்களின் அடிப்படை குணமும்தான் "ஃபேஸ்-புக்' போன்ற சமூக வலைத்தளங்களுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்புக்கு முக்கியக் காரணம்.

உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களில் 8 கோடிப் பேர் போலியான பெயர்களில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் அவற்றை முடக்குவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் காழ்ப்புணர்வுகளின் வடிகால்களாகவும், மன வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்கும் இடமாகவும் இணையதள வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களும் மாறி வருகின்றன.

சமூகத்தில் பிரச்னைகளும், குற்றங்களின் எண்ணிக்கையும் பெருக இணையத்தில் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரமும் ஒரு காரணம். வேண்டாதவர்களை மோசமான முறையில் பழிவாங்கும் கருவியாக இணையத்தைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவை தவிர இணையத்துக்குள் நுழைந்தால் சீரழிவுக்கு வழி வகுக்கும் "சாட்டிங்', "டேட்டிங்' இணைய தளங்களும் போட்டி போட்டு வரவேற்கின்றன.

இணையத்தில் கிடைக்கும் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயதை விட்டுவிடும் அளவுக்கு இதனைப் பயன்படுத்தும் பெருமளவிலான இளம் வயதினர் பக்குவப்பட்டிருக்கவில்லை.

ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் தொடர்பான பொது நல வழக்கு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு சமீபத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம், இந்திய ஒப்பந்தச் சட்டம் ஆகியவற்றின்படி 18 வயதுக்குள்பட்டவர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உறுப்பினராக முடியாது. ஆனால் சிறார்கள் எந்தத் தடையும் இன்றி சமூக வலைத்தளங்களில் இணைய முடிகிறது. இது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பது மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள முக்கியக் கேள்வி.

இந்தியாவில் இணையதளங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்விகளை எழுப்புவது இது முதல்முறையல்ல. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தபின், ஆபாச இணையதளங்களை, முக்கியமாக குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் இதுபோன்ற படங்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டுமென்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இணையதளங்களால் பரவும் ஆபாச படங்கள் முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பாலுணர்வுக் கிளர்ச்சியைத் தூண்டும் ஆபாசப் படங்கள் என்பவை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அரபு நாடுகளிலும், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இத்தகைய படங்கள் சட்டவிரோதமானவை.

ஆனால் இந்தியாவில் ஆபாசப் படங்கள் என்பவை சில கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பாலுணர்வுக் கிளர்ச்சியை உண்டாக்கும் படங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கவும், பார்க்கவும் தடையில்லை! ஆனால் அவற்றை விற்பனை செய்வதும், பகிர்ந்து கொள்வதும், படங்களை எடுப்பதும் குற்றம்.

இந்தியாவில் இணையதளங்கள் மூலம் பரவும் இதுபோன்ற ஆபாசப் படங்களைத் தடுக்க உரிய சட்டங்கள் இல்லை. இணையதளங்களில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என்பது இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் 20 கோடிக்கும் மேலான ஆபாச விடியோக்கள் - சி.டிக்கள் மூலமும் இணையதளங்கள் வழியாகவும் - தங்கு தடையின்றி புழங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் செல்போன்களிலேயே இணையதள வசதி கிடைத்து விட்டபிறகு, ஆபாசப் படங்கள் என்பது எளிதில் கிடைக்கும் அசிங்கமாக மாறிவிட்டது. கொடூரமான பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கு இதுபோன்ற படங்கள் முக்கியத் தூண்டுதலாக அமைகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

பாரம்பரியமும், கலாசார தொன்மையும் நிறைந்த நாடு இந்தியா. பன்முகக் கலாசாரங்களைக் கொண்ட பலதரப்பு மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு என மேலை நாட்டவர்கள் பொறாமைப்பட்ட காலம் உண்டு. ஆனால் இந்நிலை இப்போது மாறி வருகிறது. மேலை நாடுகளுக்கு இணையாக மண முறிவுகளும், பாலியல் வன்முறைகளும் இங்கு அதிகரித்து வருகின்றன.

இத்தகைய கலாசார சீரழிவுக்கு முக்கிய காரணம் என முன்னர் கூறப்பட்டது திரைப்படங்கள் மட்டுமே. ஆனால் அதற்குக் கடிவாளம் போட "சென்சார் போர்டு' என்ற அமைப்பு உள்ளது. இதேபோல தொலைக்காட்சித் தொடர்களையும் அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்படுத்த சட்டத்தில் இடமுண்டு.

ஆனால் இப்போது இளம் தலைமுறையினரை வெகுவாகப் பாதிக்கும் இணையதளம், செல்போன் மூலமான எஸ்எம்எஸ், எம்எம்எஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் வேண்டியது மிகவும் அவசியம்.

மிக அபரிமிதமான இளம் தலைமுறையினரைக் கொண்டிருப்பதால், அவர்களை இத்தகைய சீரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. இதைச் செய்யத் தவறினால், வளமான, வலிமையான பாரதம் என்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லாமல் போய்விடும். மேலை நாடுகளைப் போல இந்தியாவும் சீரழியும். இது தேவையா என்று ஆட்சியாளர்கள்தான் சிந்திக்க வேண்டும்.                   

நன்றி :- தினமணி, 06-05-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.